மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 10ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 6) மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. 17 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்தபோது அலெக்ஸ் கேரி 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த நேதன் கோல்டர் நைல் அதிரடியாக ஆட மறுபுறம் ஸ்மித் நிதானமாக விளையாடி ஓரிரு ரன்களைச் சேர்த்தார். 103 பந்துகளில் 73 ரன்களைச் சேர்த்த ஸ்மித் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். எனினும் அதிரடியாக விளையாடிய கோல்டர் நைல் 60 பந்துகளில் 8 பவுண்டர், 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் சார்லஸ் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஒசேன் தாமஸ், செல்டான் காட்ரெல் மற்றும் ஆந்திரே ரசெல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆஸ்திரேலிய அணியைப் போலவே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 190 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் காலி. எனினும் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடைசி வரை போராடினார். அவரும் அரைசதம் கடந்த நிலையில் வெளியேற ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியால் எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 47ஆவது ஓவர் வரையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அப்போது பந்துவீச வந்த மிட்செல் ஸ்டார்க் ஆட்டத்தின் போக்கையே ஆஸ்திரேலியா வசம் மாற்றிவிட்டார். மிட்செல் ஸ்டார்க்கின் அனல் பறக்கும் பந்துவீச்சில் அவருக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்தன. அதிரடியாக விளையாடி 92 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் ’பந்துவீச்சாளர்’ நேதன் கோல்டர் நைல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon