மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

பயோமெட்ரிக் பதிவு: புதுவையில் நாராயணசாமி உத்தரவு!

பயோமெட்ரிக் பதிவு: புதுவையில் நாராயணசாமி உத்தரவு!

புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு மாத காலத்துக்குள் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி.

அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்குள் பணிக்கு வருகிறார்களா என்று சோதிக்கும் வகையில், இன்று (ஜூன் 7) புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் நாராயணசாமி. அங்குள்ள தலைமைச் செயலகப் பணியாளர் சீர்திருத்தத் துறை, நிதித் துறை, கூட்டுறவுத் துறை, நிர்வாக மேலாண்மைத் துறை, உள் துறை, தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலகம், பட்ஜெட் அலுவலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது, காலையில் பணிக்கு வந்திருந்த ஊழியர்களோடு பேசினார். ஒவ்வொரு அலுவலகத்திலும் பதிவேட்டை வாங்கிச் சரி பார்த்தார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிக்கு வரத ஊழியர்கள் பற்றிக் கேட்டறிந்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தன்னுடன் வந்த புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாருக்கு உத்தரவிட்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் நாராயணசாமி. அப்போது, தொடர்ச்சியாகப் புகார்கள் வந்த காரணத்தினால் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்று ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.

“அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் வெளியில் இருப்பது, விடுப்பு எடுக்காமல் வீட்டில் இருப்பது, பணியைத் தாமதமாகச் செய்வதாகப் புகார்கள் வந்தன. இன்றைய ஆய்வில் மிகக்குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோன்று ஒவ்வொரு அமைச்சரும் தங்களது துறை அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்வர். அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும். அனைத்து அரசுத் துறைகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை ஒரு மாத காலத்திற்குள் பொருத்த வேண்டும்” என்று நாராயணசாமி தன் பேச்சில் குறிப்பிட்டார்.

24 மணி நேரமும் கடைகள் திறப்பது குறித்து விரைவில் அரசுத் துறை அதிகாரிகள், மக்கள், வர்த்தக சங்கங்களின் கருத்து கேட்கப்படுமென்று அவர் தெரிவித்தார். மக்கள் நலத் திட்டங்களை துணைநிலை ஆளுநர் தடுக்கக் கூடாது என்றார். இன்று நடந்த ஆய்வின் இடையே, புதுச்சேரி தலைமைச் செயலகப் பயிற்சி அரங்கில் நடைபெற்ற பண்டகக் காப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியையும் பார்வையிட்டார் நாராயணசாமி.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon