மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ஸ்டெர்லைட் வழக்குகள் கடந்து வந்த பாதை...

ஸ்டெர்லைட் வழக்குகள் கடந்து வந்த பாதை...

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தாமிர உருக்காலை தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளில் தான் செய்த தவறுகளுக்காக ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அபராதமாகக் கட்டியது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆனால், அதன் பிறகு 1997க்குப் பிறகு நடந்த விபத்துகளில் வழக்குகள் நடத்தாமலேயே இழப்புகள் மூடிமறைக்கப்பட்டன. தூத்துக்குடி நீதிமன்றத்தில் காவல் துறையால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றவாளிகள் தலைமறைவு என்று இருபது ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வழக்குகளில் இன்னமும் வாய்தா வாங்கப்படுகிறது.

வாயுக்கசிவு

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் 05.07.1997 அருகிலுள்ள நிறுவனத்தின் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் கொடுத்த ஆய்வறிக்கையின்படி, சார் ஆட்சியர் சந்தீப் ஜெயின் உத்தரவின்படி அன்றைய நாளே இரவோடு இரவாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சொக்கலிங்கம், முனைவர் சாஸ்திரி, முனைவர்.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் கந்தபாலாஆகியோரைக் கொண்ட நால்வர் குழு 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டெர்லைட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்தது. பாதிப்பு இருந்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியது.

1996 இறுதியில் ஐதராபாத் ஐஐடி வேதியியல் துறை துணை இயக்குநர் ஏ.ஏ.கான், தேசிய வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் ஜோக்லேகர் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து 1997 ஜனவரியில் தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தனர். பாதிப்புகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட ஆய்வுக் குழு, அவற்றைச் சரிசெய்யப் பரிந்துரைகள் கொடுத்தது.

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். சுற்றுச்சூழல், நீர், நிலம், காற்று கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தடையும் தடை நீக்கமும்

23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையையை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் அமர்வு உத்தரவிட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் தலைமை நீதிபதியான லிபரான் தலைமையிலான அமர்விலிருந்து வழக்கு கீழமை மன்றத்தின் நீதிபதியான அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

நாக்பூர் நீரி நிறுவனம், 1998ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை கொடுத்திருந்தது.

அதே நீரி நிறுவனம் 2003ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வறிக்கை தந்தது.

21.09.2004 அன்று முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய பிரிவுகளுக்கு அனுமதி

07.04.2005இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.04.2005 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே கட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகப் புகார் கூறப்பட்டுவந்த நிலையில் 24.07.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் இந்திய அரசை ஏமாற்றி ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக் கைது செய்யப்பட்டார். வழக்கு நடக்கிறது.

சுங்கத் துறையின் சோதனையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விலை உயர்ந்த உலோகப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. 2010 ஆகஸ்ட் 21 அன்று பதினெட்டுக் கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்டினம், பல்லேடியம் கலந்த உலோகங்கள் வாகனத்துடன் பிடிபட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடக்கிறது.

சுற்றுச்சூழலுக்கும், நிலம், நீர், காற்றுக்கும் மாசு ஏற்படுத்தியதாக 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.

உயர் நீதிமன்றத்தின் தடைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் 02.04.2013 அன்று ஆலையைத் திறக்கும் தீர்ப்பு வெளியானது.

அந்தத் தீர்ப்பில் ”ஸ்டெர்லைட் ஆலை மூலமாக எழும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்கும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கவும் சுற்று வட்டாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும் நூறு கோடி ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் ஆலை நிர்வாகம் வைப்பு நிதியாகக் கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து வரும் வட்டி மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

மீண்டும் வாயுக் கசிவு

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவின்படி 30.03.2013 அன்று நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை மண்டலத்தில் நீதிபதி எம்.சொக்கலிங்கம், பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் கொண்ட அமர்வில் வழக்கு நடைபெற்றது. சில பல காரணங்களால் வழக்கு சென்னை மண்டல அமர்விலிருந்து டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரகுமார் அமர்வில், ஸ்டெர்லைட் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, ‘ஸ்டெர்லைட்டைத் திறக்க நான் ஆணையிடுவேன்’ என்று அவர் வெளிப்படையாகச் சொன்னார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 08.08.2013 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி பகுதிக்கு வரும் உப்போடையில் புதுக்கோட்டை அருகே பாலத்தின் இருபுறங்களிலும் தாமிரக் கசடுகளான ஸ்லாக் கழிவுகள் கொட்டப்பட்டதால், 2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளம் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. 2016 பெப்ரவரி மாதத்தில் சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவிட்டார். ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசுக் கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 09.04.2018 அன்று அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, ஆலையில் உற்பத்தி பணிகள் நடக்கக் கூடாது என்று 12.04.2018இல் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அடுத்த உத்தரவு பிறப்பித்தது. 23.05.2018 அன்று ஆலையை மூடவும், ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கவும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுகளை ஆமோதித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 28.05.2018 அன்று அரசாணை வெளியிட்டார்.

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம், அந்தக் குழுவில் நீதிபதி சந்துருவின் பெயரைப் பரிந்துரைத்து, பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் யாரையும் நியமிக்க கூடாதென்ற ஸ்டெர்லைட் தரப்பின் வாதம் ஏற்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி வசிஷ்டர் பெயரைப் பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்தது. அவர் மறுத்துவிட்டதால், மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அறிவிக்கப்பட்டது.

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு, ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமென்றால் 25 நிபந்தனைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என 20.11.2018 அன்று தனது அறிக்கையில் கூறியது.

ஆலைக்கு எதிராகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஆய்வுக் குழு ஒப்புக்கொண்டது. குறிப்பாக, ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் உண்மைதான் என்றார்கள். இருப்பினும், தருண் அகர்வால் குழுவானது, வேதாந்தா நிறுவனத்துடன் சலுகை மனதுடன் நடந்துகொள்ளுமாறு அறிக்கையில் கூறியது.

நீதிபதி நியமனத்தின் மீது விமர்சனம்

ஆலைக்கு ஆதரவாக அறிக்கை வழங்கிய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் அடுத்த சில நாட்களில் மும்பையில் உள்ள இந்திய அரசின் SAT (securities Appellate Tribunal) என்னும் அமைப்பில் Presiding officer பதவியில் 2.5 லட்சம் சம்பளத்தோடு 5 வருட காலத்திற்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று ஸ்டெர்லைட் எதிர்பாளர்கள் விமர்சனம் செய்தனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி கோயல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். எனவே, மத்திய அரசின் எண்ணத்திற்கு ஏற்பவே தீர்ப்பு வரும் என்பதை ஊகிக்கிறேன் என்று வைகோ குற்றம்சாட்டினார்.

தருண் அகர்வால் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி ஆதர்ஸ்குமார் கோயல், ரகுவேந்திர ரத்தோர், கே.ராமகிருஷ்ணன், இரு சுற்றுச்சூழல் நிபுணர்கள் அடங்கிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஐவர் குழு 15.12.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கொடுத்து தீர்ப்பு சொன்னது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது தற்போதைய நிலையே தொடரலாம் என்று ஆலையத் திறக்க அனுமதி மறுத்து 19.12.2018இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவு போட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழக அரசும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இரண்டு வழக்குகளையும் 08.01.2019 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நாரிமன், நவீன் சின்ஹா அமர்வு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை போட்டது. தமிழக அரசின் கோரிக்கையான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து வழக்கு தொடர்ந்து நடக்கும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது செல்லாது என்றும், வேதாந்தா குழுமத்தினர் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்திக்கொள்ளுமாறும் 18.02.2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என்றும், ஆலையைத் திறக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் 27.03.2019இல் கூறினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் 11.06.2019 அன்று வழக்கில் இருந்து விலகினார். வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றுவருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon