மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

நீட் பலி விவரமும், புள்ளி விவரமும்!

நீட் பலி விவரமும், புள்ளி விவரமும்!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 5) வெளியானதில், இரு மாணவிகளின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டும் மருத்துவத்துக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குறுதி அளிக்க, அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வினை மாநிலங்களே நடத்தும் என்று அறிவித்து தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு, லட்சக்கணக்கான மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நீட்டுக்கு எதிராக வாக்களித்து 38 இடங்களில் திமுக கூட்டணி ஜெயித்தது.

ஆனாலும் தேசிய அளவில் முடிவுகள் வேறு மாதிரி அமைந்ததால் நீட் தொடர்கிறது. நீட் தற்கொலைகளும் தொடர்கின்றன.

நீட் தேர்வு முடிவினை எதிர்பார்த்து ஆர்வத்தோடு காத்திருந்தவர்களை விட பதற்றத்தோடு காத்திருந்தவர்களே தமிழகத்தில் அதிகம். ஏனெனில் நீட் தேர்வினை எதிர்கொண்ட விதம் அவ்வாறு.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் நகர் நம்பிராஜன் மீன் வியாபாரி. இவரது மகள் வைசியா தான் டாக்டராக வேண்டும் என்று கனவுகொண்டவர். பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் படித்தவர், மருத்துவக் கனவோடு நீட் தேர்வு எழுதினார்.

நேற்று வெளியான தேர்வு முடிவில் வைசியாவுக்கு குறைந்த மதிப்பெண்களே கிடைத்ததால், இந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவர் இடம் கிடைக்காது என்று கருதினார் வைசியா.

தன் பல ஆண்டுக் கனவு பொசுங்கிப் போனதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னையே பொசுக்கிக் கொள்ள முடிவெடுத்து வீட்டில் நேற்று மதியம் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டுவிட்டார் வைசியா. அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியோடு பட்டுக்கோட்டை ஜிஹெச் கொண்டு செல்ல, வைசியா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர் டாக்டர்கள்.

நீட் என்ற நெருப்பு வைசியா என்ற 17 வயது மலரை பொசுக்கிச் சுட்டுப் பிணமாகிவிட்டது.

இதேபோல திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் ஆண்டிப்பட்டியை சேர்ந்த செல்வராஜின் மகள் ரிதுஸ்ரீ பிளஸ் டூவில் 600க்கு 490 மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருந்தார். பனியன் வேலைக்குச் சென்ற அவரது அப்பாவும், அம்மாவும் கூட மகள் டாக்டராகிவிடுவாள் என்று ஆசையாக நீட் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தனர்.

நேற்று காலை பெற்றோர் இருவரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்விட்டனர். மதியத்துக்கு மேல் நீட் தேர்வு முடிவு என்னாச்சு என்று அறிந்துகொள்வதற்காக ரிதுவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் போன் ரிங் போய்க் கொண்டே இருந்தது. பலமுறை போன் செய்தும் ரிது போனை எடுக்காததால் பதற்றமான தாய், தந்தை இருவரும் வேலைக்கு பர்மிஷன் போட்டுவிட்டு உடனடியாக வீட்டுக்கு விரைந்தனர். வீட்டுக்குள் தன் அம்மாவின் சேலையிலேயே தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட்டாள் ரிதுஸ்ரீ.

இந்த இரண்டு தற்கொலைகளும் தமிழ்நாட்டையே உலுக்கியெடுக்கின்றன. நீட் டால் தற்கொலை செய்துகொண்ட இரு மாணவிகளுமே மீன்விற்பனை செய்யும், பனியன் கம்பெனியில் வேலை செய்யும் பெற்றோரின் மகள்கள். சமூகத்தின் நலிந்த பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீட் வழக்கில் குறிப்பிட்டது இன்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனிதாவில் இருந்து இன்று ரிது ஸ்ரீ, வைசியா ஆகிய மாணவிகள் நீட் தற்கொலைகள் வரை தொடர்கின்றன. இனியும் மத்திய பாஜக அரசு தமிழக மாணவிகளின் உயிரோடு விளையாடாமல், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட்டுக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரவேண்டும். இப்பிரச்சினையை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் சொல்லும் விவரம்!

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளின்படி முதல் 50 இடங்களில் 43 பேர் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்கள். வெறும் 7 பேர்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிலும் ஒரே ஒருவர்தான் பெண். தவிர முதல் 50 இடங்களில் எஸ்.சி. எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை.

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 6 லட்சத்து 31 ஆயிரத்து 473 பேர் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர். இது 51%. அதேநேரம் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினரின் தேர்ச்சி சதவிதம் 57% ஆக இருக்கிறது.

நீட் தேர்வு முடிவுகளின் புள்ளிவிவரங்கள் ஒருபக்கம் வெளியாகிக் கொண்டே இருந்தாலும், நீட் தேர்வின் பலி விவரங்களும் வெளியாகி தமிழகத்தை தகிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon