மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

அத்துவான வெளியைத் தாண்டி அழகின் உறைவிடம்!

அத்துவான வெளியைத் தாண்டி அழகின் உறைவிடம்!

பூட்டான் டைரீஸ் 11 – நிவேதிதா லூயிஸ்

புனாகா நகரம். பெரிதும் இல்லாத சிறியதும் அல்லாத நடுத்தர நகரம். குளிர் காலத்தில் பாரோ, திம்பு நகரங்களைவிடக் குளிர் அதிகமாகவும், வெயில் காலத்தில் அவற்றைவிட வெப்பமாகவும் இருக்கும் நகரம். 1200 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம்தான் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக பூட்டானின் தலைநகரம். 1955ஆம் ஆண்டுதான் முக்கிய அலுவலகங்கள், மன்னரின் அரண்மனை போன்றவை திம்புவுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றன. பூட்டானின் பௌத்த தலைமைக் குரு இன்றளவும் குளிர்காலத்தில் புனாகாவில்தான் வசிக்கிறார்.

வயல்வெளிகளை நோட்டமிட்டுக்கொண்டே வந்தபோதுதான் அந்த பிரம்மாண்டமான கோட்டை ஒரு திருப்பத்தில் கண்ணில் படுகிறது. மோ சூ, ஃபோ சூ ஆகிய ஆறுகள் கலக்கும் இடத்தில் இருக்கும் புனாகா நகரின் பெருமைமிகு கோட்டை இது. கோட்டைக்குள் நுழைய 'கேன்டிலீவர்' பாலத்தை நடந்து கடக்க வேண்டும்! நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்தில் குழப்பம். முதல் முறையாக இங்கு இந்திய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தார்கள். தோழி மைத்ரேயி ஓடிச் சென்று கார் நிறுத்தத்தில் இருந்த எங்கள் வண்டியிலிருந்து பூட்டான் பணத்தை எடுத்துக்கொண்டு வர, ' இன்று கைடு யாரும் இல்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்', என்றார்கள்.

மறுநாள் வரலாம் என்றெண்ணி எப்போது திறப்பார்கள் என்று பார்த்தால், காலை 11 மணிக்கு என்றார்கள். அடுத்த நாளைய திட்டங்கள் வீணாகும் என்பதால், நாங்களே கோட்டையைச் சுற்றிப் பார்ப்பது என்று முடிவெடுத்து, தலா முன்னூறு ங்கல்த்ரமுக்கு நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு, மரப்பாலத்தைக் கடந்தோம்.

கோட்டையின் வரலாறு

நம்கியல் என்ற பெயரில் குரு ஒருவர் யானை போன்ற தோற்றம் கொண்ட மலைக்கு வருவார் என்று 8ஆம் நூற்றாண்டில் குரு பத்மசம்பவர் ஆரூடம் சொன்னதாக நம்புகிறார்கள் பௌத்தர்கள். குரு ரின்போஷே என்ற ங்கவாங் நம்கியல் 17ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தை அடைகிறார். போரிட்டுக்கொண்டிருந்த சிறு நாடுகளை இணைத்து பூட்டானை ஒருங்கிணத்த நம்கியல், இங்கு 1637ஆம் ஆண்டு தொடங்கி 1638ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்தக் கோட்டை.

1639ஆம் ஆண்டு இந்த இடத்தில் திபெத்தியர்களை வென்றதைக் கொண்டாடும் வகையில் கோயில் ஒன்றும் கோட்டைக்குள் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பல முறை இந்தக் கோட்டையில் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன, தீ விபத்துகள், நில நடுக்கங்கள், ஆறுகளில் திடீர் வெள்ளம் காரணமாக அவை அழிந்திருக்கின்றன. ஏழாவது தலாய் லாமா இந்தக் கோட்டையில் மேல் கூரையில் உள்ள விமானத்தை வெண்கலம் கொண்டு இழைத்திருக்கிறார்.

மூன்று சுற்றுகளைக் (டோஷேக்கள்) கொண்ட கோட்டையில் முதல் வெளிப்புறச் சுற்றில் பெரும் போதி மரம் ஒன்றும், அதனடியில் ஸ்தூபி ஒன்றும் இருக்கின்றன. அரச மரம் நிறைய கிளிகள் கத்திக்கொண்டும், பறந்துகொண்டும் சூழலை ரம்மியமாக்கிக்கொண்டிருந்தன. இந்தச் சுற்றில் நாக தேவதைக்கு ஒரு சிறு கோயிலும் இருக்கிறது. கோட்டையின் நிர்வாக அலுவலகங்கள் இங்கே உள்ளன. அடுத்த சுற்றில் குருக்கள் தங்கும் மடம் உள்ளது.

மூன்றாவது உள்புறச் சுற்றில் குரு ரின்போஷேயின் பூத உடல் பதப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. 'மச்சே லக்காங்' என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலுள் மத குருக்கள் உள்பட யாருக்கும் அனுமதி இல்லை! மன்னர் மட்டும் முடி சூட்டும் முன் இங்கு வந்து செல்ல அனுமதி இருக்கிறது. 2004ஆம் ஆண்டு இந்திய அரசின் பொருளாதார உதவியுடன் இந்தக் கோட்டை புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாங்க்சுக் மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் கோயில், இந்தக் கோட்டையில் தான் உள்ளது. 2011ஆம் ஆண்டு தற்போதைய மன்னரின் திருமணமும் இங்கேதான் நடைபெற்றிருக்கிறது.

நேரம் ஆனபடியால் அவசர அவசரமாகக் கோட்டையின் கோயில்களைச் சுற்றி வருகிறோம். அவசரமாக ஒரு மழை அடித்து ஓய்கிறது. ஐரோப்பிய டூரிஸ்டுகளின் குழந்தைகள் மழையைச் சட்டை செய்யாமல் ஓடியாடுகிறார்கள். மழைக்கு ஒதுங்கிவிட்டு, மீண்டும் கோட்டை வாயிலை அடைந்து நதிக்கரையில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

ஆளரவமற்ற வெளியில் பயணம்

மாலை மங்கத் தொடங்குகிறது. அன்று தங்க வேண்டிய ஹோம்ஸ்டேயின் உரிமையாளர் எங்களை அழைத்துச் செல்ல புனாகா சாங்குக்கே வந்துவிட்டார். முக்கியச் சாலையில் இருந்து சரேலென மண் சாலை ஒன்றில் வண்டியை அவர் திருப்பச் சொல்ல பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலவரமாகப் பார்த்துக்கொண்டோம்.

ஓம் ஃபார்ம்ஸ்டேயைப் புகைப்படங்கள் பார்த்தே ஆசையுடன் புக் செய்திருந்தார் மைத்ரேயி. சுற்றிலும் வயல்வெளிகள், வீட்டின் அருகே செர்ரிப் பூக்கள் பூத்துக் குலுங்கும் மரம் படர ஒரு சிற்றருவி என்று புகைப்படங்கள் ரம்மியமாகவே இருந்தன. ஆனால் இப்படி ஆஃப்-ரோடிங் போக வேண்டும் என்று சொல்லவில்லையே? மண் சாலை நீண்டுகொண்டே சென்றது.

"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?", என்ற என் கேள்விக்கு, "ஜஸ்ட் 25 மினிட்ஸ்" என்று உரிமையாளர் புன்னகையுடன் திரும்பிச் சொல்ல, உயிர் வெளியே வந்துவிடவா என்று தொண்டைக்குழிக்குள் கண்ணாமூச்சி ஆடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இல்லை. அட ஆடு, மாடு, கோழிகள்கூட இல்லை. மலை, மலை மேலும் மலைதான்.

ஒருவழியாக அரைமணி நேரம் கழித்து, அந்தி சாயும் நேரத்தில் ஓம் ஃபார்ம்ஸ்டேயை அடைந்தோம். ஓம் வாங்க்மோ போன்ற இனிய பெண்மணியை இதுவரை நான் சந்தித்ததே இல்லை! அவரும், அவரது மகன்களும் இணைந்து நடத்தும் ஃபார்ம்ஸ்டே அது.

மாடிப்படிகளில் அதிகம் ஏற முடியாது என்று மைத்ரேயி முன்னமே தெரிவித்திருந்த காரணத்தால், வீட்டின் முதல் மாடியில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த படுக்கை அறையை எங்களை நம்பி ஒதுக்கியிருந்தார்கள்! உள்ளே பீரோக்களோடு! அவ்வப்போது இளைய மகன் வந்து தன் ஆடைகளை அள்ளிக்கொண்டு சென்றது அத்தனை சிரிப்பாக இருந்தது எங்களுக்கு!

மயக்கும் மாலைப்பொழுது!

ஹாங்காங்கிலிருந்து ஓவியர்கள் குழு ஒன்றும் அங்கே தங்க வந்திருந்தது. மொத்தமாக அனைவரும் வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் அமர்ந்து சுஜா பருகியபடி, பப்பாரை அடைகள், அரிசி அப்பளங்கள் என்று உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தோம். சுற்றிலும் ஆரஞ்சு மரங்களில் பழங்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. மாலை மங்கி நிலவு மெல்ல மலை முகட்டிலிருந்து எட்டிப் பார்த்தது! அன்று சித்ரா பௌர்ணமி என்பதை அதன் வெளிச்சம் பறைசாற்றிக்கொண்டிருந்தது.

குடும்பத்தின் முதல் மகன் பூட்டானைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மெல்லிய குளிர், கண் குளிர இயற்கை, வயிறு குளிர உணவு… இவை தவிர வேறென்ன வேண்டும்? "ஹாட் ஸ்டோன் பாத் வேண்டுமா? அருவிக்கரையில் ஏற்பாடு செய்யவா?", என்று அவர் கேட்க, வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினோம். அது எவ்வளவு பெரிய தவறு என்று அடுத்த நாள் காலை தெரிந்தது.

வீட்டுக்குள் நுழைந்தால், அம்மா, மகன்கள், மருமகள், இரண்டு உதவியாளர்கள் அனைவருமே கிச்சனில் வெகு பிசி! ஆண்கள் சரிசமமாக அனைத்து வேலையும் அடுப்படியில் செய்துகொள்கிறார்கள். நீயா, நானா யார் பெரியவன் என்ற போட்டியில்லை! இமா டாட்ஷி என்ற சிவப்பு மிளகாய் சீஸ் கூட்டு, ஈசே என்ற இடித்த சட்னி, வேக வைத்த சௌசௌ, வதக்கிய முட்டைகோஸ், வதக்கிய ஆஸ்பராகஸ், சுட்ட ஆற்று மீன், ஆற்று மீன் கறி, வெண்டக்காய் போட்ட சாஸ் ஒன்று, சிவப்பு அரிசிச் சோறு என்று அன்றைய இரவு உணவு பெரும் கொண்டாட்டமாக இருந்தது. சலசலக்கும் நீரோடையின் ஓசையையும், விட்டிகளின் கீச்சொலியையும் கேட்டுக்கொண்டு, ஏதோ ஒரு வனாந்திரத்தில் பாதுகாப்பான வீட்டில் நிலவொளியைப் பார்த்துக்கொண்டே படுத்திருப்பது எத்துணை இனிமையானது என்பதை ஒரு முறையாவது வாழ்வில் உணர வேண்டும்…

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

(கட்டுரையாளர் நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர்.எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம்பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது ‘அவள் விகடன்’ இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதிவருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும்வருகிறார்.)


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


விஜய்க்கு இது முதன்முறை!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon