மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

நீட்டும் மத்திய அரசின் படுகொலைகளும்: தலைவர்கள்!

நீட்டும் மத்திய அரசின் படுகொலைகளும்: தலைவர்கள்!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைசியா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது தமிழகத்தில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முடியாது என்றே மத்திய அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 6) அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மாணவிகளின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டுகளில் மூன்று மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இம்மரணங்கள் தற்கொலை என்றாலும் உண்மையில் மத்திய அரசின் மருத்துவ கல்விக் கொள்கையால் நடத்தப்படும் படுகொலைகளே. நீட் விலக்கு என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய மோடி அரசு செவிமடுக்காமல் அடம்பிடித்து நீட் தேர்வை நடத்தி வருவதால் மாணவிகளின் உயிர் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இக்கொடுமைகளுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மோடி - எடப்பாடி அரசின் கூட்டுச் சதியினால் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு தகர்ந்துகொண்டுள்ளது. பல உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. எனவே, உடனடியாக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதுடன் குடியரசுத் தலைவரது ஒப்புதலுக்கு காத்துள்ள இரண்டு மசோதாக்களுக்கும் தாமதமின்றி ஒப்புதல் வழங்கிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள அவர்,

மாணவிகளது குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணத்தொகையினை அரசு வழங்க வேண்டுமெனவும், மாணவ-மாணவிகள் இத்தகைய கொடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும் ஒன்றுபட்டு போராடி நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அபத்தமான கொள்கையின் அடிப்படையில் திணிக்கப்பட்ட 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் தங்களின் உயிர்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களின் தற்கொலைக்கு காரணம் 'நீட்' தேர்வு தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.'நீட்' தேர்வு பின்னடைவுக்காக இது போன்ற தவறான முடிவுகளை இனியும் எந்த மாணவரும் எடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசு கூறுவதைப் போன்று 'நீட்' தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயருகிறது என்பதையோ, மருத்துவக் கல்வி கட்டாயமாக்கப் படுகிறது என்பதையோ எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 'நீட்' தேர்வை நியாயப்படுத்துவதற்கு ஒரே ஒரு காரணம் கூட இல்லை என்பது தான் உண்மை. எனவே, பிடிவாதமாக இனியும் 'நீட்' தேர்வுகளை நடத்தி, மாணவ, மாணவியரின் தற்கொலைகளை தொடர்கதையாக்காமல், 'நீட்' தேர்வை ரத்து செய்து சமூகநீதியை மலரச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவிகள் இருவரும். அந்த தன்னம்பிக்கையால்தான் நீட்டை எதிர்கொண்டனர். ஆனால் சூழ்ச்சி, சதி, வஞ்சகமே உருவான நீட் இவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. ஆம். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொலைக்கருவிதான் நீட். சாதி, மதம், மொழி, இனம், வர்க்கம், நகரம், கிராமம் என்கின்ற பல்வேறு வகைப்படுத்தல்களால் சமூகப் பிளவுகளை நிலைநிறுத்தும் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon