மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

துக்ளக் கார்ட்டூனும் நிஜமும்!

துக்ளக் கார்ட்டூனும் நிஜமும்!

மத்திய அமைச்சரவையில் அதிமுக சேர்த்துக்கொள்ளப்படாதது தொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட துக்ளக், மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் நேரடியாகவே சொல்லியிருந்தது. கேலிச் சித்திரத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் விருந்து சாப்பிடுவது போலவும், வெளியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் விருந்துக்கு அழைப்பார்களா என்று காத்திருப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்குப் பதிலடி கொடுத்த அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா, துர்நாற்றப் பத்திரிகை துக்ளக் என்று விமர்சித்திருந்தது.

இந்த கேலிச்சித்திரம் பற்றி துக்ளக் பத்திரிகையின் நிருபர் ஒருவரிடம் பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். அதன் பிறகு ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியிடமே இதுபற்றி நேரடியாகப் பேசிவிட்டார். அதற்கு, ‘நான் நினைத்தது ஒன்று. ஆனால், நடந்தது ஒன்று’ என்று அவரிடம் விளக்கியிருக்கிறார் குருமூர்த்தி. ஆனால், பாஜக தலைவர்களை விமர்சிக்க இருந்த கார்ட்டூன்தான், அதிமுக தலைவர்களை விமர்சித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்...

பத்திரிகை அலுவலகத்திடமும், அந்த கேலிச் சித்திரத்தை வரைந்த கார்ட்டூனிஸ்டிடமும், இந்த நேரத்தில் ஏன் இதுபோன்ற கார்ட்டூனை வெளியிட்டீர்கள் என்று கேட்டோம். அதற்கு, ‘உண்மையில் நான் வரைந்த கார்ட்டூன் வேறு, அதை மாற்றித் திருத்தி வெளியிட்டுள்ளார்கள்’ என்று பட்டென்று போட்டு உடைத்திருக்கிறார் அந்த கார்ட்டூனிஸ்ட்.

அதாவது, பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளே விருந்து சாப்பிடுவதுபோலவும், வெளியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் காத்திருப்பது போலவும், கொஞ்சம் தூரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் நிற்பதுபோல்தான் முதலில் வரைந்த கார்ட்டூன் இருந்திருக்கிறது.

கார்ட்டூனைப் பார்த்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இது பாஜகவை இழிவாகச் சித்திரித்தது போல அமைந்துவிடும். தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் நாடார் சமூகம் என்பதால் அந்த சமூகத்துக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, அவர்களின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே இருவரையும் நீக்கிவிடுங்கள், அந்த இடத்தில் எடப்பாடி, பன்னீரை பதிவு செய்துவிட்டால் எந்த பிரச்சினையும் வராது என்று அப்படி வைக்கச் சொல்லிவிட்டார் என்றிருக்கிறார் அந்த கார்டூனிஸ்ட்.

இதன்மூலமாக பாஜகவை விமர்சிக்க இருந்த அம்புதான் அதிமுகவை நோக்கி பாய்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள் பாஜகவினர்.


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon