மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

உபி முதல்வர் விமர்சனம்: பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

உபி முதல்வர் விமர்சனம்: பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்து பதிவிட்ட, பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 11) உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண் அமர்ந்து பல்வேறு நிருபர்களிடையே பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். இந்த வீடியோவைத்தான் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் பிரசாந்த்.

இதையடுத்து கடந்த ஜூன் 8 ஆம் தேதி சனிக்கிழமை காலை டெல்லியிலுள்ள மேற்கு வினோத் நகரிலுள்ள பிரசாந்த் வீட்டுக்கு சிலர் வந்து அவரை கூட்டிச் சென்றிருக்கிறார்கள்.

“அவர்கள் வீட்டின் கீழ் பகுதிக்கு வந்து சில நிமிடங்களே இருந்தார்கள். கீழே சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வந்த பிரசாந்த் என்னிடம், ‘உடைமாற்றிக் கொண்டு அவர்களோடு செல்ல வேண்டும்’ என்று சொல்லிவிட்டு அவர்களோடு சென்றுவிட்டார். அதன் பிறகுதான் உத்தரப்பிரதேச போலீஸாரால் என் கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதே எனக்குத் தெரிந்தது” என்று சொல்கிறார் பிரசாந்த்தின் மனைவி அரோரா.

லக்னோவிலுள்ள ஹஸ்ரதக்னி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிக்கிழமை இரவு பிரசாந்த்தின் ட்விட்டர் பதிவால் முதல்வர் யோகியின் இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் கொடுத்ததை அடுத்து சனிக்கிழமை அதிகாலை இந்தக் கைது நடத்தப்பட்டிருகிறது.

தனது கணவர் சட்ட விரோதமாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ளார், அவரை விடுவிக்க வேண்டுமென்று கூறி பிரசாத் கனோஜியாவின் மனைவி உச்ச நீதிமன்ற விடுமுறை அமர்வில் மனு அளித்தார். இதை இன்று (ஜூன் 11) அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் பத்திரிகையாளர் பிரசாந்த்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டதோடு, உத்திரப்பிரதேச போலீஸுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

இன்று நடந்த விசாரணையில் ஆஜரான உத்திரப்பிரதேச அரசு வழக்கறிஞர் பிரசாந்த்தை ஜாமீனில் விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். அப்போது அவர், “ பிரசாந்த்தின் ட்விட்டர் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர் கடவுளுக்கும் மதத்துக்கும் எதிராக நிறைய பதிவுகளை வெளியிட்டுள்ளார். மேலும் பல அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பதிவிட்டுள்ளார். அதனால் அவரை வெளியே விடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இதுபோன்ற வழக்குகளுக்கு கைது செய்து சிறையில் அடைப்பது சரியான செயல் அல்ல. வெளிப்படையான நிர்வாக முறையும் அல்ல. அவர் ட்விட்டரில் எழுதுவது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்துரிமை. அவரது பதிவு வெளியிடப்பட வேண்டியதா இல்லையா என்பதில் வேறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால் அதற்காக கைது செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக பிரசாந்த்தை விடுதலை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon