மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

திரை தரிசனம்: டாக் டே ஆஃப்டர்னூன்

திரை தரிசனம்: டாக் டே ஆஃப்டர்னூன்

மதிய வேளையில் முதன்முறையாக வங்கியைக் கொள்ளையடிக்கப் போனவன், ஹீரோவாக மாறி மாலைக்குள் வீழ்ந்த உண்மைக் கதையே டாக் டே ஆஃப்டர்னூன்.

புரூக்லின் நகரத்தின் மாண்டேஜுடன் எல்டன் ஜானின் அமோரீனா பாடல் பின்னணியில் ஒலிக்க, படம் தொடங்குகிறது. நகரத்தின் ஏற்றத்தாழ்வுகளும் வளமையற்ற தன்மையும் நம் முன்னே விரிகின்றன. டோல் கேட் முன்னே காத்திருக்கும் வாகனங்கள், ஆகாயத்தில் பறக்கும் விமானம், பாதுகாப்பான வளையங்களுக்குள் டென்னிஸ் விளையாடுபவர்கள், வெட்டவெளியில் சட்டையின்றி ராட்சத இரும்பை நகர்த்தும் தொழிலார்கள் என நகரத்தின் பின்புலம் காட்சிகளின் அடுக்குகளில் பதிகின்றன. இதனிடையே தன் காதலியை நினைத்து ஏங்குபவனின் பாடலாக ஒலிக்கிறது ‘அமோரீனா’.

சன்னி, சல்வதோர், அவர்கள் கூட்டாளியென மூன்று பேர் கொள்ளையடிப்பதற்காக வங்கிக்குள் நுழைகின்றனர். மூன்றாவது நபர் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே பயத்தில் நான் இதிலிருந்து விலகுகிறேன் என கிளம்புகிறார். சன்னி (அல் பசீனோ), சல்வதோர் (ஜான் கேசல்) இணைந்து திட்டத்தை முன்னெடுக்கின்றனர். கையிலிருக்கும் துப்பாக்கியுடன் வங்கிப் பணியாளர்களை மிரட்டிப் பணத்தை எடுக்கலாம் என்றால், வங்கியில் மொத்தம் 1100 டாலர்கள் மட்டுமே இருக்கிறது. தினசரி பணம் எடுக்கும் செக்கர்கள் வைப்புத் தொகையை எடுத்துச் சென்ற பின் தாமதமாகத் தாங்கள் திருட வந்திருப்பது அப்போதுதான் புரிகிறது.

சன்னி கோபத்தில் வங்கியிலுள்ள ‘செக்’குகளை குப்பைத் தொட்டியில் போட்டு எரிக்க, கிளம்பும் புகையில் சந்தேகமடைந்த காவல் அதிகாரிகள் வங்கியைச் சூழ்கின்றனர். வேறு வழியின்றி வங்கிப் பணியாளர்களைப் பிணைக் கைதிகளாக மாற்றுகின்றனர் சன்னியும் சல்வதோரும். அதன் பின், பரபரப்படையும் சூழலில் வெளிப்படும் அரசு, ராணுவத்தின் அணுகுமுறை, மீடியா நிகழ்த்தும் சர்க்கஸ், சாகசமாகவே அனைத்தையும் பார்க்கும் மக்கள், பிணைக் கைதிகளுக்கும் பிணை வைத்திருப்பவர்களுக்கும் ஏற்படும் யதார்த்தமான உறவு, சன்னி கொள்ளையிட வந்ததற்கான காரணம் என இரண்டு மணி நேரத்தில் இனம், பாலினம், வர்க்கம் என பல்வேறு தளங்களை ஒரு ஆவணப் படம் போலத் தொட்டுச் செல்கிறது சிட்னி லூமெட்டின் (Sidney Lumet) டாக் டே ஆஃப்டர்னூன் (Dog Day Afternoon, 1975).

1972ஆம் ஆண்டு புரூக்லின் வங்கியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மிக எளிமையான சோஷியல் மெலோ டிராமாவான இந்தத் திரைப்படம் குடியரசின் மீதான நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் ஒரே தராசில் நிறுத்திப் பார்வையாளனிடம் கொடுத்துவிடுகிறது. சன்னி வங்கிக்குள்ளிருந்து வெளியே வரும்போதெல்லாம் மக்கள் அவனைப் புரட்சியாளர் போல பாவித்து கொண்டாடும் இடமெல்லாம் ஒரு கதாநாயகனுக்காகச் சமூகம் எவ்வளவு தூரம் ஏங்கியிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

வரையறுக்கப்பட்ட வெளிக்குள்ளேயே மொத்தத் திரைக்கதையின் காலமும் இயங்குகிறது. ஒரு வங்கி, அதன் எதிரிலுள்ள சலூன், நடுவிலிருக்கும் சாலை – இவையே பிரதான லொக்கேஷன்கள். பின்னணி இசையின்றி முழுக்க இயல்பான சப்தங்களை மட்டுமே தன் உறுப்பாகக் கொண்டு இயங்குகிறது படம். கதாபாத்திரங்கள், கூட்டம், வாகனங்கள், ஹெலிகாப்டர், மக்களின் கோஷம், ராணுவம் எனக் கதை நாயகனுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதுபோல சப்தங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காட்சிகளின் தீவிரத்துக்கேற்ப சப்தங்களின் தீவிரமும் காட்சிகளுக்கு இணையாக வேலை செய்கிறது.

குறிப்பாக சன்னி தொலைபேசியில் உரையாடும் காட்சி. எஃப்பிஐ ஒட்டுக் கேட்கிறது என்பதற்காக அமைத்த திட்டமிடப்பட்ட மவுனத்தையும் மீறி அந்த உரையாடலுக்குள் நிகழும் மௌனம் கலாபூர்வமானது, மனதின் ஆழத்தைத் துல்லியமாகப் பிரதிபலிப்பது. பிடித்து வைக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் கென்னடி விமான நிலையத்துக்குள் நுழைந்தவுடன் அவர்களை நோக்கித் திரும்பும் விமானத்தைக் கண்டவுடன் ஏற்படும் பீதி நமக்கும் தொற்றுகிறது. ஒரு காட்சி சப்தத்தை எப்படி வடிவமைக்கிறதோ அதைப் போலவே சப்தமும் ஒரு காட்சியை வடிவமைக்கிறது. சமயத்தில் உருவாக்கவும் செய்கிறது.

திரைப்படங்களில் எளிமையாகவும் கூர்மையாகவும் சப்தங்களைக் கற்பதற்கு சிட்னி லூமெட் (12 ஆங்கிரி மேன், செர்பிகோ) திரைப்படங்கள் நல்ல உதாரணம். திரைப்படத்தில் ஒரு காட்சியை மேடையேற்றுதல் (staging) பற்றிய நம் அடிப்படைப் புரிதல்களை இவரது படங்கள் மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் செய்யலாம்.

அல் பசீனோ, ஜான் கேசல் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon