மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

முதல்வர் ட்விட் நீக்கம்: அதிமுக விளக்கம்!

முதல்வர் ட்விட் நீக்கம்:  அதிமுக விளக்கம்!

வெளிமாநிலங்களில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வரின் ட்விட்டர் பதிவு நீக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்படுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “தமிழ் பேசாத மாநிலங்களில் ஆப்ஷனல் (மூன்றாவது) மொழியாக தமிழை வைத்தால் அது பழமையான தமிழ் மொழிக்கு செய்கிற பெருந்தொண்டாக இருக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. அடுத்த சில மணி நேரங்களில் முதல்வரின் ட்விட் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக, முதல்வருக்குத் தெரியாமலேயே முதல்வர் பெயரில் ட்விட்டா? என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டுள்ளோம்.

இதுபற்றி சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “இரு மொழிக் கொள்கையிலிருந்து அதிமுக என்றைக்கும் பின்வாங்காது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும். இதில் எந்த மாறுபாடும் இல்லை. முதல்வரின் ட்விட்டர் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தனது ட்விட்டில், ‘பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக கொண்டுவர வேண்டும். உலகின் தொன்மையான மொழிக்குச் செய்யும் கவுரவமாக அது அமையும்’ என்றுதான் தெரிவித்திருக்கிறார். தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் போடப்பட்ட பதிவு அது. இதனை திரித்து அரசியலாக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “அந்த ட்விட்டின் நோக்கம் என்னவென்றால், முதல்வர் டெல்லி சென்றபோது அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் இல்லை என்றும், பல மாநிலங்களில் இதுபோல தமிழாசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுவதாகவும், இதனால் தமிழ் ஆர்வலர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியாத சூழல் உள்ளதால் இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டனர். அண்டை மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் இதுபோன்ற கோரிக்கைகள் வந்துள்ளன. இதனடிப்படையில் பிற மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தமிழை தொடர்ந்து விருப்ப பாடமாக படித்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கக் கோரி இடப்பட்ட பதிவுதான் அது. அதனை அரசியல் கட்சியினரும், சில ஊடகங்களும் தவறாக திரித்து வெளியிட்டதையடுத்து முதல்வர் தனது ட்விட்டினை நீக்கியுள்ளார்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது, இது தான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கவே மாட்டோம், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon