மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜுன் 2019

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின்  செல்போன்   ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி

அலுவலகத்தின் வைஃபை பாஸ்வேர்டை உள்ளிட்டவுடன் வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. மெசேஜ் டைப்பிங் செய்துகொண்டிருந்தது.

“இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய முழு கவனமும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றுவதில்தான் இருக்கிறது. ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, திமுக ஆட்சி அமைக்க அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழக உளவுத்துறையினர் முதல்வருக்குக் கொடுத்திருக்கும் தகவல்படி திமுகவினர் அதிமுக எம்.எல்.ஏ.க்களோடு தொடர்ந்து பேசி வருகிறார்கள். திமுகவின் திட்டம் என்பது நம்பர் கேம் ஆடி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதல்ல. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து உங்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, விரைவில் தேர்தலைக்கொண்டுவருவதே என்று உளவுத் துறையினர் தொடர்ந்து முதல்வருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் ஸ்டாலினின் மேடைப் பேச்சை நம்பாமல் எடப்பாடி தொடர்ந்து தனது எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றிக் கொள்ள பல ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் போன் கால்களையும் கண்காணித்து கடந்த சில மாதங்களில் அவர்கள் யாரோடெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்ற ரிப்போர்ட்டைக் கேட்டிருந்தார் முதல்வர்.

இதற்கு போலீஸ் பாஷையில் சிடிஆர் என்று பெயர். அதாவது Call Detail Report என்று சொல்வார்கள். குறிப்பிட்ட நபரின் அலைபேசி அல்லது தொலைபேசி எண்ணில் இருந்து யார் யாருக்கு அழைப்புகள் சென்றுள்ளன, எத்தனை நிமிடங்கள் பேசியுள்ளார்கள், எவ்வளவு தடவை பேசியுள்ளார்கள் என்பதையெல்லாம் உள்ளடக்கியதுதான் ’கால் டீடெயில் ரிப்போர்ட்’. இன்று பல எம்.எல்.ஏ.க்களும் வாட்ஸ் அப் காலில்தான் ரகசியங்களைப் பேசுகிறோம், யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாட்ஸ் அப் அழைப்பில் என்ன பேசினார்கள் என்பதை பதிவு செய்ய முடியாதே தவிர, எந்தெந்த நம்பருக்கு எத்தனை முறை எவ்வளவு நேரம் பேசினார்கள் என்பதை சேகரிக்கும் வசதி இருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

இந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் சிடிஆர் ரிப்போர்ட்டை கேட்டு வாங்கிப் பார்த்த முதல்வருக்கு தலை சுற்றிவிட்டது. காரணம் தங்கள் மாவட்டத்திலுள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்.எல்.ஏ.க்களோடு பேசாத அதிமுக எம்.எல்.ஏ.க்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களுமே திமுகவினரோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் சிடிஆர் ரிப்போர்ட் . பொதுவாகவே அரசியல்வாதிகள் முக்கியமான விஷயங்களை தங்கள் போனில் இருந்து பேச மாட்டார்கள், தங்களது அலுவலகத்திலுள்ள சாதாரண ஊழியர், அல்லது குடும்ப உறுப்பினரின் எண்ணில் இருந்துதான் பேசுவார்கள். இந்த நுட்பத்தை அறிந்து எம்.எல்.ஏ.க்கள் நம்பர் மட்டுமல்லாது அவர்களை எப்போதும் சுற்றியிருக்கும் நபர்களின் நம்பர்களையும் சேர்த்தே இந்த சிடிஆர் ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். இதற்கு ஒன் பிளஸ் ஒன், ஒன் பிளஸ் டூ என்று உளவுத்துறை பரிபாஷையில் சொல்கிறார்கள்.

இந்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் பார்த்து அதிமுகவில் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் திமுகவினரோடு அடிக்கடி, அதிகமாக பேசியிருக்கிறார்கள் என்று இன்னொரு ரிப்போர்ட்டையும் கேட்டுப் பெற்றிருக்கிறார் எடப்பாடி. அந்த ரிப்போர்ட்டின் படிதான் திமுகவினரிடம் நெருக்கமான தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் சிறப்பு கவனம் எடுத்து எடப்பாடி பேசி வருகிறார். அவர்களிடம், ‘உங்களுக்கு என்ன பிரச்சினை, மாவட்ட அமைச்சர்களோடு பிரச்சினையா? உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்’ என்ற ரீதியில் பேசிவருகிறார் எடப்பாடி.

கால் டீடெயில் ரிப்போர்ட்டில் அமைச்சர்களின் தொடர்பு விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் என்ன விசேஷம் என்றால் அமைச்சர்களிலேயே சிலர் திமுகவினரோடு ரெகுலராக பேசிக்கொண்டிருக்கும் தகவலும் எடப்பாடிக்கு கிடைத்துள்ளது. ’எம்.எல்.ஏ.க்களுக்கு கூட திமுகவினரோடு தொடர்புகொள்ள பல சந்தர்ப்பங்கள் இருக்கலாம். ஆனால் அமைச்சர்களே திமுகவினரோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால் இதை எப்படிப் புரிந்துகொள்வது?’ என்று நேற்றிலிருந்து தனக்கு நெருக்கமானவர்களிடமெல்லாம் கேட்டுப் புலம்பிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப். இதைப் பரபரப்பாக ஷேர் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!


ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

செவ்வாய் 4 ஜுன் 2019