மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!

டிஜிட்டல் திண்ணை:  அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!வெற்றிநடை போடும் தமிழகம்

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. முதலில் ஒரு படத்தை அனுப்பியது வாட்ஸ் அப். அது இன்று வெளிவந்த துக்ளக் வார இதழில் வெளியான ஒரு கேலிச்சித்திரம். அதன் பின் செய்தியை அனுப்பியது வாட்ஸ் அப்.

“இன்று காலை மெரினாவில் தனது மகனோடு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது மகனுடன் துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டுக்குதான் போயிருக்கிறார். அங்கே சென்று குருமூர்த்தியுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ஓ.பன்னீர். குருமூர்த்தி துக்ளக் ஆசிரியர் என்பதைத் தாண்டி தீவிரமான ஆர்எஸ்எஸ் காரர். பாஜக தலைவர் அமித் ஷாவின் நெருங்கிய நண்பர். தமிழ்நாட்டின் அரசியல் நிலைமைகள் பற்றி அவ்வப்போது குருமூர்த்தியுடன் தான் அமித் ஷா உரையாடுவார் என்பதெல்லாம் அறிந்த விஷயம்தான்.

இந்த நிலையில் இன்று வெளிவந்த துக்ளக் இதழின் 9 ஆம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் கேலிச்சித்திரம் அதிமுகவினரை மட்டுமல்ல தமிழகத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருக்கிறது துக்ளக்.

அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் நேரடியாக சொல்லியிருக்கிறது துக்ளக்.

தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டி ஓ. பன்னீர்செல்வம் டெல்லி,ஹரித்துவார் சாமியார் என்று பல்வேறு நபர்கள் மூலம் பாஜகவிடம் பேசி வருகிறார். இது விஷயமாக குருமூர்த்தியுடன் கூட பன்னீர் பேசி வருவதாக அதிமுகவின் பன்னீர் ஆதரவாளர்களே சொல்கிறார்கள். இந்நிலையில் அதிமுகவை பிச்சைக்காரர்களாக சித்திரித்து துக்ளக் வெளியிட்ட அட்டைப்படத்தை அடுத்துதான் இன்று குருமூர்த்தியை தன் மகனோடு சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். துக்ளக் அட்டைப் படத்தைப் பார்த்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோபம்தான் வந்திருக்க வேண்டும். கோபம் வந்திருந்தால் துணை முதல்வர் என்ற ரீதியில் அவரே துக்ளக் ஆசிரியரையோ அல்லது தலைமை நிருபரையோ தான் இருக்கும் இடத்துக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை தேடிச் சென்று பன்னீர் சந்தித்திருக்கிறார் என்றால் அதிமுக துக்ளக் கேலிச் சித்திரத்தை உண்மையாக்குகிறதா?’ என்ற கேள்வி ஓ.பன்னீர் ஆதரவாளர்கள் மத்தியிலேயே எழுந்திருக்கிறது. இதற்கிடையே இன்று இரவு மதுரை செல்வதற்கு விமானம் புக் செய்திருந்த ஓ.பன்னீர் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னையிலேயே இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

குருமூர்த்தி அதிமுகவைக் கடுமையாக விமர்சிப்பது இது முதல்முறையல்ல. அதிமுக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என்று குறிக்கும் ஆங்கில வார்த்தை கொண்டு விமர்சித்தார். அதற்கு ஜெயக்குமார் கடுமையாக பதில் கொடுத்தாரே தவிர, அதற்குப் பிறகு வேறு எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இன்று வெளிவந்த துக்ளக் இதழில் அதிமுக மத்திய அமைச்சரவைக்கு டெல்லியில் சென்று பிச்சையெடுப்பதாக தாக்கியுள்ளார் குருமூர்த்தி. இதற்காவது அதிமுக பதில் அளிக்குமா என்று தெரியவில்லை’ என்று முடிந்தது மெசேஜ். அந்த மெசேஜை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், தனது தகவலைப் பதிவிட்டது.

“தேர்தல் முடிந்த ஏப்ரல் 18 ஆம் தேதிக்குப் பிறகு 23 ஆம்தேதி பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தார் தினகரன். அப்போது தினகரன், ‘நமக்கு 3 எம்.பி, 5 எம்.எல்.ஏ. சீட் கிடைக்க வாய்ப்பிருக்கு’ என்றும் சசிகலாவிடம் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட சசிகலா, ‘ஏன்... போதுமான அளவு செலவு பண்ணலையா?’ என்று விசாரித்துள்ளார். ’நம்மால செலவு பண்ண முடியலை. நம்ம வண்டிகளை குறிவச்சி போலீஸும் பறக்கும் படையும் கண்காணிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதனால நான் ரிஸ்க் எடுக்கல. சில தொகுதிகளை மட்டும் செலக்ட் பண்ணி செலவு செஞ்சோம். அது நல்லா ஒர்க் அவுட் ஆகும்’ என்று தினகரன் பதில் சொல்லியிருக்கிறார். இதை அப்போதே டிஜிட்டல் திண்ணை பகுதியில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமமுகவுக்கு தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் முழுமையாக செலவு செய்யப்படவில்லை என சசிகலாவிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் செலவுகளுக்குப் பெங்களூர் அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலா வழிகாட்டுதலின்படி கடந்த பிப்ரவரி மாதம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ரிலீஸ் செய்யப்பட்டதாகவும், அதில் பாதிதான் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் மீதி பணம் என்னாயிற்று என சிறையில் உள்ள சசிகலா, டிடிவி தினகரனிடம் கணக்கு கேட்டுவருவதாகவும் இதனால் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடைவெளி ஏற்பட்டுவருவதாகவும் சொல்கிறார்கள் அமமுகவின் மூத்த முக்கியமான நிர்வாகிகள்” என்ற மெசேஜை பதிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது ஃபேஸ்புக்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


மீண்டும் செலவா? குமுறும் திமுக நிர்வாகிகள்!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


மகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்!


புதன், 5 ஜுன் 2019

அடுத்ததுchevronRight icon