மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

பூட்டானின் பாசக்காரக் குடும்பம்!

பூட்டானின் பாசக்காரக் குடும்பம்!

பூட்டான் டைரீஸ் 12 – நிவேதிதா லூயிஸ்

என்னென்னவோ பறவைகளின் கீச்சொலியும், வீட்டின் கீழ்ப்பகுதியில் சன்னமான சிரிப்பொலியும் கேட்டபடி வெகுநேரம் விழித்திருந்தேன். மைத்ரேயி ஜன்னலின் திரை விலக்கிக் கதிரவனை விதம் விதமாகச் மொபைலில் சுட்டுக்கொண்டிருந்தாள். இருவரும் அந்தச் சிற்றருவியைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும், வீட்டின் மூத்த மகன் எங்களை வயல்வெளிகளூடே அழைத்துச் சென்றார். அப்போதுதான் கதிர் விட்டிருந்த கோதுமைச் செடிகளைத் தாண்டி வரப்பில் நடந்து சென்றால், கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களில் சிறிய ஓடையும் அதில் ஒரு சிற்றருவியும் எதிர்ப்பட்டன! பிரமிப்பில் கண்கள் விரிய, ஓடைக்கரையில் பூத்திருந்த சிவப்பு ரோஜாக்கள் சூரிய ஒளியில் கண்சிமிட்டுவதைப் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டோம். அங்கங்கே 'ஹாட் ஸ்டோன் பாத்' செய்ய வசதியாக மரக் குளியல் தொட்டிகள், அதில் தண்ணீர் நிரப்ப மூங்கில் குழாய்கள் என்று அந்த இடமே ரம்மியமாக இருந்து.

முந்தைய இரவில் 'ஹாட் ஸ்டோன் பாத்’தைத் தவறவிட்டது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்று புரிய, ஓடைத் தண்ணீருக்குள் கால் வைக்க ஆயத்தமானோம். பெருவிரல் நுனியில் தொடங்கி, முட்டி வரை நனைத்தாயிற்று. சில்லென்ற குளிர் நீர் கால் சுழித்து ஓட, முகம் தொட்டு சூரியக் கதிர்கள் விளையாட, அருகே செர்ரி மரம் அதன் சிறு இலைகளைக் காற்றில் அசைத்தபடி சலசலக்க, ஓடை இரு கைகள் நீட்டித் தாயைப் போல வரவேற்கிறது. "குளித்துவிடுகிறேனே... ப்ளீஸ்?" என்ற கேள்விக்கு, நெஞ்சுப் பிடிப்பு வரும், கடும் குளிரான நீர், பக்கத்தில் மருத்துவமனைகூட இல்லை என்று எச்சரித்தார் டென்சின்.

அங்கிருந்து வாட்ஸ் அப் வீடியோ காலில், உறங்கிக்கொண்டிருந்த கணவரை அழைத்துக் குதூகலித்து ('இங்க இப்ப மணி என்ன தெரியுமா? கிர்ர்ர்ர்ர்ர்!' என்ற கோபத்துக்கு ஹிஹி சொல்லிவிட்டு) ஓடையை விட்டு வெளியேறுகிறேன். "நீங்கள் ஏன் ஓடையின் பக்கமே வரவில்லை?" என்று டென்சினிடம் கேட்டதும், "நான் ஹார்ட் பேஷன்ட்" என்று குண்டைத் தூக்கிப் போட்டார். 40 வயதுக்குள் என்ன இந்த மனிதர் இதய நோயாளி என்று சொல்கிறாரே என்று துணுக்குற்றுப் பார்க்கிறோம். "உங்கள் ஊரின் மருத்துவமனைதான் என் உயிரைக் காப்பாற்றியது, தெரியுமா?" என்று அவர் கேட்க, ஆச்சரியத்துடன் பார்த்தோம்.

அன்னை மீட்டுத் தந்த உயிர்!

"சிறு வயதில் திடீரென மூச்சுக் குழாய் அடைப்பு என்று இங்கே மருத்துவமனையில் அம்மா என்னை அழைத்துச் சென்று காட்டினார்கள். திம்பு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்ப, இதய வால்வு ஒன்றில் கசிவு இருக்கவே, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று என்னை இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தினார்களாம். அம்மாவிடம் வேலூர் சி.எம்.சி (ஐடா ஸ்கடர் தொடங்கிய நூறாண்டு கடந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) மருத்துவமனை பற்றி யாரோ சொல்ல, ஏதோ தைரியத்தில் என்னைத் தூக்கிக்கொண்டு கொல்கத்தாவை அடைந்து, அங்கிருந்து ரயிலேறிச் சென்னை வந்துவிட்டார். வேலூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, என் உடல் தேறும்வரை சில மாதங்கள் தனியாகவே என்னுடன் இருந்து சமாளித்தார்."

"பூட்டானிய சாங்கா மொழி தவிர வேறு மொழி அம்மாவுக்குத் தெரியாது! ஆங்கிலம் இப்போதுதான் கற்கத் தொடங்கியிருக்கிறார். மொழி, இடம் எதுவும் தெரியாத ஒரு புது நாட்டுக்குப் பச்சிளம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனியே இந்த மலைப் பகுதிப் பெண் வந்திருந்தது ஆச்சரியம்தான். அம்மாதான் என் உயிர். இந்த உயிர் அவர் தந்தது. அதனால்தான் சிறு இடைவெளி கிடைத்தால்கூட இங்கு ஓடி வந்துவிடுகிறேன். இங்கே நீங்கள் பார்க்கும் மொத்த நிலத்தையும் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் நிர்வகித்து, உழவு செய்து, பொருளீட்டி, எங்களைப் படிக்கவைத்து, தன் வாழ்க்கையைத் தனியே இந்த மலைகளில் வாழ்ந்துவிட்டவர் அம்மா " என்று சொல்லி முடித்தார்.

நெகிழவைத்த அன்பு

காலை உணவு மீண்டும் ஒரு பெரும் விருந்து போல அடுக்கப்பட்டு இருந்தது. இப்போது ஹாங்காங் ஓவியர்களும் எங்களுடன் சேர்ந்துகொள்ள, அந்த திறந்த கிச்சனில் பத்து பேர் சுற்றி அமர்ந்து பேசிச் சிரித்து உணவருந்தினோம். ஓம் வாங்மோவின் கண்கள் ஒவ்வொருவர் தட்டையும் மாறிமாறி அலசிக்கொண்டிருந்தது. காலியாகக் காலியாக உணவு நிரப்பப்பட்டபடி இருந்தது. இந்த உபசரிப்பை விட்டுவிட்டுக் கிளம்பப்போகிறோமே என்று மனம் கனத்தது.

மூட்டை முடிச்சுகளைக் காரில் ஏற்றிவிட்டு டிரைவர் காத்திருக்க, மொத்தக் குடும்பமும் எங்களை வழியனுப்ப வந்து நின்றது. "மீண்டும் வா மகளே" என்று சாங்காவில் அந்தத் தாய் சொல்ல, மகன் மொழிபெயர்க்கிறார். இரு கைகளையும் நீட்டி கதகதப்பான அணைப்புக்குள் நம்மைச் சிறைபிடிக்கிறார் ஓம். அந்த அம்மாவும் மகனும் கட்டியணைக்க, அதையும் கேமராவில் சிறைப்பிடித்துக் கொண்டேன்.

கார் மீண்டும் தன் குதியாட்டத்தைத் தொடர்ந்தது. ரின்ஜின் தன் தம்பியை இறக்கிவிட்டு, எங்களுடன் பயணித்தார். போகும்போது வண்டியை நிறுத்தவில்லை, இப்போதாவது எனக்கு ரோடோடென்டிரான் மலர்களை அருகில் நின்று புகைப்படமெடுக்க வண்டியை நிறுத்த வேண்டும் என்று புலம்பியபடி வந்தேன். ஒரு வழியாக மலர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்டுபிடித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பின் டோச்சுலா கணவாயை அடைந்தோம்.

கடல் மட்டத்திலிருந்து 3,100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது டோச்சுலா கணவாய். இங்கிருந்து பூட்டானின் உயரமான மலை முகடான கங்கார் புன்சமைக் காணலாம். சைப்ரஸ் மரங்களும், மக்னோலியா மரங்களுமாய் கண்ணைப் பறிக்கும் பசுமையுடன் இருக்கிறது டோச்சுலா. ஆங்காங்கே ரோடோடென்டிரான் செடிகள் நடப்பட்டிருக்க, அவற்றில் கண்கொள்ளாத பூக்கள்!

பூட்டானுக்குச் செல்லும் பயணிகள் நாய்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் கூட்டமாகத் திரிந்த நாய்கள் புல்வெளியில் பிக்னிக் கூடைகளுடன் அமர்ந்திருந்த பெண்கள் குழு ஒன்றைத் துரத்தத் தொடங்கின. நாம் அவர்களைவிட தைரியசாலிகள் என்பதால், வேகமாக ஓடி வண்டிக்குள் ஒளிந்துகொண்டோம்.

வெற்றிச் சின்னங்கள்

டோச்சுலாவின் ஸ்பெஷல் அதன் 108 சோர்டன்கள். துருக் வாங்க்யால் காங் சாங் சோர்டன்கள் என்று அழைக்கப்படும் இவற்றை, வெற்றி சோர்டன்கள் என்றும் அழைக்கிறார்கள் பூட்டான் மக்கள். 2003ஆம் ஆண்டு இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பூட்டானுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், 30 கேம்ப்கள் அமைத்து இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலப் பகுதி மீது திடீர்த் தாக்குதல் நடத்த, அதை எதிர்த்து நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் பூட்டானிய வீரர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். மன்னர் ஜிக்மே சிங்க்யே வாங்க்சுக் உத்தரவின் பேரில் இந்த 30 கேம்ப்களும் அழிக்கப்பட்டன. இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு இந்த சோர்டன்கள் கட்டப்பட்டன. மூன்று அடுக்குகளாக இந்த சோர்டன்கள் உள்ளன. இதன் அருகிலேயே துருக் வாங்கியால் லக்காங் கோயிலும் பூட்டானில் மன்னராட்சி தொடங்கிய நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

திம்புவில் அன்று மாலைக்குள் ஒன்றிரண்டு இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்ததால், பயணத்தைத் தொடர்ந்தோம். வழியெங்கும் சிவப்பு மிளகாய், ஆஸ்பராகஸ் துளிர்கள், யாக் சீஸ் விற்கும் கடைகள் வரிசை கட்டின. திம்பு நகரின் கிளாக் டவர் பகுதியைத் தாண்டிச் செல்கையில் பூட்டானின் ஒரே டிராஃபிக் சிக்னலைக் கண்டோம். நம் ஊர் ஆட்டோமாட்டிக் சிக்னல்போல அல்லாமல், டிராஃபிக் போலீஸ் ஒருவர் கூண்டில் ஏறி நின்று கையசைத்துப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்.

மதிய உணவுக்கு நோர்சின் லம் பகுதியில் உள்ள சுலா என்ற இந்திய உணவகத்தை அடைந்தோம். கையில் இருந்த மொத்தப் பணமும் சுவாகா ஆகியிருந்தது. மீதி இருந்தது 3,000 ரூபாய் மட்டுமே. இதைக் கொண்டு ஷாப்பிங் செய்ய வேண்டும், ஊருக்குத் திரும்பும் வரை சாப்பிட வேண்டும்! மெனுவில் உள்ளதிலேயே விலை குறைவான சப்பாத்தியை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் கலவரத்துடன் அடுத்த இடம் நோக்கி பயணப்பட்டோம்…

(பயணத்தின் பதிவுகள் வரும் வெள்ளியன்று தொடரும்)

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

(கட்டுரையாளர் நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது ‘அவள் விகடன்’ இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதி வருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.)


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon