மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,319 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்ற ஒரே தொகுதியும் தேனிதான். தேனி தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட சம்பவங்களை ரவீந்திரநாத் வெற்றியோடு தொடர்புப்படுத்திய எதிர்க்கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்க, தேனியில் மட்டும் எப்படி அதிமுக வெற்றிபெற்றது என்ற கேள்வியையும் எழுப்பின.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று (ஜூன் 6) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தேர்தலில் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மக்களவை உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் விருப்ப மொழி தொடர்பான முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு குறித்து பேசியவர், “கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மும்மொழிக் கொள்கை என்றால் என்னவென்றே புரிந்திருக்காது. அவ்வளவு பெரிய அறிவாளிகள் இவர்கள். முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியது தவறானது. ஆளத் தகுதியற்றவர்கள் இவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும் படிக்க
ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!
ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!
ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!
தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!