மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

ஸ்மித்தைக் கலாய்த்த ரசிகர்கள்: கோலி கேட்ட மன்னிப்பு!

ஸ்மித்தைக் கலாய்த்த ரசிகர்கள்: கோலி கேட்ட மன்னிப்பு!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கலாய்த்ததற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று (ஜூன் 9) நடந்த உலகக் கோப்பை லீக் சுற்றின் 14ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் இடையே நடந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, மிகவும் பெருந்தன்மையுடன் இந்திய ரசிகர்கள் சார்பாக அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.

இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டைத் தொடர்ந்து ‘தேர்ட் மேன்’ திசையில் நின்றுகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை ஸ்டேடியத்தின் அப்பகுதியில் இருந்த இந்திய ரசிர்கள் ‘ஏமாற்றுக்காரன் ஏமாற்றுக்காரன்’ என்று கூச்சலிட்டுக் கலாய்க்கத் தொடங்கினர். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் ஸ்மித் நீண்ட காலத் தடைக்குப் பின்னர் விளையாடுவதால் இவ்வாறு ரசிகர்கள் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி, ரசிகர்களைப் பார்த்து கூச்சலிடுவதை நிறுத்தும்படியும், மாறாக ஸ்மித்தை கைதட்டி ஊக்குவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் ஸ்மித் - கோலி இருவரும் கைகுலுக்கிக் கொண்டு தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

அதேபோல, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோதும், ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கையில் இந்திய ரசிகர்கள் மீண்டும் கூச்சலிடத் தொடங்கவே, பீல்டிங் செய்துகொண்டிருந்த கோலி, மீண்டும் ரசிகர்களை சாந்தப்படுத்தினார். கோலியின் இச்செயல் கிரிக்கெட் ரசிகர்களையும் ஆஸ்திரேலிய அணியினரையும் வெகுவாகக் கவர்த்தது. போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்நிகழ்வுக்கு விராட் கோலி மிகவும் பெருந்தன்மையுடன் மன்னிப்பும் கோரியுள்ளார். இந்திய ரசிகர்கள் மோசமான செயல் ஒன்றுக்கு முன்னுதாரணமாக இருக்கத் தான் விரும்பவில்லை எனவும் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்மித் அடித்த பந்தைத் தடுக்க முயன்ற விராட் கோலி தடுமாறி விழுந்ததை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்து சிரித்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இருப்பினும், கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று உணர்த்துவதைப் போல கோலியின் செயல்பாடு இருந்துள்ளது. கோலியின் இச்செயல் சமூக வலைதளங்களிலும் மேன்மையாகப் பேசப்பட்டுவருகிறது.

பந்தைச் சேதப்படுத்த முயற்சியா?

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவின் நடவடிக்கை மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பந்துவீசுவதற்கு முன்பாக அடிக்கடி தனது கையை கால்சட்டை பைக்குள் நுழைத்து பின்னர் பந்துவீசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நடவடிக்கையால் அவர் பந்தைச் சேதப்படுத்த முயற்சித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் அது மறுக்கப்பட்டுள்ளது. ஆடம் ஜம்பா தனது கைகளைச் சூடாக வைத்திருக்க உபகரணம் ஒன்றைத் தனது பைக்குள் வைத்து பயன்படுத்துவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் விளக்கமளித்துள்ளார். எனினும் அந்த உபகரணத்தையும், நேற்றைய சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் இன்னும் பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து போட்டி நடுவர்கள் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இது மிகவும் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஒரு ஆண்டு தடைக்குப் பின்னர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், ஆடம் ஜம்பாவின் இச்செயல் அந்த அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon