மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

நிபா தடுப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

நிபா தடுப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லையில் நிபா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் பலர் உயிரிழந்தனர். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாகப் பரவும் இந்த நோயானது மலேசியாவிலிருந்து கேரளத்துக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது. கடந்த வாரம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு நபர் நிபா வைரஸ் பாதிப்புகளுடன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. தற்போது அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிப்பிரிவில் சிகிச்சைக்கு வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தங்கியிருந்தவர்கள், சிகிச்சையளித்த செவிலியர்கள் உட்பட சுமார் 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக, கேரள – தமிழக எல்லையில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் புளியரை எல்லையில் மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியே வாகனங்களில் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதேபோல தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லைப் பகுதிகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் நிபா தடுப்பு குறித்து துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று (ஜூன் 6) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது, “தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்கள் வழியாக வருபவர்களைச் சோதனை செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம்” என்று தெரிவித்தார். சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேல் தலைமையில் ஏழு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தன் பேச்சில் குறிப்பிட்டார் விஜயபாஸ்கர்.

நிபா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் வகையில் சிறப்பு வார்டுகள் தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார் தமிழகச் சுகாதாரத் துறை கூடுதல் செயலர் வடிவேலன். தமிழக எல்லைப் பகுதியில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும், குறிப்பிட்ட பகுதியில் அதிகளவில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மருத்துவக் குழு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon