மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

விமர்சனம்: கொலைகாரன்

விமர்சனம்: கொலைகாரன்வெற்றிநடை போடும் தமிழகம்

ஒரு பெண் மரண பீதியுடன் ஓடிக்கொண்டிருக்கிறார். அவரைத் துரத்திச் செல்லும் நபர், அந்தப் பெண்ணைக் கொலை செய்து விடுகிறார். அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி ‘நான் ஒரு கொலை செய்துவிட்டேன்’ எனக் கூறி, காவல் நிலையத்தில் சரணடைகிறார். காவல் அதிகாரியான அர்ஜுன், விஜய் ஆண்டனியை விசாரிப்பதும், அதற்கு அவர் தரும் வாக்குமூலமும்தான் திரைக்கதை.

முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு, அடையாளம் கண்டறிய முடியாத வகையில் தீ வைத்து எரித்துக் கொலை செய்யும் கொலைகாரனைக் கண்டுபிடிக்கக் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் யார், ஏன் இத்தனை கொடூரமாக கொலை செய்யப்பட்டார், கொலைகாரன் யார் என்கிற கேள்விகளுக்கு விடை தருவதாக கொலைகாரன் திரைப்படத்தின் திரைக்கதை விரிகிறது.

முதல் காட்சியில் அந்தப் பெண்ணின் கண்களில் தெரியும் திகில் உணர்வைக் கடைசி வரை நமக்குள்ளும் தொடரவைப்பது திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிரெதிர் வீட்டில், கதாநாயகன் பிரபாகரனும் (விஜய் ஆண்டனி) தாரிணியும் (அமிஷா நர்வல்) வசித்துவருகிறார்கள். கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விஜய் ஆண்டனியின் அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருக்கின்றன. தினமும் காலையில் அமிஷா அலுவலகம் செல்லப் புறப்படும் அதே நேரத்தில் விஜய் ஆண்டனியும் கதவைத் திறந்து வெளியே வருவதும், அமிஷாவிற்குத் தெரியாமல் அவரைப் பின்தொடர்வதும், இருவருக்கும் இடையே என்ன தொடர்பு என்று யோசிக்க வைக்கிறது.

விசாரணையின் ஒரு கட்டத்தில், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது கண்டறியப்பட்டு, விசாரணை அதிகாரியான கார்த்திகேயன் (அர்ஜுன்), கொலை செய்தது யார் எனத் தேடும்போது அமிஷா, விஜய் ஆண்டனி மீது போலீஸ் சந்தேகப்படுவது பிரேக்கிங் பாய்ண்ட். அந்தக் கொலைகாரன் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா என்ற கேள்வியின் பதிலாக திக்... திக் அனுபவமூட்டும் வகையில் பயணிக்கிறது மீதிப்படம்.

படத்தின் முதல் பாதி முழுவதும் பல மர்ம முடிச்சுகள் விழுந்துகொண்டே இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் குழப்பம் ஏற்பட, இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது நம்மை ஒரு யூகத்துக்குள் அனுப்பிவிட்டு, கதை தன் போக்கில் நேர்மையாக செல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இப்படிப்பட்ட படங்களில் லாஜிக் ஓட்டை இருப்பது கதைக்கே ஆபத்தான ஒன்று என்பதை இயக்குநர் உணராமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.

நான், சலீம், பிச்சைக்காரன் திரைப்படங்களின் வரிசையில், விஜய் ஆண்டனியின் நடிப்பு வாழ்க்கையில் இந்த கொலைகாரன் ஒரு முக்கியப் புள்ளியாக அமையும். விஜய் ஆண்டனியின் கம் பேக் மூவியாக இப்படம் மாறக்கூடும். அவரது சலனமில்லாத முகபாவனைகள், திரில்லர் படத்திற்கு வலு சேர்க்கின்றன.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் பொருத்தமாக இருக்கிறார். பல படங்களில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் மிரட்டியிருந்தாலும், அப்படிப்பட்ட அலட்டல்கள் எதுவும் இல்லாமல், அறிவுக் கூர்மையால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அதிகாரியாகக் கைதட்டல் வாங்குகிறார்.

இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கும் நாயகி அமிஷா, தனக்கு நடிக்கத் தெரியும் என்பதை உணர்த்துகிறார். பல வருடங்கள் கழித்து திரையில் தோன்றியிருக்கும் சீதாவும், நாசர், பகவதி பெருமாள் முதலான மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.

சைமன் கே கிங்கின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். பின்னணி இசையின் வாயிலாக எவ்வளவு சுவாரசியமூட்டுகிறாரோ, அதே அளவுக்கு டூயட்களில் போட்டுத் தாக்குகிறார். தனியே கேட்டு ரசித்த சில பாடல்கள் படத்தில் பொருந்தாமல் அடம்பிடிக்கின்றன. முகேஷின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கைதட்ட வைக்கிறது. சென்னையின் முழு அழகையும் முகேஷின் கேமராக் கண்கள் ஆழமாய் ரசித்திருப்பது காட்சிகளில் மிளிர்கிறது. ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங் படத்தைப் பாராட்டவைக்கிறது. ஆனால், இரண்டாம் பகுதியில் இன்னும் சற்று நறுக்கியிருக்கலாம்.

சற்று பழக்கப்பட்ட கதை போன்று தோன்றினாலும், உருவாக்கமும் திரைக்கதையும் பாராட்டுகளைப் பெறும் வகையில் உள்ளன. முதல் பாதியில் தரும் சின்னத் தலைவலிக்கு, இரண்டாம் பாதியில் மருந்து தடவி, கூடவே சூடான காபியும் தருகிறான் கொலைகாரன்.


மேலும் படிக்க


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!


12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


சனி, 8 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon