மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

எண்ணெய் குழாய்: அறிவிப்பின்றி வெளியான அரசிதழ்!

எண்ணெய் குழாய்: அறிவிப்பின்றி வெளியான அரசிதழ்!

கோவை, ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவ்விவகாரத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அரசிதழ் பற்றிய விவரங்கள் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் இருகூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கிடங்கு அமைந்துள்ளது. இக்கிடங்கிலிருந்து பெங்களூருவில் தேவன்கொந்தியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கிடங்கு வரை சுமார் 300 கிலோமீட்டருக்கு எண்ணெய் குழாய் பதிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டம் பற்றிய விவரங்கள் வெளியானபிறகு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவ்விவகாரத்தில் விவசாயிகளின் கருத்தை கேட்காமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பான அரசிதழ் வெளியாகியிருப்பதாக விவசாயிகளுக்கு தெரியவந்துள்ளது.

இவ்விவகாரத்தில் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வந்தபோதிலும், விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே கடந்த மார்ச் மாதமே அரசிதழ் வெளியாகியுள்ளது. அரசிதழ் தொடர்பான விவரங்கள் தற்போதுதான் விவசாயிகளுக்கு தெரியவந்துள்ளது. அந்த அரசிதழில், 21 நாட்களுக்குள் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம் தொடர்பான கருத்துகளை விவசாயிகள் தெரிவிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்டது.

விவசாயிகள் கருத்து கூற முடியாததால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 300 கிலோமீட்டர் தொலைவிற்கு விளைநிலங்கள் வழியாக 70 அடி அகலத்திற்கும் 6 அடி ஆழத்திற்கும் குழாய்களை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையான அறிவிப்பு ஏதுமின்றி அரசிதழ் வெளியானதும், எண்ணெய் குழாய்களை பதிக்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தயாராகி வருவதும் விவசாயிகளிடையே எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon