மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சமத்துவம் பெருகட்டும்: தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து!

சமத்துவம் பெருகட்டும்: தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து!

நேற்று இரவு பிறை தென்பட்டதையடுத்து, இன்று ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்தார் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப். ஈகைத் திருநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 7ஆம் தேதியன்று ரமலான் நோன்பு தொடங்கியது. இதைத் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, முஸ்லிம் மதத்தைச் சார்ந்த மக்கள் பகல் முழுவதும் உண்ணாநோன்பை அனுசரித்து, ஐந்து வேளை தொழுகையைப் பின்பற்றி வந்தனர். இந்த நோன்பு காலத்தின் இறுதியில் ரம்ஜான் எனும் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும். நேற்று தமிழகத்தில் பிறை தென்பட்டதையடுத்து, இன்று (ஜூன் 5) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்தார் தமிழக அரசின் தலைமை காஜி. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று அதிகாலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜானையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த புனித ரம்ஜான் பெருநாளில் உலகில் அன்பும் அமைதியும் சகோதரத்துவமும் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாகத் தெரிவித்தார். “இஸ்லாமியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், அனைத்து வகையிலும் தங்களை வருத்திக்கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் திமுகவின் சார்பில் மனமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசுதான் என்றும், அந்த உறவின் தொடர்ச்சியாக இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும் எதிர்க்குரல் கொடுக்கும் இயக்கமாக திமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி தொழுது ஏழைகளுக்கு சதக்கத்துல் பித்ர் என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடனும் உணவருந்தி மகிழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த இனிய நன்னாளில் சமத்துவம் தழைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொள்வதாகத் தெரிவித்தார். “ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்” என்று அவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ரமலான் நோன்பிருப்பது இஸ்லாமிய மக்களைப் புடம் போட்ட தங்கங்களாக மாற்றுகிறது என்று குறிப்பிட்டார். “அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாம் மதமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது. அமைதியையும் ஈகையையும் வலியுறுத்துகிறது” என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

ஏழ்மையை அறிந்துகொள்ள, பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ள, உடல் நலத்தைப் பேண, மனிதர்களை மேம்படுத்த உதவுவது இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பு என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ரமலான் நன்னாளில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லாமல் அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத மக்களுக்கு நம்மால் இயன்றதை வழங்குவதும் மிகவும் அவசியமானது என்று கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகைதீன் வெளியிட்ட ரம்ஜான் வாழ்த்து செய்தியில், மானிட நேய நெறி என்பது மதம், சாதி, இனம், நாடு கடந்த மேன்மை நெறி, நன்னெறி, பொன்னெறி என்றும் மனித சமுதாயத்தை வாழ்விக்கும் திருநெறி எங்கும் பரவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் உட்படப் பல தலைவர்கள் இன்று ரம்ஜான் கொண்டாடிவரும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!


புதன், 5 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon