மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

இந்தியா Vs பாகிஸ்தான்: தொடங்கியது விளம்பரப் போர்!

இந்தியா Vs பாகிஸ்தான்: தொடங்கியது விளம்பரப் போர்!

பாகிஸ்தானின் டிவி ஒன்றில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட தருணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட விளம்பரத்தை உருவாக்கியிருப்பது இந்தியர்கள் பலரிடமும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஏற்பட்டு முடிந்த ட்விட்டர் போரை, இந்த விளம்பரம் மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டபோது, அபிநந்தன் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் வெகுண்டெழுந்தது ட்விட்டர் தளம். பல விதமான விமர்சனங்கள் அங்கே முன்வைக்கப்பட, பாகிஸ்தானியர்களை கேலி செய்யத் தொடங்கினார்கள். சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகமானதும், அபிநந்தன் நன்றாக இருப்பதை உறுதிபடுத்தும் விதமாக பாகிஸ்தான் மீடியாக்கள் ஒரு வீடியோவை வெளியிட்டன. அதில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு ‘நான் அதைப் பற்றிச் சொல்லக்கூடாது’ என்று அபிநந்தன் பதில் சொல்லும் காட்சி இடம்பெற்றது. இந்த உரையாடலின்போது அபிநந்தன் கையில் கப் ஒன்று இருக்கும். தேநீர் அருந்திக்கொண்டே அபிநந்தன் பேசும் காட்சியைக் கண்ட பிறகே, இந்தியா இயல்பாகச் சுவாசிக்கத் தொடங்கியது. இப்போது, அந்த கப்பை அடிப்படையாக வைத்தே, கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி.

அபிநந்தனைப் போலவே மீசை வைத்திருக்கும் ஒரு நபர், ஒரு கோப்பையில் தேநீர் அருந்திக்கொண்டே, கேமராவுக்குப் பின்னாலிருந்து கேள்வி கேட்பவரிடம் ‘நான் அதைப் பற்றி சொல்லக் கூடாது’ என்று சொல்கிறார். கடைசியில், ‘சரி, நீங்கள் கிளம்புங்கள்’ என்று சொன்னதும் அந்த நபர் அங்கிருந்து நகர்கிறார். அப்போது அவரை நிறுத்தி, அவர் கையிலிருக்கும் தேநீர் கோப்பையை வாங்கிக்கொண்டு அனுப்புவது போலவும் காட்சிப்படுத்தி ‘கப்பை வீட்டுக்குக் கொண்டுவருவோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருக்கும் சானல் ஜாஸ் டிவி என்பதால், இப்படியொரு விளம்பரத்தை உருவாக்கியிருக்கின்றனர். இதற்கு, இந்தியர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ‘நீங்கள் எவ்வளவு முயன்றாலும் டீ கப் மட்டும் தான் வெல்ல முடியும்’ என்று பதிலுக்குக் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலையோடு அணுகுபவர்கள், இதற்கு வித்திட்டதே இந்தியாவில் உலகக்கோப்பையை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிக்கான விளம்பரத்தை வெளியிட்டது. அதில், வங்கதேச கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்த ஒருவர், பாகிஸ்தான் ஜெர்சி அணிந்தவரிடம் ‘இது ஏழாவது தடவை’ என்று சொல்கிறார். அதற்கு பாகிஸ்தான் ஜெர்சி அணிந்தவர் ‘முயற்சி பண்ணணும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு அப்பா சொல்லியிருக்கார்’ என்று சொன்னதும், இந்திய ஜெர்சி அணிந்த ஒருவர் ’நான் எப்ப அப்படி சொன்னேன்’ என்று கேட்கிறார். இந்த விளம்பரத்தின் மூலம், வங்கதேசமும் பாகிஸ்தானும் அண்ணன் தம்பி நாடுகள் என்றும், அவர்களுக்கு அப்பா இந்தியா என்றும் வெளிப்படுத்த முற்படுவதால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பாகிஸ்தான் ரசிகர்களைச் சாந்தப்படுத்தவும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குப் பதிலடி கொடுக்கவுமே அபிநந்தனை உள்ளே இழுத்திருக்கிறது ஜாஸ் டிவி. இது முடிந்துபோன இந்தியா - பாகிஸ்தான் Loc பிரச்சினை மற்றும் வரவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி ஆகியவற்றைவிட அனல் மிகுந்த வார்த்தைப் போர்களை ட்விட்டரில் உருவாக்கியிருக்கிறது.


மேலும் படிக்க


பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!


உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon