மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

இருமொழிதான் அதிமுகவின் கொள்கை: முதல்வர்!

இருமொழிதான் அதிமுகவின் கொள்கை: முதல்வர்!

அதிமுகவின் கொள்கை எப்போதுமே இருமொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கையை அதிமுக எப்போதுமே ஆதரிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகவும், ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸை எதிர்க்காமல் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்ற செய்தியைச் சொன்னார். ஆனால், அதைக் கேட்பதற்குத் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்குத் துணிவில்லை” என்றார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 18 விழுக்காடாகக் குறைந்தது குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்புகையில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த முறை அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்தது போக குறைவான தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட்டது. அதனால்தான் வாக்கு வங்கி குறைந்துள்ளது” என்றார்.

மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய முதல்வர், “மாதம் 6,000 ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கும் தருவதாகச் சொன்னார்கள். நாடு முழுவதும் மாதம் 6,000 ரூபாய் கொடுத்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும், நகைக் கடன் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை வாரி இறைத்தார்கள். பச்சைப் பொய்யைச் சொல்லி மக்களிடம் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார்கள்” என்றார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். இப்போது தமிழ்நாட்டில் அவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. தமிழகத்துக்குக் காவிரியில் வந்து சேர வேண்டிய நீரை இப்போது திறந்துவிட சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றும் திமுகவைச் சாடினார்.

பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக வைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடியை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்தும் நேற்று முதல்வர் விளக்கம் அளித்தார். “பிற மாநிலங்களில் வசிக்கிற தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழில் படிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்காகத்தான் பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக வைக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டேன். ஆனால், மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிக்கிறேன் என்று எதிர்க்கட்சிகள் தவறாகக் குற்றம்சாட்டுகின்றனர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் என்னுடைய ஆட்சியும் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றித்தான் நடக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon