மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஒரு கொலை, ஒரு தற்கொலை: சிறுத்தைகள் மீது ராமதாஸ் புகார்!

ஒரு கொலை, ஒரு தற்கொலை: சிறுத்தைகள் மீது ராமதாஸ் புகார்!

கடலூர் மாவட்டத்தில் ஒரு கொலை, மற்றும், தற்கொலையால் மீண்டும் சாதிப் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 11) ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டதால் அவமானமடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்தக் கொடூரச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குக் காரணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் என்றும் ராமதாஸ் தன் அறிக்கையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

“கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி பன்னீர், அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார் ஆகிய இருவரும் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவர் மீதும் அங்குள்ள காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

அருகிலுள்ள வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை பிரேம்குமார் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் விக்னேஷ் உதவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை பழிவாங்க திட்டமிட்டனர். அதுமட்டுமின்றி, ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் நீலகண்டன், அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து விட்டதாகக் கூறி, அந்த படத்தையும் காட்டியுள்ளனர். அத்துடன் அவர் மணம் முடிக்கவுள்ள விக்னேஷை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ் அடித்து கொலை செய்யப்பட்டு, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல் தான் விக்னேஷை கொடூரமாக படுகொலை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். நாடக காதல் கும்பலின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது” என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

மேலும், “கடலூர் மாவட்டத்தில் நாடக காதல் கும்பலின் அக்கிரமங்கள் அண்மைக்காலமாக அத்துமீறத் தொடங்கியுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் முன்பும், அவற்றுக்கு செல்லும் சாலைகளிலும் நாடகக் காதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூடி நின்று மாணவிகளையும், இதர பெண்களையும் பாலியல் ரீதியாக சீண்டுவது வாடிக்கையாகி விட்டது. அவர்களை எவரேனும் கண்டித்தால் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொடுக்கும் சட்டவிரோத பாதுகாப்பும், ஓட்டுக்காக நாடக காதல் கும்பலின் அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்கும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் தான் பெண்களுக்கு எதிரான இந்த சூழலுக்கு காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார் ராமதாஸ்.

சில வாரங்களுக்கு முன்பு தான் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக திலகவதி என்ற மாணவியை ஆகாஷ் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மீண்டும் ஒரு கொலை, தற்கொலை நடந்திருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon