மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

அ.குமரேசன்

இரவிலும் தூங்கா நகரம் என்று முன்னொரு காலத்தில் பெயர் பெற்றிருந்தது மதுரை. மாலையில் கல்யாணம் நிச்சயித்து, இரவிலேயே அனைத்துப் பொருட்களும் வாங்கி, விடிகிறபோது திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்குப் பல்வேறு வகைப்பட்ட பொருட்களை விற்கிற கடைகளில் வகைக்கு ஒரு கடையாக இரவில் திறந்திருக்கும். கடைக்காரர்கள் சுழற்சி முறையில் இரவில் மாறி மாறிக் கடை திறந்து வைப்பார்களாம். நகரின் மையப் பகுதியில் ஒரு மருந்துக் கடை ஆண்டு முழுக்க இரவில் திறந்திருக்கும். திடீர் மருந்துத் தேவை ஏற்படுகிறபோது அந்தக் கடைக்கு நம்பிச் செல்லலாம். இப்போதும் அந்தக் கடை அங்கே அதேபோல் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை.

வணிக வளாகங்கள், கடைகளை இனி 24 மணிநேரமும் திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு ஏற்ப இதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செய்தியைப் பார்த்ததும் இந்த மதுரை அனுபவம் நினைவுக்கு வந்தது.

இனி இரவிலும் வணிக வளாகங்களில், கடைகளில் விற்பனை இருக்குமென்பதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுவார்கள், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வணிகச் சுழற்சி விரிவடைவதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்று பல கோணங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

சிறிய கடைகளுக்கு அனுமதி இல்லை

அதே வேளையில் இதில் சில நிபந்தனைகளும் உள்ளன. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே இரவில் திறந்திருக்க அனுமதிக்கப்படும். ஒரே ஒருவர் அல்லது இரண்டு பேர் இருக்கக்கூடிய கடைகளுக்கு இந்த அனுமதி கிடையாது. அதாவது சிறிய டீக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், பெட்டிக் கடைகள், பழச்சாறு கடைகள், சிறு மருந்துக் கடைகள், சலவைக் கடைகள், மளிகைக் கடைகள், எழுதுபொருள் கடைகள் உள்ளிட்டவை பகலில் மட்டுமே இயங்க முடியும்.

தொழில் முறைகள், வேலைத் தன்மைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை மாற்றமடைந்துள்ள சூழலில் வணிக ஏற்பாடுகள் மட்டும் மாறாமல் முன்போலவே இருக்க முடியாது. அந்த வகையில் கடைகளும் இதர வணிக வளாகங்களும் நாள் முழுக்கச் செயல்படுவது வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், சிறிய கடைகள் செயல்பட முடியாது என்கிறபோது, கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் கிளைகள்தாம் எந்நேரமும் திறந்திருக்கும். இது படிப்படியாக சிறிய வணிகர்களின் வாழ்வாதாரம் அரிக்கப்படுவதில் போய் முடியும்.

இரவில் கடைகளைத் திறப்பது வணிகர்களைவிட, நள்ளிரவிலும் அதிகாலையிலும் வேலை முடித்து வீடு திரும்புகிறவர்களுக்கே கூடுதலாகப் பலனளிக்கும். மளிகைகள், ஆடைகள், காலணிகள், பயணப் பெட்டிகள், மருந்துகள், உணவு வகைகள், பல்வேறு நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நள்ளிரவிலும் கடைகளுக்குச் சென்று வாங்கிக்கொள்ள முடியும். அதிகாலை வண்டியில் ஊருக்குப் புறப்படுகிறவர்களின் அவசரத் தேவைகளை - அட ஒரு மொபைல் போன், சார்ஜர், பவர் பேங்க், இயர்போன் போன்றவை உட்பட - நிறைவேற்றிக்கொள்ள உதவும். இரவில் பல்வலி ஏற்பட்டுத் துடிப்பவர்கள், ஓர் உடனடி வலி நிவாரணி மாத்திரை வாங்குவதானால்கூட விடிந்து வெகுநேரம் கழித்துத்தான் மருந்துக் கடைகள் திறக்கும் என்ற நிலையில் கூடுதல் சோர்வுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு இனி இரவிலேயே அந்த மாத்திரையை வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையே பெரிய வலி போக்கியல்லவா?

ஆனால், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய கடை மூடியிருக்கும் என்பதால், 10 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய மருந்துக் கடை எங்கே இருக்கிறது என்று தேடிச் சென்று கண்டுபிடித்து வாங்க வேண்டியிருக்கும்.

பகல் நேர விற்பனையின் நெருக்கடி குறையும் என்பதால், இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள் வாங்க வருவோருக்குச் சிறப்புத் தள்ளுபடிகளைக் கடைக்காரர்கள் அறிவிக்கக்கூடும். இரவு ஷிப்டுகளில் வேலை செய்வதற்கென கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் அத்தகையோருக்கும் அவர்களது கண்காணிப்பாளர்களுக்கும் என வேலைவாய்ப்புகள் சற்றே அதிகரிக்கிற வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கூடுதல் சம்பளம் என ஆசை காட்டி, பகல் நேரப் பணியாளர்களையே இரவிலும் கூடுதல் நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிற, அல்லது அதிகாலையிலேயே வந்துவிடச் சொல்கிற உழைப்புச் சுரண்டல்களைத் தொழிலாளர் துறை அதைக் கண்காணித்துத் தடுக்கும் என்று நம்புவோமாக.

8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது, கூடுதல் பணி நேரத்துக்கான கூடுதல் ஊதியத்தைத் தொழிலாளர் வங்கிக் கணக்கில் சேர்த்துவிட வேண்டும், வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்பன போன்ற விதிகள் எந்த அளவுக்குக் கறாராகப் பின்பற்றப்படுகின்றன, அதிகாரிகள் எந்த அளவுக்கு நேர்மையாகக் கண்காணித்து உறுதிப்படுத்தப்போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு?

இரவில் கடைகளுக்குச் செல்கிறவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, பாதுகாப்பு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. இரவில் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பும் அதிகரிக்கும், காவல் துறையின் நடவடிக்கைகளும் அதற்கேற்பத் திட்டமிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சமுதாயத்தில் வலுவாகப் பரப்புவதோடு சம்பந்தப்பட்டது. இரவிலும் கடைகளா, அய்யய்யோ பெண்களின் நிலை என்னாவது என்று பதறிப்போய்க் கேட்கிறவர்கள், பாலினச் சமத்துவத்துக்கான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டால் நல்லது.

இரவில் தேநீர் கிடைக்குமா?

இரவில் 11 மணிக்கு மேல் தேநீர்க் கடைகளைத் திறக்கக் கூடாது என்ற தடை சென்னையிலும் மற்ற பெரிய நகரங்களிலும் இருக்கிறது. திரையரங்குகளோடு கூடிய வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களும் தேநீர்க் கடைகளும் திறந்திருக்கலாம், அங்கிருந்து வெளியே வருகிறவர்கள் டீ குடிக்க நினைத்தால் சாலையோரக் கடைகள் எதுவும் திறந்திருக்காது என்பது பெரிய பாகுபாடு. பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இரவில் கடை திறக்க அனுமதி உண்டு என்றாலும், எல்லாக் கடைகளையும் திறக்க முடியாது, அதற்கெனச் சிறப்பு அனுமதி பெற்ற கடைகளைத்தான் திறந்து வைக்க முடியும்.

தற்போதைய முடிவால் சிறிய தேநீர்க் கடைகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை. அத்தகைய கடைகளை நாடக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் பயனில்லை. இந்தத் தடையாணை அரசாங்கத்தால் அறவிக்கப்பட்டதல்ல, சட்டம் ஒழுங்கின் பெயரால் காவல் துறையாலும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களாலும் கொண்டுவரப்பட்டது என்பதால் தடை தொடரும் எனத் தெரிகிறது. தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேநீர்க் கடை உரிமையாளர் சங்கத்தினர் தங்கள் மாநாடுகள் மூலம் தொடர்ந்து வலியிறுத்தி வருகிறார்கள்.

பொருளாதாரமே மேம்படுமா?

இந்த வணிக நேர நீட்டிப்பால், ஒட்டுமொத்த வர்த்தகம் அதிகரிக்கும், பணச் சுழற்சி கூடுதலாகும், நாட்டின் பொருளாதாரமே மேம்பட்டுவிடும் என்றெல்லாம் அடுத்த கட்டக் கனவுகளுக்கு முன்னுரை எழுதப்படுகிறது.

பகலோ, இரவோ வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கப் போகிறவர்கள் என்னவோ அதே மக்கள்தாம். இரவில் பொருட்கள் வாங்குவோர் மக்கள்தொகை இதனால் அதிகரித்து விடப்போவதில்லை. குறிப்பிட்ட நாளில் பகலில் கடைக்குப் போனவர்கள் இப்போது இரவில் தாங்கள் விரும்புகிற நேரங்களில் செல்வார்கள் அவ்வளவுதான். அதற்காக, பகலில் ஒரு டூத் பேஸ்ட் வாங்குகிறவர்கள் இரவில் இரண்டு பேஸ்ட்டுகள் வாங்க மாட்டார்கள். பகலில் 20 கிலோ அரிசி வாங்குகிறவர்கள் இரவில் 40 கிலோ வாங்க மாட்டார்கள்.

ஆக, வணிகர்களின் மொழியில் சொல்வதானால் “சரக்குகளின் அழிவு” அப்படியேதான் இருக்கப்போகிறது. ஆக, பெரும்பாலும் இந்த நிலைமைதான் இருக்கும் என்கிறபோது ஒட்டுமொத்த வர்த்தகம் எப்படி அதிகரிக்கும்? பணச் சுழற்சி எப்படிக் கூடுதலாகும்? நாட்டின் பொருளாதாரம் எப்படி மேம்படும்?

மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான், அற்ப சொற்ப ஊதியத்துக்கு வேலை என்ற காண்டிராக்ட் முறை ஒழிந்தால்தான், சம வேலைக்குச் சம ஊதியம் என்பது மெய்யான நடப்பாக மாறினால்தான், எவ்வளவு நல்ல சம்பளமானாலும் உள்நாட்டு / பன்னாட்டு கார்ப்பரேட் நிர்வாகங்கள் எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கிவிடும் என்ற நிலைமை தடுக்கப்பட்டால்தான் இதிலே மாற்றம் வரும். அப்போதுதான் கூடுதல் பொருட்களில் மக்கள் முதலீடு செய்வார்கள். அப்போதுதான் வர்த்தகம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் நிகழும்.

மக்களின் வருவாய் நிலை உறுதிப்படுகிறபோதுதான், அவர்களுடைய வேலைவாய்ப்புகள் பெருகுகிறபோதுதான் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இருக்கிற வேலை வாய்ப்புகளுக்கும் மூடுவிழா நடத்துகிற கொள்கைகள் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறபோது அவர்களின் வாங்கும் சக்தியாவது அதிகரிப்பதாவது?

இனி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கப் போகிறவர்கள், இந்தச் சிந்தனையையும் கொள்முதல் செய்து வைத்துக்கொள்வார்களானால் பொழுது விடிவதற்கான வெளிச்சம் பிறக்கும்.


மேலும் படிக்க


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!


ஞாயிறு, 9 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon