மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!

பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா நேற்று திடீரென போர்கொடி உயர்த்தினார். அவரின் கருத்துக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட யாரும் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இதுதொடர்பாக நாம் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்! என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வைத்திலிங்கத்தை சந்தித்துவிட்டு போயிருக்கிறார் ராஜன் செல்லப்பா. அதன் பிறகு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ராஜன் செல்லப்பா இப்படியான ஒரு விஷயத்தை முன்னெடுத்து இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும், இன்று ராஜன் செல்லப்பா, நாளை இன்னொருவர் என இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்துவார்கள் என்றும் கூறியிருந்தோம்.

அதிமுகவிலிருந்து மத்திய அமைச்சர் பதவியைப் பிடிக்க பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம் இடையே போட்டி நிலவியது. ஆனால் அமைச்சரவையில் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. வைத்திலிங்கத்துக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு பன்னீர்செல்வம்தான் காரணம் என நினைக்கிறார். இதுதொடர்பாக ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம் என்று வெளியிட்ட செய்தியில், அமைச்சர் பதவி தராதது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய வைத்திலிங்கம், ஒரு முடிவெடுக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் வைத்திலிங்கத்துடன் பேசிவிட்டு வந்த இரண்டு நாட்களில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படையாக போட்டுடைத்தார் ராஜன் செல்லப்பா.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக தனது ஆட்டத்தை வைத்திலிங்கம் தொடங்கிவிட்டார் என்று கூறுகிறார்கள் அதிமுகவினர். அந்த வகையில் தற்போது ராஜன் செல்லப்பா கருத்தை வழிமொழிந்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான ஆ.டி.ராமச்சந்திரன். இவர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்திரன் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிமுக ஒற்றை தலைமை குறித்து அண்ணன் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. அவர் சொன்னது போன்று ஒற்றைத் தலைமை என்பது வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு கழகமே குடும்பம் வாழ்ந்து மறைந்தார்கள்” என்று கூறியுள்ளவர்,

அப்படிப்பட்ட அதிமுகவை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும், பிளவுபடுத்த எண்ணினாலும் அவர்களை மற்றொரு சசிகலாவாகத்தான் அதிமுக தொண்டர்கள் கருதுவர். இதனை புரிந்துகொண்டு தலைவர்கள் கழகத்துக்காக தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டுமே தவிர, தனது குடும்பத்திற்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது” என்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பன்னீர்செல்வத்தை நேரடியாகவே குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

“மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம்தான் என்று பாஜக தெளிவாகக் கூறிவிட்டது. வேறொரு மாநில கூட்டணிக் கட்சிகள் தாங்கள் இரண்டு கேட்டதாகவும் அது மறுக்கப்பட்டதால் பதவியேற்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தனர்.

ஆனால் நாங்கள் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை என்றோ அல்லது இரண்டு இடம் கேட்டோம், ஒன்றுதான் தருவோம் எனச் சொன்னார்கள் என்றோ பதிலளிக்க முடியாத நிலையில் அதிமுக இருப்பதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்பதை நாங்கள் உணருகிறோம். தர்மயுத்தம் நடத்தி வெற்றிபெற்றதாக சொல்லும் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், தனது மகனுக்காக அமைச்சர் பதவி கேட்டு, அதனால் அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை என்று உணரும்போது வேதனையுடன் அந்தக் கருத்தை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மோடி முதல் பயணமாக மாலத்தீவு சென்றது ஏன்?


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


ஞாயிறு, 9 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon