மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

நகைச்சுவைக்கு இரங்கற் பா பாடும் பிரபலங்கள்!

நகைச்சுவைக்கு இரங்கற் பா பாடும் பிரபலங்கள்!

கிரேசி மோகன் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கமல்ஹாசன்

நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம், அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள், ‘லெளகீகம் பழகிக்கிறேன் பேர்வழி’ என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

‘கிரேசி’ என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் ‘நகைச்சுவை ஞானி’. அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு, மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை.

பல்வேறு தருணங்களில், சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாகத் தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.

அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜியுடன் இணைந்து, நண்பர் மோகனின் நெற்றியில் கைவைத்துப் பிரியாவிடை கொடுத்தோம். நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன?

மோகனின் நகைச்சுவை, அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம், ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள, அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.

ஸ்டாலின்

திரையுல கதை - வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் பணியாற்றி, பல மேடை நாடகங்களை இயக்கி, நடித்த கிரேசி மோகன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிப்படையில் பொறியாளரான அவர், அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை - வசனகர்த்தாவாக விளங்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்த கதை, வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

வைரமுத்து

கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது.

ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது.

அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.

சித்தார்த்

கிரேசி மோகன் மறைந்துவிட்டார். சினிமாவுக்கு, நாடகத்துக்கு, சிரிப்புக்கு, வாழ்க்கைக்கு ஒரு வருத்தமான நாள். அவரைப்போல இன்னொருவர் என்றும் வரமுடியாது. அவரது ஆன்மாவுக்கு என் பிரார்த்தனைகள். குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நம் தமிழ் உணர்வின் மிகப்பெரிய அங்கம் அவர்.

பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். அவரின் இழப்பு, மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவைத் தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.

தமிழிசை செளந்தரராஜன்

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கிரேசி மோகன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon