மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

பாக்யராஜுக்குப் பின்னால் ரஜினி: உண்மை என்ன?

பாக்யராஜுக்குப் பின்னால் ரஜினி: உண்மை என்ன?

இராமானுஜம்

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23 அன்று காலை சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குப் பதிவு நடைபெறும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் – ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.

இரு அணிகள் சார்பிலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பரபரப்பு பேட்டிகளும் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரின் வேட்புமனுவில் முன் மொழிந்து கையொப்பமிட்டிருக்கிறார் கமல்ஹாசன். கடந்த முறை தேர்தலின் போதும் நாசருக்கு முன் மொழிந்தது கமல்ஹாசன் தான்.

கடந்த முறை பாண்டவர் அணியை பொருளாதார ரீதியாக வழிநடத்திய ஐசரி கணேஷ் இந்த முறை பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி பாண்டவர் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் வேட்பு மனுத் தாக்கல் முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “தலைவர் பதவிக்கு நிற்கும்படி ரஜினிகாந்த் சொன்னதால்தான் நான் போட்டியிடுகிறேன்” என பாக்யராஜ் சொல்லிவிட்டுப்போக, திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

நாசர் - விஷால் தலைமையிலான அணியை கமல்ஹாசன் ஆதரிக்கிறார் என்பதால் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான அணியை ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் இப்போது மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். ரஜினி சொன்னதால்தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக பாக்யராஜ் அறிவித்திருப்பதால், பாக்யராஜ் தொலைபேசியில் ரஜினியிடம் பேசினாரா அல்லது பாக்யராஜைத் தொடர்புகொண்டு ரஜினிபேசினாரா என்பது குறித்து விசாரித்த போது, படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிக்கு இயக்குநர் பாக்யராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

அப்போது நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும், தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்தும் தகவல் தெரிவித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அப்போது இயக்குநர் பாக்யராஜுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த வாழ்த்தைத் தொடர்ந்து ரஜினி சொல்லித்தான் தான் தேர்தலில் போட்டியிடுவதாக பாக்யராஜ் சொல்லியிருப்பது குறித்து ரஜினி தரப்பில் விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் ஒரு அணியை பகிரங்கமாக ஆதரிப்பது போல, ரஜினி பகிரங்கமாக பாக்யராஜ் அணியை ஆதரித்து அறிக்கையோ பேட்டியோ அவர் பாணியில் வீடியோவோ வெளியிடாதவரை ரஜினி ஆதரவு என்பது பாக்யராஜ் சொன்ன தகவலாக தான் இருக்கும்.

ஏற்கனவே பதவியில் இருக்கும் பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்த பாக்யராஜ் - ஐசரி கணேஷ் அணிக்கு பாண்டவர் அணி மீது வலுவான குற்றச்சாட்டு எதையும் சொல்ல முடியாததால் கட்டடம் தாமதமாகிவிட்டது என்ற காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

இதில் வேடிக்கையே கட்டடம் தாமதமானதற்கு காரணம் பாக்யராஜ் அணியை ஆதரிக்கும் எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு தான். அதை சட்டரீதியாக முடிவுக்கு கொண்டு வந்து, இப்போது கட்டடப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற அனைவரும் நடிகர் சங்க புது கட்டட வேலைகளைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது நாடக நடிகர்களின் வாக்குகள். கடந்த முறை நாடக நடிகர்களை ஒருங்கிணைக்கும் பணியை பூச்சி முருகன், கருணாஸ், மறைந்த நடிகர் ரித்திஷ் ஆகியோர் முன்னெடுத்தனர்.

இந்த முறை அந்த பணியை நடிகர் கருணாஸ் செய்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கபட்டதும் மாவட்டம் மாவட்டமாக சென்று நாடக நடிகர்களை பார்த்து விஷால் அணிக்காக ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார் கருணாஸ்.

ஐசரி கணேஷ் அணிக்காக அந்த வேலையை செய்து தருவதாக ராதாரவி கூறியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே ராதாரவி மீது நடிகர் சங்க இடத்தை முறைகேடாக விற்று மோசடி செய்த வழக்கு சூடு பிடிக்கும் நிலையில் நாடக நடிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே!

அதிலும் குறிப்பாக நாடக நடிகர்களை ராதாரவி பதவியில் இருந்த போது உரிய மரியாதை தராமல் உதாசீனம் செய்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு.

இந்த நிலையில் நாடக நடிகர்கள் வாக்குகளை ஒருங்கிணைப்பு செய்கிறேன் என்று சொல்லி ஐசரி கணேஷ் உபயத்தில் ஊர் ஊராக பயணப்பட்டு தன்னை வளப்படுத்திக் கொள்ளும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் ராதாரவி என்கிறது நாசர் வட்டாரம்.

தமிழக அரசியல் களத்தில் நடைபெறும் பரபரப்புக்கு சற்றும் குறையாத வகையில் நடிகர் சங்கத் தேர்தலில் நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்கள் எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலை இயல்பாக ஏற்பட்டதா ஏற்படுத்தபட்டதா என்பதை அடுத்து வரும் கட்டுரையில் பார்க்கலாம்.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon