மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

கையடக்க வாஷிங் மெஷின்

கையடக்க வாஷிங் மெஷின்

டிஜிட்டல் டைரி! 17 - சைபர் சிம்மன்

இணையம் மூலம் நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் தளத்தில், புதுமையான திட்டங்கள், கேட்ஜெட்கள் அறிமுகத்துக்கான கோரிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அந்த வகையில் இப்போது கையடக்க வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்ய வாஷ்வாவ் (WASHWOW ) எனும் குழு முயற்சி செய்து வருகிறது.

சோப் தேவையில்லாமல், துணிகளைக் கசக்காமல், அடித்துத் துவைக்காமல், இந்தச் சாதனம் அழகாகத் துணி துவைத்துத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எப்படிச் சாத்தியம்? பக்கெட் ஒன்றில் தண்ணீரை நிரப்பி, அதில் துவைக்க வேண்டிய துணியைப் போட்டு இந்தச் சாதனத்தை முக்கினால், இந்தச் சாதனம் எலக்ட்ரோலைசிஸ் எனும் முறைப்படி, துணியில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடுவதாக இச்சாதனத்துக்கான கிஸ்டார்ட்டர் பக்கம் தெரிவிக்கிறது.

கையடக்கச் சாதனம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். எனவே பயணங்களின்போது பயன்படுத்த ஏற்றது. துணிகள் என்றில்லை, பொம்மை, சமையலறைப் பொருட்கள் போன்றவற்றையும் இதன் மூலம் சுத்தம் செய்யலாம்.

இந்தப் புதுமையான சாதனத்தை அறிமுகம் செய்ய கிக்ஸ்டார்ட்டரில் கேட்டதைவிட அதிக நிதி கிடைத்திருக்கிறது.

அடுத்த தலைமுறை வாஷிங் மெஷின் எனக் குறிப்பிடப்படும் இந்தச் சாதனம் குறித்து மேலும் விவரங்களுக்கு:

கூகுள் மேப்பில் ரயில், பஸ் சேவைகள்!

கூகுள் மேப்ஸ் எனும் பெயரில் கூகுள் வழங்கி வரும் வரைபடச் சேவையை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். கால் டாக்சியில் போகும்போது, அநேகமாக அதன் டிரைவர் டாஷ்போர்டில் கூகுள் வரைபடத்தைப் பார்த்தபடி வழியைத் தெரிந்துகொள்வதை கவனித்திருக்கலாம். உங்களுக்கேகூட இருப்பிடம் தொடர்பான சந்தேகம் வரும்போது, கையில் உள்ள ஸ்மார்ட் போனில், கூகுள் வரைபடச் சேவையை நாடியிருக்கலாம்.

நீங்களாக நாடாவிட்டாலும்கூட, கூகுளில் இருப்பிடம் சார்ந்த தகவலைத் தேடும்போது வரைபடத்தின் மேல் கூகுள் அந்தத் தகவலை இடம்பெறச் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். விஷயம் என்னவென்றால், வரைபடச் சேவை சார்ந்த மூன்று புதிய வசதிகளை கூகுள் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த வசதிகள் மூலம், நீங்கள் உள்ளூர் பஸ் பயண நேரத்தைத் தெரிந்துகொள்ளலாம். ரயிலின் தற்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளலாம். போக்குவரத்துக்கான மாற்று வழிகளையும் நாடலாம்.

நீங்கள் கூகுள் வரைபடச் சேவையை அடிக்கடி பயன்படுத்துபவர் எனில், அதில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவல்கள் இடம்பெறுவதையும் கவனித்திருக்கலாம். லைவ் பீட் எனப்படும் இந்தப் போக்குவரத்து நெரிசல் விவரங்களைக் கொண்டு, கூகுள் வரைபடம் இப்போது குறிப்பிட்ட இடத்தில் உள்ளூர் பேருந்தில் பயணிக்க எவ்வளவு நேரம் ஆகும் எனக் கணித்துச்சொல்கிறது.

கூகுள் வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தையும் செல்லுமிடத்தையும் சமர்ப்பித்து, போக்குவரத்து (டிரான்சிட்) எனும் பட்டனை கிளிக் செய்தால், அப்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, செல்லுமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கூகுள் தெரிவிக்கும். சரியான நேரத்தில் செல்லும் என்றால் பச்சை நிறத்திலும் தாமதமாகும் என்றால் சிவப்பு நிறத்திலும் இந்தத் தகவல் சுட்டிக்காட்டப்படும்.

இந்தச் சேவை முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. சென்னை, மைசூரு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 இந்திய நகரங்களில் முதல் கட்டமாக இந்தச் சேவை அறிமுகம் ஆகிறது.

இதேபோலவே, கூகுள் வரைபடத்தில் தொலைதூர ரயில்களின் நிலையையும் தெரிந்துகொள்ளலாம். வரைபடத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையம் அல்லது இருப்பிடத்தின் பெயரைத் தெரிவித்ததுமே அந்த மார்க்கத்திலான ரெயில்கள் குறித்த தகவல்கள் திரையில் தோன்றும். ஒவ்வொரு ரெயிலுக்குமான தற்போதைய நிலையையும் அதில் பார்க்கலாம்.

குறிப்பிட்ட அந்த ரெயில் இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும், அது தாமதமாகுமா என்பது போன்ற விவரங்களை ஸ்மார்ட் போன் திரையிலேயே தெரிந்துகொள்ளலாம். கூகுள் கடந்த ஆண்டு கையகப்படுத்திய வேர் ஈஸ் மை ட்ரைன் என்னும் செயலியின் உதவியோடு இந்த வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.

மூன்றாவது சேவை, உங்கள் இருப்பிடத்திற்குச் செல்வதற்கான மாற்றுப் போக்குவரத்து வழிகள் தொடர்பான பரிந்துரை. எந்த மார்க்கத்தில் செல்வதாக இருந்தாலும் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய ஆட்டோ அல்லது பொதுப் போக்குவரத்தில் எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற விவரங்களை கூகுள் வழங்குகிறது. முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் வரைபடத்தின் இந்தப் புதிய வசதிகள் குறித்து மேலும் அறிய விரும்பினால் கூகுள் வலைப்பதிவுக்குச் செல்லவும்.

தலைவலியை குணமாக்கும் செயலி

மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இனிப்பான செய்தியாக, ஒரு செயலி அறிமுகமாகியிருக்கிறது. ‘ரிலாக்ஸ் ஏ ஹெட்’ (RELAXaHEAD ) எனும் இந்தச் செயலி, தலைவலியைக் குறைப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்கிறது.

தலைவலிக்குப் பலவிதமான சிகிச்சைகள் இருக்கின்றன. மருந்து மாத்திரைகள் தவிர, பழக்க வழக்கம் சார்ந்த சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையான தசைகளை மாற்றி மாற்றி அழுத்தத்துக்குள்ளாக்கி ரிலாக்ஸ் செய்யும் பயிற்சி தலைவலி ஏற்படுவதைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த எளிய சிகிச்சை முறையை ஸ்மார்ட்போன் வாயிலாகப் பரிந்துரைக்கும் வகையில் ’ரிலாக்ஸ் ஏ ஹெட்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் பயன்பாடு தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அது தொடர்பான விவரங்கள் நேச்சர் டிஜிட்டல் மேகசைன் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைவலி சிகிச்சைக்குப் பழக்க வழக்கம் சார்ந்த பயிற்சிகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், பெரும்பாலான நோயாளிகள் அவற்றைத் தொடர்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தச் செயலி இத்தகைய பயிற்சியை மேற்கொள்வதற்கு எளிதாக வழிகாட்டும் எனக் கருதப்படுகிறது.

இந்தச் செயலிக்கான பரிசோதனையில், இது தலைவலி தோன்றுவதை வெகுவாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் இந்தச் செயலியை டவுன்லோடு செய்ய:


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon