மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி

ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும்  எடப்பாடி

“இப்போதைக்கு ஆட்சியைப் பிடித்தால் ஒன்றரை வருடம்தான். தேர்தல் வந்து ஆட்சியைப் பிடித்தால் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்” - இந்த வார்த்தைகள் கலைஞரின் 96ஆவது பிறந்தநாள் விழா, மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பேசிய வார்த்தைகள்.

இப்படி ஸ்டாலின் ஒருபக்கம் பேசினாலும் இன்னொரு பக்கம் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளில் திமுக தன்னால் முடிந்த அளவு தீவிரம் காட்டிவருகிறது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு திமுக தரப்பில் எடுத்துவரும் முயற்சிகளையும் அதையடுத்து நேற்று அதிமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய விஷயங்களையும் தொடர்ந்து மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் பதிவு செய்துவருகிறோம்.

இந்தப் படலத்தின் அடுத்த கட்டமாகத் தனது ஆட்சியைக் கவிழ்க்க திமுக தரப்பில் முதற்கட்டமாக 30 கோடி ரூபாய்க்கு மேல் இறக்கியுள்ளதாகவும் அதைக் கண்டுபிடித்து ரெய்டு நடத்தி ஆட்சிக் கவிழ்ப்பு ஆபரேஷனைத் தடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் வருமான வரித் துறையிடம் தமிழக முதல்வர் உதவி கேட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன.

இதுபற்றி அதிமுக சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவினரின் கரன்சி நடமாட்டத்தைத் தமிழக உளவுத் துறை மோப்பம் பிடித்து மத்திய வருமான வரித் துறைக்குக் கொடுப்பதும் உடனடியாக வருமான வரித் துறை ரெய்டு நடத்தி அதிரடியாக திமுக கூட்டணியைக் கதிகலங்கச் செய்யும் சம்பவங்களும் நடந்தன. அதன் தொடர்ச்சியாக இப்போது தன் ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் கரன்சி ஆபரேஷனையும் உளவுத் துறை மூலம் அறிந்துகொண்ட முதல்வர் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் வருமான வரித் துறை உதவியை நாடியுள்ளார்.

அதன்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரைப் பணம் கொடுத்து இழுக்க திமுக முயற்சி செய்வதாகவும், திமுக புள்ளிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களைத் தொடர்ந்து கண்காணித்தால் இந்த கரன்சி ஆபரேஷன் திட்டத்தை உடைக்கலாம் என்றும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். தேர்தலின்போது தமிழக உளவுத் துறை கொடுத்த தகவலின்பேரில் மத்திய வருமான வரித் துறை அதிரடியாக ரெய்டு நடத்தி எதிர்க்கட்சிக் கூட்டணியைக் குறிவைத்து தாக்கியது. ஆனால், இப்போதும் அதே பாணி தொடருமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தமிழக முதல்வரின் இந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அதனால்தான் சில நாட்களாகவே கடுமையான டென்ஷனில் இருக்கிறார் முதல்வர். நேற்று எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு நடத்தியவர், அதைத் தொடர்ந்து அதிமுக அதிகாரபூர்வமாக நடத்தும் இப்தார் விருந்துக்குச் செல்வதைக்கூடத் தவிர்த்து விட்டார். தனக்கு மத்திய அரசின் உதவி இந்த விஷயத்தில் கிடைக்குமா கிடைக்காதா என்பதுதான் தமிழக முதல்வரின் இப்போதைய டென்ஷனுக்குக் காரணம்” என்கிறார்கள் அதிமுகவின் அந்த சீனியர்கள்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!


ஆட்சிக் கவிழ்ப்பு பயம்: எம்.எல்.ஏ.க்களுடன் சமாதானம் பேசும் எடப்பாடி


கழற்றிவிடப்படுகிறதோ தமிழகம்?


ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக


செவ்வாய், 4 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon