மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை: ரெட் அலர்ட்!

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை: ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் இன்று தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், ஜூன் 10ஆம் தேதியன்று திருச்சூர் மாவட்டத்திலும், ஜூன் 11ஆம் தேதியன்று எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானியல் ஆய்வு மையம்.

இன்று (ஜூன் 8) கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கேரள கடற்கரைப் பகுதிகளில் மழை தொடங்கினாலும், இன்னும் 48 மணி நேரத்தில் இது கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இருக்குமென்று கூறப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, நேற்று (ஜூன் 7) அறிக்கை ஒன்றை வெளியிட்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்த அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். “தென்மேற்குப் பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் வருகிற ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகப் பெருமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், அம்மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமழைக்கு முன் தடுப்பு நடவடிக்கைகளும், தேவைப்படும் பட்சத்தில் தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகளும் நிவாரண முகாம்களும் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது கேரள மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 9) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதிகப் பெருமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு மட்டுமே ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும்.

பெருமழை காரணமான லட்சத்தீவுகள், மாலத்தீவு, மன்னார் வளைகுடாவில் 35-45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், ஜூன் 7 - 11ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


சனி, 8 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon