மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

எம்.ஜி.ஆர். பிம்பத்தின் நிழல்கள்!

எம்.ஜி.ஆர். பிம்பத்தின் நிழல்கள்!

சினிமா பாரடைசோ 29 – தேவிபாரதி

எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த நாயகர்களில் சண்டைப் பிரியர்களின் மனம் கவர்ந்த ஒருவர் ஜெய்சங்கர். அவர் நாயகனாக நடித்த படங்களின் தலைப்புகளிலேயே வல்லவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன். ஆனால், ஜெய்சங்கர் எம்.ஜி.ஆர் பாணியை அப்படியே பின்பற்றியவர் என்று சொல்ல முடியாது. சிவாஜியின் தாக்கம் பெற்ற நடிகர்கள் பலரின் அடையாளமாக விளங்கிய மிகை நடிப்பை ஜெய்சங்கள் கிட்டத்தட்ட நிராகரித்தார். அவரது நடிப்பில் ஹாலிவுட் நடிகர்களின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.

1970ஆம் ஆண்டு வெளிவந்த சி.ஐ.டி சங்கர் ஜெய்சங்கரின் திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தை உருவாக்கிய படம். ஹாலிவுட் வார்ப்பில் எடுக்கப்பட்ட படம் அது. எம்.ஜி.ஆர் சிஐடியாக நடித்துப் புகழ் பெற்ற படங்கள் உண்டு. ரகசிய போலீஸ் 115 என்று ஒரு படம். அந்தப் படத்தின் போஸ்டர்களில் எம்.ஜி.ஆர் நீள் கோட்டும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருப்பார். குடும்பப் பாங்கான கதையம்சம் கொண்ட காவல்காரன் படத்தில்கூட எம்.ஜி.ஆருக்கு சிஐடி பாத்திரம்தான். ஆனால், அது படத்தின் இறுதிக் காட்சி வரை யாருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆரைப் பின்பற்றி அப்போதைய நாயகர்களில் சிலர் ஓரிரு படங்களில் சிஐடியாக வந்தது உண்டு. ஆனால், ஜெய்சங்கர் புகழ் பெற்ற ஹாலிவுட் கதாபாத்திரமான ஜேம்ஸ்பான்டைப் பின்பற்ற முயன்றார்.

சி.ஐ.டி சங்கர் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜெய்சங்கர் பல படங்களில் சி.ஐ.டியாக நடித்தார். ஹாலிவுட் பாணியில் சண்டை போட்டார். 1980கள் வரை ஜெய்சங்கரின் சி.ஐ.டி அவதாரம் நீடித்தது. சுஜாதாவின் நாவல் ஒன்று காயத்ரி என்ற பெயரில் படமானபோது அவர் அதில் துப்பறியும் வக்கீல் கணேஷ் வேடம் ஏற்றார். பல வருடங்களுக்குப் பிறகு சுஜாதாவின் நாவலில் இடம்பெற்ற புகழ் பெற்ற அந்தத் துப்பறியும் வக்கீல் கணேஷ் வேடத்தை ஏற்று ரஜினி நடித்த படம் ப்ரியா. ரஜினியைவிட கணேஷ் வேடம் ஜெய்சங்கருக்கே அதிகம் பொருந்தியது.

ஆனால், 1970களில் விதிவசத்தால் இயக்குநர் கர்ணனின் பிடியில் சிக்கினார் ஜெய்சங்கர். காட்டுவாசியாகவும் கௌபாயாகவும் அவதாரமெடுத்து படுபயங்கரமான சண்டைக் காட்சிகளில் நடித்தார். அபத்தமான திரைக்கதை, சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளுக்குப் பெயர்பெற்ற கர்ணனின் படங்கள் தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. கர்ணனின் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த எங்க பாட்டன் சொத்து, துணிவே துணை, ஜம்பு போன்ற சில படங்கள் வணிக ரீதியில் சுமாரான வெற்றியைப் பெற்றவை.

சமூக நீதி, அரசியல்

எம்.ஜி.ஆரைப் போலவே சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பு ஜெய்சங்கருக்கு வெகு தாமதமாகக் கிடைத்தது.

1978இல் கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி, வண்டிக்காரன் மகன் ஆகிய இரு படங்களும் குறிப்பிடத்தக்கவை. எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்திருந்த நிலையில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் அவலங்களைப் பற்றிப் பேசும் கதையமைப்பு கொண்ட இந்தப் படங்களில் நாயகனாக நடித்ததன் மூலம் ஜெய்சங்கர் திமுகவினரின் அன்பைப் பெற்றார். திமுகவில் இணைந்து அரசியலிலும் இறங்கினார். தான் நடித்த படங்களில் திமுக ஆதரவு வசனங்களும் தத்துவப் பாடல்களும் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார்.

என்ன காரணத்தாலோ அவருக்கு அரசியல் ஒத்துவரவில்லை. பிறகு அதிலிருந்து விலகி கொஞ்ச காலம் வில்லனாக நடித்தார், வயது கூடக்கூட குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அப்பா, தாத்தா வேடங்களை ஏற்றுக் கடைசிவரை நடிகராகவே வாழ்ந்த ஜெய்சங்கருக்கு எம்.ஜி.ஆரைப் போல் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு தவறிப் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

போட்டியாக உதித்த முத்து

1970களின் நாயகர்களில் அரசியல் வாய்ப்பைத் தவறவிட்ட மற்றொரு நடிகர் மு.க.முத்து. 1973இல் பூக்காரி படத்தில் நாயகனாக அறிமுகமான மு.க.முத்து, அப்போதைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த புதல்வர். பூக்காரி படத்தின் கதை வசனத்தை எழுதியவரும் கருணாநிதிதான். அப்போது திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவைத் தொடங்கியிருந்த எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டவர் எனக் கருதப்பட்ட மு.க.முத்து அசப்பில் எம்.ஜி.ஆரைப் போலவே இருந்தார். நடை, உடை, பாவனைகளில் எம்.ஜி.ஆரை இம்மி பிசகாமல் பின்பற்றினார். நடித்ததோடு அல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்தார் மு.க.முத்து.

அவரது திரையுலகப் பிரவேசம் எம்.ஜி.ஆரைப் பதற்றப்பட வைத்தாகக்கூட ஒரு பேச்சிருந்தது. பூக்காரி படத்தின் நாயகி மஞ்சுளா எம்.ஜி.ஆரால் திரையுலகுக்கு அறிமுகமானவர். எம்.ஜி.ஆரை அது சீண்டியிருக்குமா அல்லது எம்.ஜி.ஆரைச் சீண்டுவதற்காகவே மஞ்சுளா அதன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டரா எனத் தெரியவில்லை. பூக்காரியைத் தொடர்ந்து பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என அவர் நடித்த படங்களில் அரசியல் நெடி வீசியது.

கருணாநிதியின் பிள்ளை என்பதால் அவர் சீக்கிரத்திலேயே கவனம் பெற்றார். எம்.ஜி.ஆரால் ஏற்பட்ட வெற்றிடத்தை அவரால் எளிதாக நிரப்பிவிட முடியும் என்று எல்லோருமே நம்பினார்கள். அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவும் இருந்தது. ஆனால், அவரால் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அரசியலும் ஒத்துவரவில்லை.

அரசியலில் குதித்த இன்னொரு நாயகர்

ஜெய்சங்கர், மு.க.முத்துவைப் போலவே திடீரென அரசியலில் குதித்த அந்தக் கட்டத்திய நாயகர்களில் ஒருவர் விஜயகுமார். தொடக்கக் காலங்களில் இளமை ததும்பும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த விஜயகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆரைவிட சிவாஜியையே அதிகம் பிரதிபலித்தார். தோற்றத்திலும் சிவாஜியின் சாயல் இருந்தது. தொடக்கத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற நாயகர்களைப் போல் மென்மையான பாத்திரங்களில் நடித்தார். அவர் நாயகனாக நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த அழகே உன்னை ஆராதிக்கிறேன். காதலுக்கு ஏங்கும் கவித்துவமான பாத்திரம்.

என்ன விதியோ, அவருக்கும் அரசியல் ஆசை தலைதூக்கியது. எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு அவரது ஆட்சியை விமர்சிக்கும் கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தார். ஒரு படத்தில் திமுகவின் கறுப்பு சிவப்புக் கொடியுடன் ஊர்வலம் போனதுகூட நினைவிருக்கிறது. அவருக்கும் அரசியல் கை கொடுக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் நாயகியான மஞ்சுளாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் குணச்சித்திர நடிகராக அவதாரமெடுத்தார். நடிப்பில் சிவாஜியைப் பின்பற்ற முயன்றார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கிழக்குச் சீமையிலே படத்தில் அவர் ஏற்றிருந்த நாயகியின் அண்ணன் வேடத்தில் சிவாஜியை மிஞ்சம் ஆவேசம் அவரது நடிப்பில் தென்பட்டது. அரசியலில் ஈடுபட முடியாவிட்டாலும் சிறிது காலம் நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் வாய்ப்புக் கிடைத்தது விஜயகுமாருக்கு.

கிழக்குச் சீமையிலே படத்தில் விஜயகுமாரின் தங்கை கணவராக நடித்து அவரைப் படாதபாடு படுத்திய நெப்போலியன் எம்.ஜி.ஆரைத் தனது ஆசானாகக் கொள்ளாதபோதும் தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களவை திமுக உறுப்பினராகக் கொஞ்ச காலம் இருந்தார்.

எம்.ஜி.ஆரால் தனது கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்ட கே.பாக்யராஜுக்கு அவரது அரசியல் வாரிசாக வேண்டும் என்னும் ஆசை பிறந்தது ஏன் எனத் தெரியவில்லை. அவரையும் அவரைப் போன்ற இன்னும் சிலரது திரை – அரசியல் பயணத்தைத் தொடர்ந்து பார்ப்போம்...


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!


புதன், 5 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon