மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

குடும்பசூழலை அரசியலாக்குவது கீழ்த்தரமானது: தமிழிசை

குடும்பசூழலை அரசியலாக்குவது கீழ்த்தரமானது: தமிழிசை

குடும்பசூழலை அரசியலாக்குவது கீழ்த்தரமானது என்று தனது மகன் விமான நிலையத்தில் கோஷமிட்டது தொடர்பாக இன்று (ஜூன் 10) தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை நேற்று (ஜூன் 9) செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மகன் சுகந்தன் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதையடுத்து, அவரை அங்கிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தூத்துக்குடியில், மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய போது, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ஒரு நாள் காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். தற்போது தன் மகன் கோஷம் எழுப்பிய நிலையில் தமிழிசை என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டன.

இந்த சூழலில் இதற்கு விளக்கமளித்து தனது ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ள தமிழிசை. ”குடும்பசூழலை அரசியலாக்குவது கீழ்த்தரமான நிகழ்வு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ”நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். அப்போது உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால், ’நான் திருச்சி வரவில்லை நீங்கள் செல்லுங்கள்’ என்று என் கணவரிடம் சொல்லி விட்டு அவர்களை அனுப்ப முயன்றேன். அப்போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபம் அடைந்து கட்சி தான் முக்கியமா என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார். இந்த குடும்பசூழலை அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வுகள் கண்டனத்துக்குரியது

குடும்பத் தலைவியாகவும் இருந்து கொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக்கூடிய நிகழ்வுகள்தான் இவை. ஏன்…! அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். சாதாரணமாக நடந்த ஒரு குடும்ப நிகழ்வைப் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது மனதை ரணப்படுத்தினாலும், பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன். அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் நன்றி.

எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தைக் குறைக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான். என் பணிகளும் பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சவால்களை எதிர் கொள்வதே வாழ்க்கை” என்று தெரிவித்துள்ளார் தமிழிசை.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon