மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!

ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக சென்னைக்கு கிளம்பி வர வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து நேற்று அழைப்பு சென்றிருக்கிறது. கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்வை எடப்பாடி புறக்கணித்ததும், பன்னீர்செல்வம் அங்கு பேசியதும் ஏற்கனவே அதிமுக நிர்வாகிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தகவல் ஏதும் சொல்லப்படாமல் சென்னைக்கு அழைத்ததால், மீண்டும் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தப்போகிறாரோ என்று நிர்வாகிகள் தங்களுக்குள் பேசியபடிதான் சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 5) காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கூட தெரிவிக்காமல் மகன் ரவீந்திரநாத் மற்றும் தேனி மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் பன்னீர்செல்வம். அப்போது, தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் ஆகியோர் உடனிருந்தனர்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியான நிலையில் திமுக கூட்டணி 37 மக்களவைத் தொகுதிகளிலும், 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் வென்றது. அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளையும், 1 மக்களவை உறுப்பினரையும் பெற்றது. தேர்தலில் வெற்றிபெற்ற மறுநாளே திமுக உறுப்பினர்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்தினர். அத்தோடு திமுக தலைவர் ஸ்டாலினோடு சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல அதிமுக சார்பாக வெற்றிபெற்றவர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் உள்பட யாருமே ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்லவில்லை. வெற்றிபெற்ற சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.

பரமக்குடியில் வெற்றிபெற்ற சதன் பிரபாகர், ஜெயலலிதா நினைவிடத்தில் தனது வெற்றிச் சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், ‘ 9+1 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது ஜெயலலிதாவால் மட்டும்தான். தேர்தலுக்கு முன்பு வாரணாசி செல்ல தெரிந்த பன்னீர்செல்வத்துக்கு, தேனி வெற்றிக்குப் பிறகு டெல்லி செல்லத் தெரிந்த பன்னீர்செல்வத்துக்கு, சென்னையில் அருகிலிருக்கும் ஜெயலலிதா நினைவிடம் கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்று தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. இந்த நிலையில்தான் தேனி அதிமுக நிர்வாகிகளை உடனடியாக அழைத்து வந்து பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தியிருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


மீண்டும் செலவா? குமுறும் திமுக நிர்வாகிகள்!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


மகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்!


புதன், 5 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon