மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

வாளுக்குப் பதிலாக மைக்!

வாளுக்குப் பதிலாக மைக்!

ஸ்டாலின் ராஜாங்கம்

அரசியல் தலைவர்களுக்குப் பல்வேறு வடிவங்களில் புகைப்படங்கள் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைத் தொண்டர்களிடமும் பொதுவெளியிலும் உலவவிடுவதன் மூலம் தங்களைப் பற்றிய வெகுமக்களுக்கான பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இந்த வகையில் பலவகையான படங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு படம் எல்லாத் தலைவர்களுக்கும் தவறாமல் இருந்துவிடுகிறது. மைக் என்ற ஒலிவாங்கியின் முன் நின்று முஷ்டியை உயர்த்தியோ, கையை நீட்டி எச்சரிக்கும் தொனியுடன் ஆவேசம் காட்டுவது போன்றோ ஒரு படமாவது இருந்துவிடுகிறது.

மேடையில் பேசுவது அரசியலில் முக்கியப் பணி. கருத்தியல், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காட்டிலும் பேசத் தெரிந்தவரே தலைவர் என்ற அர்த்தம் உருவாகி இங்கு நெடுநாளாகிவிட்டது. வெகுமக்களும் நன்றாகப் பேசத் தெரிவதே தலைவருக்கான தகுதியென்று நம்பும் நிலையே இங்கிருக்கிறது.

ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்வதே பேச்சுக்கான தேவை. பிரச்சாரம் செய்வதென்றால் மக்கள்திரளுக்கு முன்னர் என்ற பொருளையும் நாம் பெறுகிறோம். இதன்படி பார்த்தால் பேச்சு என்பது நவீன ஜனநாயகக் கருத்தியலை அடியொற்றி உருவானதாகும். எனவே மைக் முன்னால் பேசுவது என்ற யோசனையே கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் உருவாகி செல்வாக்கு பெற்றதாகிறது. அதேபோல பேச்சுக்குத் தேவையான மைக், ஒலிபெருக்கி போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகள் மின்சாரத்தின் வருகையினால் உருவாக்கம் பெற்றன.

மன்னராட்சியும் அதன் மதிப்பீடுகளும் முடிந்து மக்களாட்சி என்ற வடிவத்தின் கீழ் ஐரோப்பியர்கள் காலத்தில் பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் உருவாயின. உள்ளூர் அளவில் செல்வாக்குப் பெற்றிருந்த சாதி போன்ற குழு வாதங்களைத் தாண்டி நாட்டின் குடிமகன் என்ற பொது அடையாளத்தோடு மக்களைப் பார்க்கும் போக்கு, அழுத்தம் பெற்றன. பொது நீதி, பொது உரிமை, பொது நிர்வாகம் போன்று ‘பொது’வின் பெயரால் அடையாளங்கள் வலியுறுத்தப்பட்டன. அரசை நடத்த வாரிசுகள் என்பவை பின்னுக்குப்போய் மக்களிலிருந்து உருவாகிச் செல்பவர் அரசை ஆள்வார் என்ற அணுகுமுறை உறுதி செய்யப்பட்டது. மக்களாட்சி, ஜனநாயகம் போன்ற வார்த்தைகளில் உள்ள “மக்கள்”, “ஜனம்” போன்ற சொற்கள் எந்த அடையாளமும் இல்லாமல் மக்களைப் பொதுவான நிலையில் நோக்குவதேயாகும்.

இதன்படி அரசை நடத்தும் பிரதிநிதியைத் தேர்வு செய்வதற்கு அப்பிரதிநிதிகள் மக்களைச் சென்று சந்திக்க வேண்டியுள்ளது. எனவே மக்களாட்சியில் பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துடையவர்களேயானாலும் அவற்றைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே ஆதரவு திரட்டுவது அவசியமாகிறது. இப்போக்கு மன்னராட்சிக்குத் தேவையில்லை. எனவே இது முழுக்க முழுக்க மக்களாட்சி சம்பந்தப்பட்டதேயாகும்.

மக்களாட்சியின் ஆதாரமான கருவி

தத்தம் கருத்துகளைப் பரப்புவதற்குப் பிரதிநிதிகள் மக்கள் கூடுமிடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது அல்லது கூடுமிடங்களை உருவாக்க வேண்டியிருந்தது. மக்கள் தத்தம் பகுதிகளைத் தாண்டி மற்றொரு பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்று வருவதிலிருந்த உள்ளூரின் சாதி உள்ளிட்ட பாரம்பரிய தடைகளை இதற்காக அகற்ற வேண்டியிருந்தது. இதற்கான போராட்டங்களும் சட்டங்களும் இச்சூழ்நிலையில் உருவாயின. அவ்வாறு கூடும்போதே அவர்கள் ‘பொதுமக்கள்’ ஆகிறார்கள். வீதி, கோயில், சத்திரங்கள் போன்ற உள்ளூர் பொதுவெளிகள் உருவாகின்றன. இந்தியச் சமூகத்தில் ஊருக்கு மையமாக எல்லோரும் கூடும் மைதானம் என்ற பொதுவெளி கலாச்சாரம் இவ்வாறே உருவானது. தங்களுக்கான பாரம்பரிய சமூகத் தடைகளைத் தாண்டி பொதுமக்களாகக் கூடுமிடம் என்பதே இதன் பொருள். இத்தகைய ஊர் பொது மைதானங்கள், பிரச்சாரம் என்ற மக்களாட்சி முறையினால் அழுத்தம் பெற்ற பொதுவெளியாகும்.

மைதானம் என்ற பரந்த வெளியில் திரளாக மக்கள் கூடும்போது பிரச்சாரகர் அந்தப் பரந்த திரட்சிக்குக் கேட்கும் வகையில் பெருங்குரலெடுத்து நீண்ட நேரம் பேசுவது சாத்தியமில்லாதது. அந்த இடத்தில்தான் அனைவரும் கேட்கும் வண்ணம் ஒலியை அதிகப்படுத்திக் காட்டும் ஒலிபெருக்கி என்ற சாதனமும் ஒலியை வாங்கிச் செலுத்தக்கூடிய மைக் என்ற தொழில்நுட்பமும் வந்தது. இவ்வாறுதான் மைக் என்ற நவீன தொழில்நுட்பக் கருவி பொதுவெளி என்பதைக் கட்டமைக்க முக்கியமான கருவியானது. மக்களிலிருந்து பிரதிநிதித்துவம், பிரச்சாரம், மக்கள் கூடுகை போன்ற பொதுவெளிப் போக்குகளின் உச்சமாக மைக் அமைந்தது. எனவே மைக் என்பது மக்களாட்சி முறையின் அடிப்படை ஆதாரமானது.

மைக் தொழில்நுட்பம் வந்த பின்னால் பேச்சு வேறொரு வடிவம் எடுக்கிறது. குரல், தொனி, ஏற்ற இறக்கம், சத்தம், பேசும் நேரம் போன்றவற்றிற்கு வேறு பரிமாணத்தைத் தருகிறது. சொற்பொழிவு என்ற பாணி உருவாகிறது. தொடக்கத்தில் கிறிஸ்தவர்களின் பிரசங்கம், அவற்றைப் பின்பற்றிய நவீன சைவ இயக்கங்கள், நவீன மன்றங்கள் என்று சொற்பொழிவு முறை வளர்ச்சி பெறுகிறது. நவீன அரசியல் இயக்கங்களுக்கு மேடை பொழிவும் மேடைப்பொழிவுக்கு அரசியல் இயக்கங்களும் என்று தோள்கொடுக்க ஆரம்பித்த பின்னல்தான் மேடைபொழிவு என்பது அதன் அர்த்தத்தை அடைந்தது. பேசுவதும் பேச்சாளனும் முக்கியம் என ஆயிற்று.

எந்த அளவிற்கு மக்கள் திரட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுகிறோமோ அந்த அளவிற்கு தங்கள் கருத்தியல் பிரதிநிதித்துவம் பெறும் என்பதால் அக்குறிப்பிட்ட கருத்தியலைப் பேசும் லாகவம் இங்கு முக்கியத்துவம் பெற்றது. எனவே பேச்சை வெறும் கருத்து பரிமாற்றக் கருவியாக மட்டும் நிறுத்தாமல் அதை ஒரு கலையாக மாற்றித் தரும் பணி உருவானது. மைக் என்ற தொழில்நுட்பம்தான் பேச்சைக் கலையாக மாற்றியதற்குக் காரணமானது. பேச்சாளன் வெளிப்படுத்தும் எல்லா பாவத்திற்கும் இடம்தந்ததோடு கடைசியில் இருப்பவர் வரையிலும் சென்றுசேர உதவியது. இதன் மூலம் கூட்டத்தைக் கட்டிப்போட முடிந்தது. பேச்சாளன் உருவாக்க விரும்பிய உணர்ச்சிக்கேற்ப மக்களை மாற்ற முடிந்தது.

ரத்தம் சிந்தாத போர்

உரிமை அல்லது நீதியைக் கோரிப் போராடும் நவீன அரசியல் இயக்கங்களின் இயங்குமுறையில் தவிர்க்க இயலாத சில சட்டகங்கள் உண்டு. உரிமையைக் கோரிப் பிரச்சாரம் செய்யும்போது தங்கள் தரப்பைப் பாதிக்கப்பட்டதாகவும் எதிர்த் தரப்பை ஆதிக்கத் தரப்பாகவும் காட்ட வேண்டியிருக்கும். அந்த ஆதிக்கத் தரப்பின் சுரண்டலுக்கு, ஏமாற்றத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவதே நவீன அரசியல் அமைப்புகளின் நோக்கமாகவும் இருக்கிறது. எனவே பாதிப்பு, ஆதிக்கம் என்ற இரட்டை எதிர்மறை அவர்களின் சொல்லாடலில் முக்கியத்துவம் பெற்றது. பேச்சின் ஒரு பகுதியில் தங்களின் பாதிப்பை, தாங்கள் ஏமாற்றப்பட்டதை மனமுருகச் சொல்ல வேண்டிய அதேவேளையில் அப்போக்குக்கு எதிராக அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை மறுபகுதியில் சொல்லிமுடிக்க வேண்டியிருந்தது.

பிரச்சார முறையின் அடிப்படையே இதுதான். ஒரே பொழிவில் அனுதாபம், ஆவேசம் என்று பலவும் இணைந்து வெளிப்பட்டது. இதைக் கச்சிதமாக நிறைவுச் செய்து தருபவனே பேச்சாளன் ஆகிறான். யோசித்துப்பார்த்தால், போர்க்களத்திற்கு இணையான போக்காக இவை இருப்பதைப் பார்க்கலாம்.

மன்னராட்சி முறையில் நடைபெற்ற போர்முறையில் எதிரெதிர் தரப்பு குழுக்களும் தளபதியின் தலைமையில் போர்க்களத்தில் ஆயுதங்களோடு நிற்கின்றனர். சமர் புரிந்து வெற்றி பெற்றவர், தோற்றவரின் நாட்டை தனதாக்குகிறார். ஆனால் இப்போதோ மன்னராட்சி முறை இல்லை. மக்களாட்சி முறை, பிரச்சினையை முன்புபோல் அணுக முடியாது. ஆனால் அந்த வடிவம் இப்போது மாறியிருக்கிறது. போர் என்ற மன்னராட்சி கால மதிப்பீட்டின் இடத்தை மக்களாட்சி முறையில் வேறு சில வடிவங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன. அவற்றுள் பிரச்சாரம் வழி வெற்றிகொள்வது என்ற வடிவம் முக்கியம் பெற்றுவிட்டது. போர்க்களம் என்கிற மரபின் நனவிலிருந்து இந்த நவீனத்திற்கான களம் இயங்குகிறது. மக்களாட்சி முறையில் நடப்பது ரத்தம் சிந்தாத போர்.

மேடை என்னும் போர்க்களம்

மேடையே போர்க்களம்தான். பேசுபவரே தளபதியாகிறார். அவர் வெளிப்படுத்தும் மொழியே ஆயுதம். எதிர்த்தரப்பை நோக்கி அவர் எழுப்பும் கேள்விகள் களத்தில் வெளிப்படுத்தும் ஆவேசத்திற்கு இணையாகின்றன. பேச்சைக் கேட்டு ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் வீரர்கள் போலாகிறார்கள். பேச்சால் எந்த அளவிற்கு மக்கள் திரட்சி வென்றெடுக்கப்படுகிறதோ அதுவே வெற்றி என்ற பொருளைப் பெறுகிறது. இந்த ஒப்புமை சுவை கருதிச் சொல்லப்படுவதுபோலத் தெரியலாம். ஆனால் இந்த ஒப்புமையைப் பேச்சாளர்களின் பேச்சு முறைகளிலும், அவர்களை மக்கள் உள்வாங்கிக்கொள்ளும் விதங்களிலும் நாம் கண்கூடாகப் பார்க்கமுடியும்.

தேசிய இயக்கத்தில் திலகர் தொடங்கி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. ஆகியோர் வரை இந்தியாவின் பண்டைய பெருமையைப் பேசி அது ஆங்கிலேயர் வருகையால் வீழ்ந்து போனதாகக் கூறி அதை மீட்டெடுக்க வேண்டும் என்று பேசினர். மக்களின் கோபத்தை உணர்த்திக் கிளர்ந்தெழச்செய்யும் போக்கு அவற்றிலிருந்தது. இக்கால தேசியவாதத்தின் மீது வங்கத்துச் சொல்லாடல்கள் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தன. திருநெல்வேலி ஆட்சியர் ஆஷை சுட்டுக்கொன்ற (1911) வாஞ்சி அக்கால தேசியவாதத்தின் குறியீடேயாகும். பாரதியின் பாஞ்சாலி சபதம் தேசியவாதச் சொல்லாடலின் கிளர்ந்தெழக் கோரும் கவித்துவப் பிரதிதான். கவுரவர்களுக்கு எதிராகப் பாண்டவர்கள் எடுக்கும் சபதம் போன்று மேடைகளில் அவரவர் அரசியலுக்கேற்ப சபதங்களும் சவால்களும் கேள்விகளும் மாறி மாறி இடம்பெற்றன.

திராவிட இயக்கத்தின் பங்கு

நவீன கால அரசியலில் மக்கள்திரளை நோக்கி மேடைப்பேச்சை பிரச்சார வாகனமாக மாற்றியதில் திராவிட இயக்கத்தினரின் பங்கு பலரும் அறிந்தது. பெரியாரைத் தாண்டி அண்ணா அடையாளம் பெற்றமைக்கு அவரின் பேச்சாற்றலே முதன்மைக் காரணம். தொடக்கக் கால தேசிய இயக்கத்தினருக்கு சுதேச இயக்கம் என்றால் திராவிட இயக்கத்தினருக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியமானதாக அமைந்தது. 1939ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புக்காக மரணமடைந்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் இறுதிச் சடங்கில் ஆற்றிய உரைகளே அண்ணாவைச் சிறந்த பேச்சாளராக அடையாளம் காட்டின. அந்த உரை நவீன அரசியல் இயக்கங்களுக்குரிய பாதிக்கப்பட்டோர், ஆதிக்கம் புரிவோர், கிளர்ந்தெழக் கூறுதல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தன. தமிழர்கள் மீதான ஆரியர்களின் அல்லது வடவர்களின் ஆதிக்கத்தால் இறந்துபோனவர்களாக இருவரையும் கூறிய அண்ணா ஆதிக்கத்தை எதிர்த்து வீரச்சாவு அடைந்த மாவீரர்களாக அவர்களை உருவகித்தார். அரசியல் கருத்தியலுக்காகப் போராடுவதும், அதற்காகத் தன்னை அர்ப்பணிப்பதும் பழம்போர் மரபாக இணைத்து அவரால் பேசப்பட்டது.

எனவே நவீன அரசியல் களம் என்பதே போர்க்களம் போன்றதாகப் பார்க்கப்பட்டது. அக்களத்திற்கான வீரர்கள் உருவாக்குவதற்கான களமாக மேடைப்பேச்சு விரிந்தது. அவ்வாறு தொடர்ச்சியாக வீரர்களை உருவாக்குவதிலும் எதிர்த்தரப்பை இனங்காட்டுவதிலும் தேர்ந்த பேச்சாளராக விளங்கியதாலேயே அவர் தளபதி என்றழைக்கப்பட்டார். தளபதி என்ற சொல் போர்க்களத்தோடு தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்ட பின்னால் அதை அண்ணாவின் பேச்சாற்றலே வழிநடத்திவந்தது. அண்ணாவைப் பின்பற்றிப் பெரும் இளைய பேச்சாளர் கூட்டம் உருவாகி அவரின் குரலை மட்டுமல்ல உள்ளடக்கத்தையும் போலச்செய்தது. மேடையில் பேசுவது போருக்கு ஆள்திரட்டும் பணிபோல் ஆக்கிக் கொள்ளப்பட்டது.

1938-39ஆம் ஆண்டுகளின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி மா.இளஞ்செழியன் எழுதிய நூலுக்குத் “தமிழன் தொடுத்த போர்” என்ற தலைப்பு அமைந்தது. வடக்கே படையெடுத்துச் சென்ற சிலப்பதிகாரத்து சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போன்ற தமிழ் மன்னர்களை நினைவூட்டிப் பேசுவதன் மூலம் இன்றைய தொண்டர்களை வடஇந்திய அரசியலுக்கு எதிராக அணியமாக்கினார்கள். உங்கள் முகங்களில் சேரன் செங்குட்டுவனின் முகம் நிழலாடக் காண்கிறேன் என்றனர். பேச்சின் தொடக்கத்தில் அமையும் வந்தனப் பகுதியில் தொண்டர்களை விளிக்கும்போது அடலேறுகளே, சிங்கங்களே, காளைகளே என்ற போர்க்கள சொல்லாடல்களே கையாளப்பட்டன. அவை ஆண் தன்மை கொண்டவை என்பது மற்றொரு விஷயம்.

தங்கள் முகாமைக் குறிக்கக் கையாண்ட பாசறை என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் போருக்கு ஆயத்தமான படைகள் தங்குமிடத்தையே குறித்தது. மக்களாட்சிக் காலத்தில் கையாளப்பட்ட இந்த மன்னராட்சிக் காலச் சொல்லாடல்கள் மைக் என்ற நவீன தொழில்நுட்பம் சாத்தியமாக்கியவை எனலாம். போருக்கு அணிதிரட்டுவதற்கு ஒப்பான சொல்லாடல்கள் உரத்தும் ஆவேசமாகவும் ஒலிக்க மைக்தான் வழிவகுத்தது.

நேற்று வாள், இன்று மைக்!

இவ்வாறுதான் அரசியல் தலைவர்களின் அடையாளமாகப் பேச்சு மாறியது. பேசத் தெரிந்தவரே தலைவர் என்ற அடையாளம் அழுத்தம் பெற்றது. அதன் தொடர்ச்சியில்தான் மைக்கின் முன் பேசிக்கொண்டிருக்கும் படங்கள் பிறந்தன. எனவே மைக்கில் பேசும் படங்கள் நவீனத்தின் அடையாளமாகின்றன. நவீன மக்களாட்சிக் கருத்தின் அடையாளமாகவே அதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மைக்கின் முன்னால் பேசுவது அடையாளமாக மாறிய பின்னால் சுமாராகப் பேசத் தெரிந்தவர்கள்கூட மைக்கில் பேசும் படங்களை உருவாக்கிக்கொண்டனர்.

மன்னர் ஒருவரின் படத்தை வரைய வேண்டுமெனில் அவர் வாளைக் கையில் ஏந்தி நிற்பார். ஆனால் இன்றைய தலைவர்களோ மைக்கின் முன்னால் நின்று ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் வெற்றி முக்கியம். மன்னருக்குப் போர்க்களம்; தலைவர்களுக்குப் பிரச்சாரக் களம். அவர்களுக்கு ஆயுதம் வாளென்றால் இவர்களுக்கு ஆயுதம் மைக் என்ற ஒலிவாங்கி. மன்னராட்சியின் ரத்தம் சிந்தும் போர்முறை, மக்களாட்சி தத்துவத்தில் ரத்தம் சிந்தா வாதமுறைக்கு மாறியிருக்கிறது. உள்ளடக்கம் மாறியிருக்கிறது. வடிவம் மாறவில்லை. இது சமூக நனவியலின் தொடர்ச்சி.

இப்போதெல்லாம் எல்லாத் தலைவர்களும் தேர்ந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை. பேச்சை அதன் ஆவேசமும் உரத்த சத்தமும் மட்டும் உருவாக்குவதில்லை. உள்ளடக்கம்தான் உருவாக்குகிறது. உள்ளடக்கத்தின் நியாயத்தில்தான் ஆவேசமும் எழுப்பும் கேள்விகளும் அர்த்தம் பெறுகின்றன. இந்த வகையில் பார்த்தால் இப்போது எல்லோருக்கும் அமையும் மைக்கில் முன்னால் பேசுவது போன்ற படங்கள் உறைந்துபோன அடையாள அரசியல் என்று மட்டுமே சொல்லலாம்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon