மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!

செந்தில் பாலாஜி மாடல்: திமுக  மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நேற்று (ஜூன் 3) நடைபெற்றது. சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்த பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் பேச ஆரம்பித்திருக்கிறார். ‘22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்ல நாம 13 இடத்துலதான் ஜெயிச்சிருக்கோம். மற்ற 9 இடங்கள்ல ஜெயிக்காததுக்கான காரணம் என்னனு சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எனக்கு விரிவா பதில் கொடுக்கனும்’ என்று கேட்டிருக்கிறார்.

உடனே எழுந்து சூலூர் தொகுதிக்கான காரணங்களை அடுக்கிய கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், சூலூர்ல தோத்ததுக்கு முக்கிய காரணமே நாம நிறுத்துன வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி மேல மக்களுக்கு இருக்கிற அதிருப்திதான் என பொங்கியுள்ளார். அதையடுத்து பல மாவட்டச் செயலாளர்களும் தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளனர். ஒரு மா.செ எழுந்ததும், அவரை அமரச் சொன்ன ஸ்டாலின், ‘நீங்க நல்லா வேலை பாத்தீங்கனு எனக்குத் தெரியும்’ என்றிருக்கிறார். ஆனால் அவர்தான் அதிகமான புகார்களை கூறவந்தவர் என்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.

வேலூர் மாவட்டச் செயலாளர் காந்தி பேசும்போது, அனைத்து மாவட்டச் செயலாளர்களும் செந்தில் பாலாஜி போல செயல்பட்டிருந்தால் தோல்வியை தவிர்த்திருக்கலாம் என்றுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் பூத் ஏஜெண்டுகள் உள்பட யாருக்கும் எந்த செலவும் வைக்காமல் பிரச்சாரத்திற்கு கூட்டம் கூட்டுவது, தினசரி பிரச்சாரம் என அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். இதனால் பூத் ஏஜெண்டுகளும் உற்சாகமாக பணியாற்றினர். அதனால் அரவக்குறிச்சியில் எளிதாக வெற்றிபெற்றோம் என்றார்.

இதன் பின்னணியை விசாரித்தபோது இன்னும் பல தகவல்கள் கிடைத்தன.

அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்களான பொன்முடி, காந்தி ஆகியோருக்கு இடைத் தேர்தல் சமயத்தில் தலைமையிடமிருந்து சொல்லப்பட்ட தகவலில், ‘அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக அதிகமாக பணம் கொடுக்கவில்லை என்று எனக்கு ஓஎம்ஜி ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. எனவே அதிமுக கொடுப்பதை விட குறைவாகவே பணம் கொடுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அப்படியே செந்தில் பாலாஜியிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அவரோ, ‘அதிமுக, அமமுக ரெண்டு கட்சியிலயும் எனக்கு ஆள் இருக்காங்க. யாரு எவ்வளவு பணம் கொடுக்குறாங்கனு எனக்குத் தெரியும். கவலைப்படாதீங்க. இந்த விஷயத்தை என்கிட்ட விட்டுருங்க. நான் பாத்துக்கிறேன்னு’ பதில் சொல்லிவிட்டார்.

அரவக்குறிச்சியில் முதலில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்த அதிமுக, தேர்தலுக்கு முந்தைய நாள் 5,00 ரூபாய் விநியோகம் செய்துள்ளது. தனக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகளிடமிருந்து இந்த தகவலை தெரிந்துகொண்ட செந்தில் பாலாஜி, உடனே பூத் ஏஜெண்டுகளை அழைத்து தேர்தலுக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்து டோக்கனும் அளிக்கச் சொல்லியிருக்கிறார். தற்போது தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சொன்னதுபோலவே தொகுதி வாக்காளர்களை கவனித்து வருகிறார் என்று கூறுகிறார்கள் அரவக்குறிச்சி திமுக நிர்வாகிகள்.

ஒஎம்ஜி ரிப்போர்ட்படி தலைமை சொல்லியதால் அதிக பணம் கொடுக்காமல் நிறுத்தப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சோளிங்கர் உள்ளிட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவினோம். அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியின் சாதுர்யத்தால் தோல்வியைத் தவிர்த்துள்ளோம். இல்லையெனில் அங்கும் தோல்வியடைந்திருப்போம். தோல்வியடைந்த இடத்திலெல்லாம் அதிமுகவை விட சற்று அதிகமாக பணம் கொடுத்திருந்தால் இந்நேரம் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!


ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!


செவ்வாய், 4 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon