மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

முதல்வருக்குத் தெரியாமலேயே முதல்வர் பெயரில் ட்விட்டா?

முதல்வருக்குத் தெரியாமலேயே முதல்வர் பெயரில் ட்விட்டா?

தமிழ் பேசாத மாநிலங்களில் ஆப்ஷனல் (மூன்றாவது) மொழியாகத் தமிழை வைத்தால் அது பழமையான தமிழ் மொழிக்குச் செய்கிற பெருந்தொண்டாக இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 5) ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்திருந்தார். இது பெரும் சர்ச்சையாகியது.

பிற மாநிலங்களில் தமிழ் மொழியைத் தேர்வு மொழியாக வைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். வெளியான சில நிமிடங்களிலேயே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘முதல்வரின் கருத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது. இதுபற்றி முதல்வர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கோருகிறார். மின்னம்பலம் நேற்றைய ஒரு மணி பதிப்பில், ‘மும்மொழி்க் கொள்கையை ஏற்கிறாரா முதல்வர்?’ என்ற செய்தி வெளியானது.

அதிமுகவிலேயே பலரும் முதல்வர் ஏன் இவ்வாறு ட்விட் பதிவிட்டார் என்று குழப்பத்தில் இருந்த நிலையில் சுமார் மூன்று மணி நேரம் கழித்து நேற்று பிற்பகல் அந்த ட்விட்டர் முதல்வரின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதே கிடையாது. தேர்தலுக்கு முன்பு சேலம் ஐடி விங் கூட்டத்தில் பேசிய சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம், ‘சிஎம் கையில ஸ்மார்ட்போன் கிடையாது. சின்ன போன் ஒண்ணுதான் வெச்சிருக்காரு. நம்ம ஓபிஎஸ்ஸும் ஸ்மார்ட்போன் வெச்சுக்குறது இல்ல. இந்த போனை வெச்சு இவ்வளவு பண்ணலாமா...’ என்று ஆச்சரியம் பொங்க பேசினார்.

ஆக, ஸ்மார்ட்போன் கூட வைத்துக்கொள்ளாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை மாநில ஐடி விங் நிர்வாகிகள்தான் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் ராஜ் சத்யன் தான் முதல்வரின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளைக் கையாண்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

தலைமைக் கழகத்தின் அறிக்கைகள், முதல்வரின் அறிக்கைகள், பிரதமருக்கு எழுதும் கடிதங்கள், வாழ்த்துச் செய்திகள், இரங்கல் செய்திகள், முதல்வரின் அலுவலக அல்லது முகாம் அலுவலக (வீடு) சந்திப்புகள் போன்றவைதான் எடப்பாடி பழனிசாமியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் இடுகைகளாக வரும். ஆனால், நேற்று வெளியான ட்விட் மேற்குறிப்பிட்ட வகையில் எல்லாம் அடங்காத புது வகையாக இருக்கிறது.

இந்த நிலையில் திடீரென முதல்வரின் ட்விட் நீக்கப்பட்டிருக்கிறது. ‘அப்படியென்றால் பல் வலியால் அவதிப்படும் முதல்வருக்குத் தெரியாமலேயே அவரது பக்கத்தில் இந்த ட்விட் பதிவு செய்யப்பட்டதா அல்லது முதல்வரின் கருத்துகளைப் பெறுவதில் குழப்பம் ஏற்பட்டதா, முதல்வரே இடச் சொல்லி, பின் அது சர்ச்சைக்குள்ளானதும் நீக்கப்பட்டுவிட்டதா’ போன்ற கேள்விகள் ஐடி விங் கீழ்நிலை நிர்வாகிகளிடையே எழுந்திருக்கின்றன. “முன்னதாக முதல்வர் வெளியிட்ட ட்விட் பற்றிதான் விளக்கம் தேவைப்பட்டது. இப்போது முதல்வரின் ட்விட் நீக்கப்பட்டது பற்றியும் விளக்கம் தேவைப்படுகிறது” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

இதுபற்றி விளக்கம் கேட்க அதிமுகவின் ஐடி விங் மாநில இணைச் செயலாளர் ராஜ்சத்யனை தொடர்புகொள்ள நேற்று பிற்பகல் முதல் பலமுறை முயன்றோம். ஆனால் அவரது செல்போன் நேற்று இரவு வரை சுவிட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon