மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குழந்தை கொடூரக் கொலை: தலைவர்கள் கண்டனம்!

குழந்தை கொடூரக் கொலை: தலைவர்கள் கண்டனம்!

உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகாரில் 2 வயதுக் குழந்தை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென்று குரல் கொடுத்துள்ளன எதிர்க்கட்சிகள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவரது மகளின் பெயர் டிவிங்கிள். 2 வயதான இந்த பெண் குழந்தை, கடந்த மே 31ஆம் தேதியன்று காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் டிவிங்கிள் கிடைக்காததால், போலீசாரிடம் புகார் அளித்தார் பன்வாரிலால். ஜூன் 2ஆம் தேதியன்று, அவரது வீட்டின் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தை டிவிங்கிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஒரு கண் தோண்டப்பட்டு, உடலில் அமிலம் ஊற்றப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்டு, மிகக் கொடூரமான நிலையில் அந்த சடலம் இருந்தது.

குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். டிவிங்கிளின் தந்தை பன்வாரிலால் ஒரு நபரிடம் 40,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 30,000 பணத்தைத் திருப்பிச் செலுத்திய நிலையில் 10,000 ஆயிரம் ரூபாய் அவர் பாக்கி வைத்துள்ளார். மீதப் பணத்தைக் கொடுக்காத காரணத்தினால் டிவிங்கிள் கொல்லப்பட்டிருப்பதாகத் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்குக் காரணமான சாஹித் மற்றும் அஸ்லாமைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

2 வயதுக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “அலிகாரில் நடந்த குழந்தையின் கொடூரக் கொலை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிஞ்சுக் குழந்தையை எப்படி ஒருவனால் மிருகத்தனமாகக் கொல்ல முடியும்? அந்த கொடூர கொலையாளிக்குத் தண்டனை கிடைக்காமல் விடக்கூடாது” என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உ.பி. கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவிக்கையில், இது ஒரு அப்பாவிக் குழந்தை மீதான மிருகத்தனமான கொலை என்று குறிப்பிட்டுள்ளார். “அந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் வலியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எல்லோருக்கும் என்ன ஆனது?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்த கொலை மிகவும் அவமானகரமான மற்றும் துயரமான செயல் என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச அரசு இந்த குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டகத்துல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “பணத்திற்காகக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்தது நெஞ்சை உலுக்கியது. அவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

“குழந்தைகளின் உயிரைக் குறைவாக மதிப்பிடும் பயங்கரமான நிலையில் நாம் இருக்கிறோம். அத்தகைய மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக நீதி கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார் முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஊர்மிளா மடோன்கர்.

கொலைக் குற்றவாளிகளைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர் உத்தரப் பிரதேச காவல் துறையினர். குழந்தை கொலை குறித்த புகாரை அலட்சியம் செய்ததற்காக 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை டிவிங்கிள் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாகச் சில சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை மறுத்துள்ள போலீசார், இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon