மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

சீமானின் அரசியல்: தமிழ் தேசியமா, பாசிசமா?

சீமானின் அரசியல்:  தமிழ் தேசியமா, பாசிசமா?

சேது ராமலிங்கம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. 16,47,185 வாக்குகளைப் பெற்று ஆறு இடங்களில் மூன்றாவது இடத்திலும் 26 இடங்களில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 2016இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 1.7 விழுக்காடு. தற்போது 3.89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதாவது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி ஆரோக்கியமானதா அல்லது எதிர்மறையானதா என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன.

இந்த விவாதத்தில் இரண்டு போக்குகள் காணப்படுகின்றன. நாம் தமிழர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக்கூடப் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக, தேதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தயாராக இல்லை. நாம் தமிழர் கட்சியை அபாயகரமான பாசிசக் கட்சியாகவும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். உண்மையில் நாம் தமிழர் கட்சி பாசிசத் தன்மையுடன் வளர்ந்து வருகிறதா?

சீமானின் பின்னணி

சிவகங்கையிலுள்ள அரணையூரில் எளிய விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சீமான். கல்லூரிப் படிப்பை முடித்து இயக்குநராகும் கனவுகளோடு சென்னைக்கு வந்தார். நடிகர் பிரபுவின் பரிந்துரையின் பேரில் 1995இல் பாஞ்சாலக்குறிச்சி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் வரிசையாகச் சில திரைப்படங்களை இயக்கிய அவர் பெரியாரியத்தில் ஆர்வம் கொண்டவராக, தீவிரக் கடவுள் மறுப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் திராவிடக் கட்சி மேடைகளில் இந்துக் கடவுள்களை விமர்சித்தும் பகடி செய்தும் பேசிவந்தார்.

நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்குவதற்கு முன்பாகவே 1958இல் நாம் தமிழர் கட்சியானது தினத்தந்தியின் நிறுவனரான ஆதித்தனாரால் தொடங்கப்பட்டிருந்தது. தமிழ் மொழி, தமிழர் உரிமைகள், தனித்தமிழ்நாடு போன்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் அவற்றில் தமிழ்ப்பற்றாளரான ஆதித்தனார் தீவிர ஆர்வம் காட்டினார். பின்னர் 1960களின் தொடக்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது. அப்போது திமுகவில் இணைந்த ஆதித்தனார் 1967இல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. ஒருகட்டத்தில் அவை முழுமையாக நின்று போயின.

நாம் தமிழர் கட்சி இரண்டாவது முறையாக சீமானால் தொடங்கப்பட்டது. திராவிடர் கழக மேடைகளில் பேசிவந்த அவர் ஈழப் பிரச்சினையில் தீவிரமாக ஆர்வம்காட்டி வந்தார். போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். தமிழக மீனவர்களைச் சிங்களவர்கள் அடித்தால் தமிழகத்தில் படித்துவரும் சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம் என்று பேசியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னர் தமிழ் தேசியம் குறித்துக் கவனம் செலுத்த தொடங்கினார். அதுவரை ஈழ அரசியல் மட்டுமே பேசிவந்த சீமான் தமிழகத்திலுள்ள பிரச்சினைகளைப் பேசத் தொடங்கினார்.

2009இல் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாற்றப்பட்டதாக அறிவித்தார்.

இனத் தூய்மைவாதம் என்ற பாசிச அரசியல்

தமிழகத்தைத் தமிழனே ஆள வேண்டும் என்பதையே முதன்மை நோக்கமாகத் தனது கொள்கையில் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி தமிழன் என்று யாரைச் சொல்கிறது? பிற மொழி பேசுபவருடன் எந்தவித (குருதிக்) கலப்புமில்லாத பூர்வீகத் தமிழர்கள் அதாவது மண்ணின் மைந்தர்களென அது சில சாதிகளைப் பட்டியலிடுகிறது. இது இனத் தூய்மைவாதம் என்றழைக்கப்படுகிறது.

சீமானுக்கு முன்னதாகவே இக்கோட்பாட்டுக்கான தந்தைமார்கள் உள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னதாக பெங்களூர் குணா என்ற தமிழறிஞர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலை எழுதினார். அந்த நூலானது தமிழகத்தில் பூர்வீகமாக வசித்துவருபவர்கள், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆகியோரையே தமிழர்கள் என்று வரையறுத்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வருபவர்களை வந்தேறிகள் என்று அழைத்தது. இந்த வரிசையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வடுகர்களே திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர். இவர்களின் திராவிட இயக்கங்களே தமிழின உணர்வை மழுங்கடித்துத் தமிழின விடுதலையைப் பெறவிடாமல் திசைதிருப்பிவிட்டன. இவர்கள் வந்தேறிகள், தமிழின மீட்சிக்கு எதிரிகள் என்று குணா விமர்சித்திருப்பார். உண்மையான தமிழர்கள் என்று சில சாதிகளை மட்டும் பட்டியலிட்டிருப்பார். அவற்றைத் தவிர மற்ற சாதிகள், குறிப்பாக வணிக சாதிகள் தொடங்கிக் கடைநிலையிலுள்ள தெலுங்கு பேசும் அருந்ததியர்வரை வந்தேறிகள் என்று கூறியிருப்பார்.

குணாவின் அரசியல் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இனத் தூய்மைவாதமாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் முன்னேற்றத்திற்காகவும் தங்களது வாழ்வையே அர்ப்பணித்த பெரியார் உள்ளிட்ட அனைத்து திராவிடத் தலைவர்களையும் வந்தேறிகள் என்றும் எதிரிகள் என்றும் அவதூறு செய்வது வெறுப்பு அரசியலாகும். மொழி, மதம், இனம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி, ஒதுக்கி, செய்யப்படும் அரசியல்தான் பாசிச அரசியல். குணாவின் வாதத்தின் அடிப்படை அதுதான். பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களோடு ஒன்று கலந்துவிட்டவர்களையும் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களையும் தமிழர்கள் அல்லர் என்றும் தமிழ்ச்சாதிகள் அல்ல என்றும் முத்திரை குத்துவது இன வெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசம்.

சீமானின் இனத் தூய்மைவாதமும் முரண்பாடுகளும்

குணாவின் இனத் தூய்மைவாத கோட்பாடு கடுமையான எதிர்ப்புக்குள்ளாகிப் படிப்படியாக முடங்கிப் போனது. முன்னதாக, மகாராஷ்டிரத்தில் பால் தாக்கரே பூர்வீக குடிமக்கள் கோட்பாட்டை முன்வைத்து மும்பைக்குப் பிழைப்புத் தேடிக் குடியேறியவர்களை வந்தேறிகள் என்று கூறினார். அவருடைய சிவசேனா அமைப்பினர் தமிழர்களை அடித்து விரட்டத் தொடங்கினர். தமிழர்கள் பதிலடி கொடுத்ததால் பிரச்சினை அடங்கியது. தற்போது சீமான் அதே இனத் தூய்மைவாதக் கோட்பாட்டைக் கையில் எடுத்துள்ளார். சில சாதிகளை மட்டும் தமிழ்ச் சாதிகள் என்று வரையறுத்துள்ளார். இதன்படி தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் பிற மொழி பேசுபவர்கள் வந்தேறிகள். உருது பேசும் முஸ்லிம்களும் இதில் உள்ளடங்குவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழக மேடைகளில் பேசும்போது இந்து கடவுள்களைக் கடுமையான முறையில் தாக்கிவந்தார். பார்வதி தான் குளிக்கும்போது காவலுக்கு வைத்த விநாயகரின் தலையை வெட்டி எறிந்த காமக் கொடூரன்தான் சிவன் என்று ஒருமுறை பேசினார். சில நாட்களிலேயே சிவபெருமான் எனது முப்பாட்டனார் என்றார். பழநிக்குச் சென்று பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு முருகனுக்குக் காவடி எடுத்தார். முருகன் எனது பாட்டனார் என்றார்.

இது குறித்துப் பத்திரிகையாளர் கேள்வி கேட்டதற்கு, தமிழ்க் கடவுள்களை உயிர்ப்பிப்பதன் மூலம் தமிழனின் தொன்மையை மீட்கப்போவதாகக் கூறினார். அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைச் சுட்டிக்காட்டியபோது கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை என்பதெல்லாம் வேறு என்றும் இது வேறு என்றும் விளக்கமளித்தார். தமிழ்க் கடவுள்களை மீட்கும் நோக்கத்துடன் தமிழம் என்ற மதம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இந்துத்துவ அரசியலுக்கு ராமர் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு முருகன் என்றும் கூச்சமில்லாமல் அறிவித்தார். இது நாம் தமிழர் கட்சியின் தமிழின மீட்சித் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியிருந்தார்.

பொய்களும் சவடால்களும்

இனத் தூய்மைவாதமும் முரண்களும் ஒருபுறம் இருக்க, சீமான் அளவுக்குப் பொய் பேசும் நபரைப் பார்ப்பது கடினம். அவர் கூறிய பொய்கள் ஏராளம். ஓரிரு பொய்களை இங்கு பார்ப்போம்.

ஆமைக்கறி கதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர் (உலகிலேயே இல்லாத) ரஷ்யத் துப்பாக்கி ஏகே 74இல் (இவ்விடத்தில் வடிவேலுவின் காமெடியான பிகே 47 நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது) பயிற்சி எடுத்த கதை அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கொளத்தூர் மணிதான் சீமானை இலங்கைக்கு அழைத்து சென்று பிரபாகரனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சில நிமிடங்களே நீடித்த அந்தச் சந்திப்பில் பிரபாகரனுடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இத்தகவலை கொளத்தூர் மணி, வைகோ, சுபவீ ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், சீமான் மேடையில் பேசும்போது பிரபாகரன் தனக்கு ஆமைக்கறி விருந்தளித்து ஏகே 74 இயக்கப் பயிற்சி அளித்ததாகவும் பேசினார். இந்தப் பொய் சமூக ஊடகத்தில் அம்பலமானது. திராவிட இயக்கத் தலைவர்களும் அம்பலப்படுத்தினர்.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் ஒருமுறை சீமான் இப்படிப் பேசினார்: “நானோ, ஐயா ராமதாஸோ, அண்ணன் திருமாவளவனோ முதலமைச்சராக இருந்திருந்தால் இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது! மலையாளி மலையாள மண்ணையும், கன்னடன் கன்னட மண்ணையும், தெலுங்கன் தெலுங்கு மண்ணையும் ஆள்வதைப் போல, ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தும் துணிவே இந்திய அரசுக்கு வந்திருக்காது. அப்படி நடத்த முற்பட்டிருந்தால் இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருந்திருக்காது!” என்று கூறினார். ஒரு மாநில முதல்வர் என்றால் யார், அவருடைய அதிகார வரம்புகள் என்ன என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இப்படியெல்லாம் அவர் பேசுவதையும் அவரது தம்பிகள் கைதட்டி ரசிக்கின்றனர்.

இப்படிப்பட்ட சவடால்களில் ஒன்றை முதன்மைக் கொள்கையாக எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார். ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், எழுத்தறிவு இல்லாதவர்களுக்கும் அரசு வேலை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

எழுவர் விடுதலை குறித்துப் பேசும்போது, தான் ஆட்சிக்கு வந்தால் ஒருநாள் அதிகாலை 3.30 மணிக்குச் சிறைச்சாலைக்குச் சென்று அவரே சிறைக்கதவைத் திறந்துவிடுவாராம். 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடுபவர்களையும் விடுவிப்பேன் என்றும் பேசியுள்ளார்.

சாதி ஒழிப்பு: நூதன மோசடி

சாதி ஒழிப்புக்கு அவர் வைக்கும் தீர்வும் ஒருவகை ஏமாற்று வேலைதான். ஒடுக்கும் சாதிகளையும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளையும் இணைப்பதற்கு மொழி உணர்வும் தமிழன் என்ற உணர்வும் போதுமானது என்கிறார். ஆனால், இதுவரை அவருடைய கட்சி உட்பட எந்தத் தமிழ் தேசிய இயக்கங்கள், கட்சிகள் மத்தியில் அப்படி ஓர் இணைப்பு வரவில்லை.

பொன்பரப்பி தலித் மக்கள் தாக்கப்பட்டபோது அந்தத் தாக்குதலை நடத்தியவர்களை நேரடியாகக் கண்டிக்காமல் சாதிய சக்திகள் என்று பொத்தாம்பொதுவாக அறிக்கை வெளியிட்டார்.

இன்னொரு பக்கம் தேவர் குரு பூஜையின்போது பசும்பொன்னுக்குச் சென்று தேவரைப் புகழ்ந்து பேசுவார். இமானுவேலின் குருபூஜையின்போது இமானுவேலையும் புகழ்ந்து பேசுவார். தமிழின ஒற்றுமை பேசும் சீமான், தேவர் நினைவிடத்தில் இமானுவேலை ஏன் பேசுவதில்லை என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.

சாதிய உணர்வை விட்டொழிக்காமல் தமிழ் தேசிய உணர்வு என்பது கானல் நீரே என்றும் எந்த தலித் அல்லாத தமிழர் வீட்டில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.இரஞ்சித்தை ஒருமையில் அழைத்துச் சாடினார் சீமான். திராவிட இயக்கத் தலைவர்கள் ஸ்டாலின் உட்பட பலரையும் ஒருமையில் அழைப்பது, அநாகரீகமான முறையில் திட்டுவது எனச் சீரழிந்த பண்பாட்டையும் பரப்பிவருகிறார்.

தமிழகத்தில் பலவிதமான அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. அது ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், இனத் தூய்மைவாதம் பேசி, சர்வாதிகாரப் போக்கோடு கட்சியை நடத்திவரும் சீமான் போன்றவர்கள் ஜனநாயக உணர்வுக்கு எதிரான போக்கை முன்னெடுக்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பு தரும் வாய்ப்பையும் பாதுகாப்பையும் பயன்படுத்திக்கொண்டு அவர் இதைச் செய்வதுதான் பெரிய நகைமுரண்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் உயிருக்கே ஆபத்து. ஜனநாயகம் என்னும் அமைப்பைப் பீடிக்கும் புற்றுநோய்தான் இனத் தூய்மைவாத அரசியல் என்பதைத் தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதாரங்கள்:

1. புதிய தலைமுறை, நியூஸ் 18 ஆகியவற்றுக்கு அளித்த சீமான் பேட்டிகள்.

2. நாம் தமிழர் கட்சியின் இணைய தளம்

3. You tubeஇல் உள்ள அவருடைய பேச்சுகளின் வீடியோக்கள்

4. திராவிடத்தால் வீழ்ந்தோம்

5. United Nation's briefing on ethnic cleansing and xenophobia


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon