மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சரிகிறதா காஞ்சி மடத்தின் அரசியல் செல்வாக்கு?

சரிகிறதா காஞ்சி மடத்தின் அரசியல் செல்வாக்கு?

காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்களில் பலர் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். ஆனபோதும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்தபோது மடத்துக்கு இருந்த அரசியல் செல்வாக்கு இப்போது இல்லை என்று காஞ்சி மட பக்தர்கள் வருத்தத்தோடு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இது தொடர்பாக காஞ்சி மடத்துக்கு நெருக்கமான சிலர் நம்மிடம் பேசினர்.

“ஜெயேந்திரர் இருந்தபோது அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களோடு அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. அயோத்தி விவகாரத்தில் தீர்வு காணும் முயற்சிகளிலெல்லாம் இறங்கினார். அயோத்திக்கே சென்ற ஜெயேந்திரர் அங்கே பாபர் மசூதியின் முத்தவல்லியான முகமது அன்சாரியை சந்தித்துப் பேசினார். ராமர் கோயில் பாபர் மசூதி விவகாரத்தில் ஜெயேந்திரர் மேற்கொண்ட சமரச முயற்சியை பின்னாட்களில் உச்ச நீதிமன்றமே வழிமொழிந்தது. சமரசக் குழுவும் அமைக்கப்பட்டது.

இவ்வாறு பல பொதுப் பிரச்சினைகளில் இயங்கிய ஜெயேந்திரரை பல்வேறு உயர் பதவியில் இருக்கும் விஐபிகள் எல்லாம் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து பார்த்துச் செல்வார்கள் . குறிப்பாக தேர்தல் காலத்திலும், தேர்தல் முடிந்து புதிதாக அரசுப் பொறுப்பேற்ற பின்னரும் சங்கர மடத்தைத் தேடி வந்து ஆசி பெற்றுச் செல்வார்கள். ஆனால் ஜெயேந்திரர் காலமான பிறகு விஜயேந்திரர் மடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் பின் காஞ்சி மடத்துக்கு அரசியல் விஐபிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது” என்றவர்கள் ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காட்டினார்கள்.

“கடந்த ஜனவரி மாதம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தமிழகத்துக்கு வருகை தந்தபோது காஞ்சி சங்கரமடத்துக்கும் சென்றார். அப்போது விஜயேந்திரர் அவரிடம், ‘பிப்ரவரி மாதம் ஜெயேந்திரர் முக்தி அடைந்த முதலாம் ஆண்டு நிகழ்வு நடக்கிறது. தாங்கள் வரவேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அந்நிகழ்வுக்கு வரவில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மட்டுமே வந்தார். கடந்த தேர்தலில் கூட காஞ்சி மடத்தைத் தேடி யாரும் வரவில்லை. மத்தியில் புதிய அமைச்சர்கள் பலர் பதவியேற்ற பிறகும் காஞ்சிமடத்தைத் தேடி அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதேநேரம் வாழும் கலை நிறுவனர் பண்டிட் ரவிசங்கருக்குதான் இப்போது மத்திய அரசில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் விஜயேந்திரர் வருத்தத்தில் இருக்கிறார்” என்கிறார்கள் காஞ்சி சங்கர மட பக்தர்கள்.

ஜெயேந்திரர் அளவுக்கு விஜயேந்திரர் தனது ஆளுமையை அகில இந்திய அளவில் விரித்துக் கொள்ளவில்லை என்ற குறையும் பக்தர்களிடம் இருக்கிறது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon