மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ரூ.1.7 கோடிக்கு விலைபோன ரோல்ஸ் ராய்ஸ்!

ரூ.1.7 கோடிக்கு விலைபோன ரோல்ஸ் ராய்ஸ்!

நீரவ் மோடியின் கார்களை மீண்டும் விற்பனை செய்ததில் அரசுக்கு ரூ.42 லட்சம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. கார்களுக்கான ஏலத்தில் மொத்தம் ரூ.2.9 கோடி கிடைத்துள்ளது.

போலியான ஆவணங்களைக் கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடிய மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் அவரது சொத்துகளை விற்பனை செய்து கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீரவ் மோடியின் விலையுயர்ந்த 7 கார்கள் அரசுக்குச் சொந்தமான மெட்டல் ஸ்கிராப் டிரேடிங் கார்பரேஷன் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டன. அதில் ஐந்து கார்கள் ரூ.2.9 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

ஏற்கெனவே நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்சிக்குச் சொந்தமான 13 ஆடம்பரக் கார்கள் மெட்டல் ஸ்கிராப் டிரேடிங் கார்பரேஷன் நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டபோது, ரூ.3.29 கோடி கிடைத்தது. இக்கார்களில் நான்கு கார்கள் ஜூன் 4ஆம் தேதி மீண்டும் ஏலத்தில் விடப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 25ஆம் தேதி நடத்தப்பட்ட முந்தைய ஏலத்தில் கார்களுக்கான முழுத் தொகையும் வழங்கப்படாததால் இக்கார்கள் மீண்டும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், போர்ச்சே பனாமெரா, மெர்சிடஸ் பென்ஸ், டொயோடா ஃபார்ச்சூன், இன்னோவா மற்றும் ஹோண்டா பிரியோ கார்கள் இதில் அடக்கம்.

இதில், ரோல்ஸ் ராய்ஸ் கார் ரூ.1.7 கோடிக்கும், போர்சே கார் ரூ.60.25 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. இவ்விரண்டுக்கும் சேர்த்து அரசுக்கு ரூ.2.30 லட்சம் கிடைத்துள்ளது. முந்தைய விற்பனையில் இவ்விரு கார்களுக்கும் ரூ.1.88 கோடி மட்டுமே கிடைத்தது. ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றின் சந்தை விலை ரூ.5.25 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில் நீரவ் மோடியின் பயன்பாட்டில் இருந்ததால் இக்காருக்கு ரூ.1.7 கோடி மட்டுமே இந்த ஏலத்தில் கிடைத்துள்ளது. அதேபோல, ரூ.80 லட்சத்துக்கு மேல் தொடக்க விலை கொண்ட போர்ச்சே காருக்கு இந்த ஏலத்தில் ரூ.60 லட்சம் கிடைத்துள்ளது. பென்ஸ் காருக்கு ரூ.53.76 லட்சமும், இன்னோவா காருக்கு ரூ.18.06 லட்சமும், 2 ஹோண்டா பிரியோ கார்களுக்கு தலா ரூ.2.7 லட்சமும் கிடைத்தது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon