மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல்?

அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல்?

அறப்போர் இயக்கம் எழுப்பும் குரல் - பியர்சன் லினேக்கர். ச.ரே

கடந்த சில ஆண்டுகளில் குட்கா ஊழல், உறுப்பு மாற்று ஊழல் என மருத்துவ, சுகாதாரத் துறையில் நடக்கும் ஊழல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த அதிர்ச்சியை மேலும் கூட்டும் விதமாக ‘அறப்போர் இயக்கம்’ என்னும் அமைப்பு அரசு மருத்துவமனை ஊழல்களைப் பற்றிக் குரல் எழுப்பியிருக்கிறது. இந்த அமைப்பு, தமிழக அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி அதற்கான ஆதாரங்களைக் கடந்த 17.5.2019ஆம் தேதி வெளியிட்டது. அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள் அதிர்ச்சியூட்டுபவையாக அமைகின்றன.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக எந்த அடிப்படையில் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது?

2017ஆம் ஆண்டில் ‘பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள், செக்யூரிட்டிகள், மேற்பார்வையாளர்களை நியமிக்கும் விஷயத்தில் முறைகேடாக டெண்டரை பெற்றது, இந்த நிறுவனமானது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவின் சகோதரர் பங்கு வகிக்கும் நிறுவனம் என்பதை அந்த டெண்டரில் இருக்கும் கையொப்பத்தை வைத்துக் கண்டுபிடித்து அன்றே சொன்னோம். பல சட்ட விதிகளைத் தளர்த்திப் பெரும் முறைகேடுகளை ராம்மோகன் ராவ் செய்துள்ளதாக உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அன்றே புகார் அளித்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பலமுறை கோரியும் லஞ்ச ஒழிப்புத் துறை ராம்மோகன் ராவ் மீது இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்றுவரை பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம் செய்துகொண்டிருக்கும் முறைகேடுகளும் ஊழல்களும் ஏராளம். அவற்றை அரசு ஆவணங்களைக் கொண்டு நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே குற்றம் சாட்டுகிறோம்.

நீங்கள் வெளிக்கொண்டுவந்ததாகக் கூறும் ஆவணங்கள் கூறுவது என்ன?

அரசு மருத்துவமனைகளில் குறைவான அளவில் பணியாளர்களை அமர்த்திவிட்டு, அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதுபோல் போலியான கணக்குக் காட்டிப் பணத்தைக் கொள்ளை அடித்துவருகிறார்கள்.

இதற்காக இவர்கள் இரண்டு பதிவேடுகள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று நிறுவனத்தின் அதிகாரபூர்வமான பதிவேடு. உண்மையான ஊழியர்களின் வருகை எண்ணிக்கை அடங்கியது. அதனை வைத்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள். அதை யாருக்கும் வெளியே காட்ட மாட்டார்கள்.

ஒன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய பதிவேடு. அரசாங்கத்திடம் கணக்குக் காட்ட வேண்டிய பதிவேட்டில்தான் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கேற்ற வகையில், நிறைய ஆட்கள் வந்ததாகக் கூறிப் போலியான கையொப்பங்களை இட்டு நிரப்பித் தங்களிடம் நிறைய ஆட்கள் பணிபுரிவதாகக் கணக்குக் காட்டிக் கொள்ளை அடித்துவருகிறார்கள்.

பெரும்பாலும் நாங்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாகத் திரட்டிய தகவல்களை வைத்தும்தான் முடிவுக்கு வந்தோம்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். குழந்தை நல நிறுவனம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 16.4.2019 அன்று நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான பதிவேட்டில் பதிவான துப்புரவுப் பதிவாளரின் எண்ணிக்கை 70. அதே 16.10.2019 அன்று 91 பேர் வந்திருப்பதாகப் போலிப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் 22 பேரைக் கூடுதலாகக் கணக்குக் காட்டி அரசாங்கத்திடம் பணம் பார்த்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 70 அரசு மருத்துவமனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதேபோல 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

மருத்துவமனையில் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் முறையிலிருந்து நவீன பயோமெட்ரிக் முறைக்கு மாற வேண்டும் என்று ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று இந்த அம்சத்தைப் பின்பற்ற நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். அதன் அடிப்படையில் 2017 வருடத்தின் மத்தியில் நாங்கள் கொடுத்த அழுத்தத்தால் பெயருக்காக ஒரு சில இடங்களில் மட்டும் அதை நடைமுறைப்படுத்தினார்கள். பெரும்பாலான தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை.

ஆனால், இந்த பயோ மெட்ரிக் முறையும் முறைகேடுகளிலிருந்து தப்பிக்கவில்லை. இந்த பயோ மெட்ரிக் முறையில் பதிவிடப்படும் வருகையானது மருத்துவ நிர்வாகத்திற்குக் காட்டப்படுவதில்லை. அப்படி அவர்கள் கேட்டாலும் அவர்கள் அதை எளிதில் பொய்க் கணக்கு காட்டி சரி செய்துவிடுகிறார்கள்.

இதன் அடிப்படையில்தான் பத்மாவதி ஹாஸ்பிடல் அண்ட் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் என்கிற நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாகக் கூறுகிறோம். எப்படிப் போலியான வருகைப் பதிவேட்டைத் தயார் செய்தார்களோ அதேபோல் போலியான பில்களையும் தயார் செய்து பல பொருட்களைத் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிக்கு வாங்கியதாகவும் அரசுக்குக் கணக்குக் காட்டியுள்ளார்கள். ஆனால் நேரில் சென்று ஆய்வு செய்தபோதுதான் அவர்கள் கணக்குக் காட்டிய பொருட்கள் அங்கு இல்லை என்பது தெரிந்தது.

இந்த முறைகேடுகளால் அரசு மருத்துவமனை அடைந்துள்ள பாதிப்புகள், பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?

பத்மாவதி நிறுவனமானது அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிக்காக 100 பேர் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 70 நபர்களைத்தான் பணிக்கு நியமிக்கிறார்கள். ஆனால் 100 நபர்களுக்கான சம்பளப் பணத்தை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் ஒரே ஊழியர், இரண்டு, மூன்று நபர்களின் வேலைகளைச் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த 70 பேர் தங்களின் சக்திக்கு மீறி வேலை வாங்கப்படுகிறார்கள். இதன் மூலம் பணியாளர்களுக்கு மன அழுத்தம், கவனக் குறைவு ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகின்றன. சாமானிய மக்களிடம் அவர்கள் லஞ்சம் வாங்குவது இயல்பாக மாறிவிட்டது.

பெரும்பாலான ஊழியர்கள் ஓவர்டைம் பார்க்கிறார்கள். அந்த ஓவர்டைம் நேரமானது அதிகப்படியாகச் சென்றால் அவர் ஊதியத்திலிருந்து 5% என கணக்கிட்டு, அதாவது 200 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டும் என்கிறது ஒப்பந்தம். ஆனால் பத்மாவதி நிறுவனம் இந்த விதியைக் கண்டுகொள்வதே இல்லை. வேலை பார்க்கும் ஊழியர்களுக்குச் சம்பள ரசீது கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றுவதில்லை

பொதுவான ஒப்பந்த விதிகளின்படி (3.1.12.பக்கம் 157) பணியாளர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் சம்பளப் பிடிப்பில்லாமல் விடுப்பெடுக்கலாம். விதிப்படி விடுமுறை எடுத்தாலும் அவர்கள் விடுப்பு எடுத்த நாளிலும் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்கிறார்கள்.

பல நேரங்களில் இவர்கள் பத்மாவதி நிறுவனம் இயக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வேலை பார்க்க அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அரசு மருத்துவமனையில் கையொப்பம் இட்டுவிட்டு அரசு கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரகசியமாகத் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்க வைப்பது அப்பட்டமான விதிமீறல்.

இவ்வளவு நடந்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையா ?

மேற்பார்வையிட அதிகாரிகள் வரும் விஷயம் பற்றி முன்கூட்டியே தகவல் அறிந்து அவர்கள் வருவதற்குள் வருகைப் பதிவேடு போன்றவற்றைச் சரி செய்துகொள்வார்கள். மேற்பார்வையிடும் அதிகாரிகள் அடிக்கடி செய்தால் பிரச்சினையே இருக்காது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்த நிறுவனத்துடன் கைகோத்து அவர்களும் இந்த முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த ஊழல், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்றுவருகிறது. இதற்கு மேலாவது லஞ்ச ஒழிப்புத் துறை விழித்துக்கொண்டு ராம்மோகன் ராவ், பத்மாவதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ஊழல் மட்டுமல்ல

அறப்போர் இயக்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பணியாளர்களுக்கு ஏற்பட்டுவரும் பெரும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார வீழ்ச்சி, தனியாரை ஊக்குவித்தல், எல்லா துறைகளையும் லாப நோக்கில் பார்க்கும் மத்திய மாநில அரசின் கொள்கை முடிவுகள் என இவை அனைத்தும் நாட்டில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதைப் பெரிதாகப் பாதித்துள்ளது. தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை உறிஞ்ச எடுத்துக்கொள்ளப்படும் கவனமும் சிரத்தையும் அவர்களின் அடிப்படை நலன்களில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் சங்கம் வைத்துப் போராடுவது இயற்கையாக நடக்கிறது.

இந்தப் போராட்டங்களின் சிக்கல்களிலிருந்து தப்பிக்க மேற்குலகில் 'Hire and fire' முறையை (எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கும் முறை) கொண்டுவந்தனர். இந்த முறையை இந்தியாவும் கடந்த பத்தாண்டுகளில் வெகு வேகமாக நடைமுறைப்படுத்திவருகிறது. நிரந்தரமற்ற ஒப்பந்த அடிப்படையில் வேலை என்பது எல்லாத் துறைகளைப்போல மருத்துவத் துறையிலும் யதார்த்தமாகிவிட்டது.

ஒருகாலத்தில் அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டு அரசு சம்பளம் மற்றும் அரசு சலுகைகளைப் பெற்ற தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர், செக்யூரிட்டி, மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இன்று எல்லாச் சலுகைகளையும் ஏன், அடிப்படை உரிமைகளைக்கூட இழந்து நிற்கின்றனர்.

இது ஊழல் என்னும் கோட்டைத் தாண்டி மனித உரிமை மீறல் என்னும் தளத்திற்கு நகர்வதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் சமூக ஆர்வலர்களின் குரல்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon