மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: கருணாஸ்

99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: கருணாஸ்

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் கருணாஸ்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் போட்டியிடுகிறார். இதற்காக சேலத்தில் நாடக நடிகர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த அவர் அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராகி ஏழு ஆண்டுகள் கடந்த எந்த ஆயுட்கால உறுப்பினரும் தேர்தலில் போட்டியிடலாம். அந்தவகையில் புதிதாக போட்டியிடும் அத்தனை பேரையும் நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். யாரும் யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டு வைக்கலாம். ஆனால் ஆதாரத்துடன் கூறவேண்டும். கடந்த முறை இதற்கு முந்தைய தலைவர், பொதுச்செயலாளர் மீது நாங்கள் குற்றச்சாட்டு வைத்தோம். அதை நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. எங்கள் மீது குற்றச்சாட்டு வைப்பவர்கள் ஆதாரம் இருந்தால் வைக்கலாம். அது உறுதியானால் அதற்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று பேசினார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “99 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. ஒன்றிரண்டு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அது குறித்து உறுப்பினர்களிடம் வெளிப்படையாக பேசியுள்ளேன். 1952க்கு பிறகு கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றிய ஒரே அணி பாண்டவர் அணிதான்.

எஸ்.பி சினிமாஸுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நடிகர் சங்கம் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். சட்டப்படி அந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு நிலத்தை மீட்டெடுத்து அதில் தற்போது கட்டிடமும் எழுப்பப்பட்டு வருகிறது. 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon