மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. மெசேஜ் டைப்பிங் ஆகிக் கொண்டிருந்தது.

“ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரையிலிருந்து புறப்பட்ட கலகக்குரல் தமிழகம் முழுவதும் பரவலான அதிர்வலைகளை அதிமுகவுக்குள்ளும், அரசு வட்டாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது. ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்த இந்தக் குரல், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களாலும் எதிரொலிக்கப்பட்டு வருகிறது.

பொதுவெளியில் வெளிப்படையாக எந்த கருத்து மோதலும் வேண்டாம் என்று அறிக்கை விட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் வரும் 12ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.செய்தித் தொடர்பாளர்கள் வரை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்ளும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கடுமையான கருத்துக்களையும், வாதங்களையும் முன்வைக்கக் கூடும் என்பதே இப்போதைய நிலைமை.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தனக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படவில்லை என்றால் டெல்டாவிலிருந்து கரூர் வரைக்கும் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் தன் பலத்தை காட்டப்போவதாக எச்சரித்திருந்தார். 2016 தேர்தலில் தன்னால் சீட் அளிக்கப்பட்டு ஜெயித்த எம்.எல்.ஏ.க்களோடு இப்போதும் அவர் பேசி வருகிறார்.

ராஜன் செல்லப்பா பேட்டிக்குப் பிறகு அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலரும் எடப்பாடியை சந்தித்தும், சந்திக்காமலும் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறப்படுவதற்கு முன்பு சென்னையில் அவரை சந்தித்திருக்கிறார் சட்ட அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம். அவரோடு முன்னாள் எம்பியும் மாவட்டச் செயலாளருமான அருண்மொழித்தேவன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் எடப்பாடியை சந்தித்தனர்.

அப்போது சி.வி சண்முகம் எடப்பாடியிடம், ‘கவுண்டருக்கும், முக்குலத்தோருக்கும்தான் இந்த ஆட்சியில் அதிகப் பதவிகளும் பலன்களும் போய் சேருது. தமிழ்நாட்டின் முக்கியமான பெரிய சமுதாயமான வன்னிய சமுதாயத்தை எப்போ மதிக்க போறீங்க? அமைச்சரவைமாற்றம் நடக்கும் பட்சத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு துணை முதல்வர் பதவி தரணும்’ என்று அழுத்தமாக கூறியிருக்கிறார் சி.வி சண்முகம். அதைக் கேட்டு அதிர்ந்து போன எடப்பாடி. ‘இப்ப நான் சேலம் கெளம்பிகிட்டிருக்கேன். வந்து பேசிக்கலாம்’ என்று சொல்லி சி.வி சண்முகத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். தன் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சி.வி. சண்முகம். ஆனால் இது பற்றியும் எடப்பாடி இன்னும் முடிவு எடுக்காத நிலையில் அடுத்த அழுத்தத்தை எடப்பாடிக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார் சண்முகம்.

சி.வி சண்முகம் எடப்பாடியை சந்தித்த தகவலறிந்து ஒபிஎஸ் ஆதரவாளரான கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் எடப்பாடியைத் தொடர்புகொண்டிருக்கிறார். ‘அதிமுகவுல வன்னியர் சமுதாயப் பிரமுகர்கள்ல நான் தான் சீனியர். வன்னிய சமுதாயத்துக்கு என்ன நல்லது செய்யுறதா இருந்தாலும் அதை எனக்கே செய்யணும்’ என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

வட மாவட்டங்களில் இப்படி என்றால் பன்னீருக்கு ஆதரவாக தென்மாவட்ட எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து தர்மயுத்தம் 2. 0 வுக்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார். சில வாரங்களாக ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக வெளிக்காட்டிக் கொண்டு வரும் உதயகுமார் தற்போது எடப்பாடிக்கு சில தகவல்களைக் கொண்டு போயிருக்கிறார்.

‘ எங்க அண்ணன் (பன்னீர்) மகன் ரவீந்திரநாத் தேர்தல் மூலம் அதிமுகவுக்கு கிடைத்த ஒரே ஒரு எம்பி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. இதை தனிப்பட்ட உதயகுமார் சொல்றதா நினைச்சுக்காதீங்க. இப்போ என் பின்னாடியே 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. அவங்க குரலா நான் இதை கேக்குறேன்’ என்று எடப்பாடியிடம் கூறியிருக்கிறார் உதயகுமார்.

அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று அறிவிக்கப்பட்ட பிறகு இன்று மதுரையில் ராஜன் செல்லப்பா தனிப்பட்ட முறையில் ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டி தன் ஆதரவாளர்களுடன் விவாதித்திருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மதுரை நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்படி பல மா.செக்களும் ஒவ்வொரு முறையில் பன்னிரண்டாம் தேதி ஆலோசனைக் கூட்டம் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் இடம் பெறலாம் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. பன்னீர்செல்வம், எடப்பாடி தத்தமது அணிகளைக் கூர்மைப்படுத்தும் வேலைகளை ஒருபக்கம் செய்துகொண்டிருக்க சி.வி.சண்முகம், வைத்திலிங்கம் போன்றவர்கள் தனித்து இயங்கி இந்தச் சூழலில் தங்களுக்கு ஆதாயம் தேட முயலும் திட்டங்களையும் கச்சிதமாக வகுத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அதிமுகவின் தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்குள் கூடிப் பேசிவருகின்றனர். இந்த ஆலோசனைகள் எல்லாம் 12 ஆம் தேதி கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலமாக மாறி ஆட்சியிலும் கட்சியிலும் முக்கியத்துவம் தேடும் வகையில் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதே இப்போதைய அதிமுகவின் வானிலை நிலவரம்” என்ற மெசேஜை டைப் செய்து முடித்து செண்ட் கொடுத்தது.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

அடுத்ததுchevronRight icon