மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 மா 2020

தேர்தல் தோல்வியிலிருந்து ராகுல் மீளவில்லை: மோடி

தேர்தல் தோல்வியிலிருந்து ராகுல் மீளவில்லை: மோடி

தேர்தல் தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீளவில்லை என்று திருப்பதியில் பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.

மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று (ஜூன் 9) மாலை நாடு திரும்பினார். இலங்கையிலிருந்து நேராக ஆந்திரா சென்ற அவர் திருப்பதி சென்று வழிபாடு செய்தார். அவரை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று வரவேற்றதோடு திருப்பதிக்கும் அழைத்துச் சென்றார். அம்மாநில பாஜக சார்பில் ரேணிகுண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மோடி உரையாற்றினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றதற்காகப் பொதுமக்களை நேரில் சந்தித்துக் கடந்த 3 நாட்களாக நன்றி தெரிவித்தார். அப்போது நடந்த பேரணியில், மோடியின் தேர்தல் பிரச்சாரம் பொய்களும், விஷமமும், வெறுப்பும் நிறைந்ததாக இருந்தது என்று குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மோடி, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் தோல்வியிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இதுதான் அவர்களின் பலவீனம். எங்களை பொறுத்தவரைத் தேர்தல் அத்தியாயம் முடிந்துவிட்டது. 130 கோடி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய நேரம் இது” என்றார்.

ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறவில்லை என்று கூறிய அவர், “பாஜக தலைமையிலான அரசு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்கான பணிகளை முன்னெடுக்கும். எங்களுக்குத் தேர்தலில் பெறும் வெற்றி முக்கியமல்ல. வளர்ச்சிக்கான எல்லையற்ற சாத்தியக்கூறுகளை ஆந்திரப் பிரதேசம் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் மேம்பாட்டுக்காக முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் அளிப்போம். தமிழகம் மற்றும் ஆந்திர மாநில மக்களுக்கு என் நன்றி. இரு மாநிலங்களும் ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்திலும், ஆந்திராவிலும் சிறப்பாக பணியாற்றுவதன் மூலம் எங்கள் பலத்தைக் கூட்டுவோம்” என்றார்.

“மத்திய மாநில அரசுகள் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்கப் பாடுபடும். எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த ஆண்டில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளோம். 2022ஆம் ஆண்டில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இவை இரண்டும் நமக்குச் சிறந்த தூண்டுதலாக இருக்கும். சுதந்திரப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூறும் வாய்ப்பை நமக்கு இவை அளிக்கின்றன. நாட்டை கட்டமைப்பதில்தான் இந்த அரசு கவனம் செலுத்தும்; பாஜக என்ற கட்சியை அல்ல” என்றார்.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon