மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

பிரியா விடை பெற்றார் யுவராஜ் சிங்

பிரியா விடை பெற்றார் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்த யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 10) அறிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலக் கோப்பையையும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையையும் இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். 2000ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய அவர், முதல் போட்டியிலேயே 84 ரன்கள் குவித்ததோடு, ஃபீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 2011 உலகக் கோப்பை தொடரில், 362 ரன்கள் குவித்து, 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்தார். அத்தொடரில் 4 ’மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதுகளை வென்றதோடு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். சமீப காலமாகவே போதிய ஃபார்ம் இல்லாமல் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அவர் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்கப் பேசிய யுவராஜ் சிங், “கிரிக்கெட் எனக்கு அதிகமாகக் கற்றுக் கொடுத்துள்ளது. துவண்டு விழாமல் போராடவும் கற்றுக்கொடுத்தது. எப்போதெல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கிச் செல்லவும் ஊக்கமளித்தது கிரிக்கெட்தான். இந்திய ரசிகர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும், அணியினருக்கும், எனக்கு மருத்துவம் அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதை மறக்க முடியாதது. 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றது பாக்கியமாகும். சிறு வயது முதலே இந்திய அணியில் இடம்பெற்று உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது தந்தையின் ஆசையாகவும் எனது கனவாகவும் இருந்தது. அது நிறைவேறிவிட்டது. 2011 உலகக் கோப்பை தொடர் மறக்கமுடியாத ஒரு கனவு போல உள்ளது. இனி எனது அடுத்த பயணத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ந்து உழைப்பேன்” என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இல்லாவிட்டாலும் வெளிநாட்டு டி-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரையில், 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்கள் குவித்துள்ளதோடு 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 52 அரைசதங்களும் 14 சதங்களும் விலாசியுள்ளார் யுவராஜ் சிங்.

40 டெஸ்ட் போட்டிகளில் 11 அரைசதம், 3 சதம் உட்பட மொத்தம் 1,900 ரன்கள் குவித்துள்ளார். டி-20 போட்டிகளில் மொத்தம் 58 ஆட்டங்களில் 1,177 ரன்கள் குவித்துள்ளார்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon