மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!

இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!

உலகம் முழுவதிலுமிருக்கும் இளையராஜாவின் ரசிகர்கள் கூடிய விரைவில் சின்னத்திரையில் கண்டு ரசிக்கவிருக்கும், இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் விழாவின் சில சுவாரஸ்யமான தருணங்களை இங்கே பகிரவிருக்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் இளையராஜாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒரு திருவிழா போல நடைபெறுவதும், அந்நிகழ்வின் மூலம் இசை ரசிகர்களை ராஜா பரவசப்படுத்துவதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. அதுபோலவே, இவ்வருடமும் சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோடை வெய்யிலின் சூட்டைத் தணித்துக்கொண்டு தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தது, பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி மைதானம். தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த இளையராஜாவின் ரசிகர்கள், மதியம் 2 மணியிலிருந்தே தகிக்கும் கடும் வெய்யிலை சகித்துக்கொண்டு இளையராஜாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

விழா 7.45 மணிக்கு இனிதாகத் தொடங்கியது. இனிது என்றால் பேச்சுக்குச் சொல்லவில்லை; என்.கே.எஸ் நடராஜன் குழுவினர் நாதஸ்வர இசை, காற்றில் கலந்திருந்த வெப்பத்தைக் கிழித்துக்கொண்டு, செவி வழியே உடலுக்குள் பாய்ந்த அந்த இசை வெளியேறுவதற்குள்ளாக, ராஜாவின் ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ’ என்ற பாடல், வியர்வையில் காய்ந்திருந்த மக்களைக் குளிர்வித்தது.

காலங்கள் மாறினாலும் அசையாமல் நிற்கும் இசை சாம்ராஜ்யத்தை கட்டமைக்க உருவான பாடல்கள் வரிசையாக ஒலிக்கப்பட்டன. ரசிகர்கள் இல்லாமல் தனது இசை இல்லை என்பதை உணர்த்தும் வகையில், ரசிகர்களை கைதட்ட வைத்து ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடலை புதுவிதமாக உருவாக்கி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். இந்த நிகழ்விலேயே ஹைலைட்டான விஷயம் என்றால் அது இளையராஜா தனது இசையின் சக்தியை நேரடியாக ரசிகர்களுக்கு உணர்த்தியது தான்.

மௌனராகம் உள்ளிட்ட சில திரைப்படங்களின் காட்சிகளை இசையின்றி வீடியோவாக ஒளிபரப்பிவிட்டு, பின்னர் அங்கேயே பின்னணி இசையை வாசிக்க வைத்துக் காட்டினார். கைதட்டல்களும், ஆ.... என்ற ஆச்சர்யமும் விண்ணைப் பிளந்தன. இதனிடையே, எஸ்.பி.பி-கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பாடகர்களின் குரலில் இளையராஜா உருவாக்கிய ஹிட் பாடல்கள் பாடப்பட்டன. ஆனால், அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது எஸ்.பி.பி-கே.ஜே.யேசுதாஸ் இணைந்து பாடிய ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ பாடல் தான்.

காப்பிரைட் பிரச்சினையில் ஏற்பட்ட இளையராஜாவுடனான மனக்கசப்புக்குப் பிறகு, அவருடன் இணைந்து எஸ்.பி.பி மேடைகாணும் முதல் நிகழ்வு என்பதால், ‘போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு’ என்ற வரிகளின்போது விழா அரங்கம் முழுவதும் ஆட்டம் கண்டது. இந்தப் பாடலுக்கு நடனமாட கலைஞர்கள் யாரும் மேடையில் இல்லை. ஆனால், அங்கு கூடியிருந்த இசை ரசிகர்கள் ஆடினர்; மேடை ஆடியது; அந்த வானம் ஆடியது; ஏன், இந்த பூமியும் ஒரு நிமிடம் ஆடியிருக்கும்.

இப்படி இளையராஜா உருவாக்கிய இசையைக் கேட்டு மனமுருகிக்கொண்டே இருந்தால், உண்ண உணவு தேவையில்லை; தாகத்துக்கு நீர் தேவையில்லை; பணம் சம்பாதிக்கவேண்டிய அவசியமும் இல்லை என்று உணர்ச்சி மிகுதியில் நாம் எழுதலாம். ஆனால், அந்த விஷயம் இளையராஜாவுக்குத் தெரிந்துவிடக்கூடாது. ஆம், காரணம் என்னவென்றால் ‘என் இசையில் தானே நீங்க வாழ்றீங்க. உங்களுக்காக 5 மணி நேரம் நான் நிக்கிறேன். இவர் வந்து தாகத்துக்கு தண்ணி கொடுத்து உங்களை தொந்தரவு பண்றார்’ என இளையராஜா கேட்டுவிடுவார். அந்த நிகழ்ச்சியிலும் அப்படித்தான் கேட்டார்.

மேடை அருகே இருந்த ஒருவர், தாகத்துக்கு தண்ணீர் கேட்டதால், அங்கிருந்த ஊழியர் ஒருவர் தண்ணீர் பாட்டில் கொடுத்திருக்கிறார். அவரைப் பிடித்துக்கொண்ட இளையராஜா அவரை வசைபாடியதுடன், தண்ணீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் எனக்காக 2 மணியிலிருந்து காத்திருக்கும் ரசிகர்கள், என் இசையைக் கேட்கவிடாமல் செய்கிறாயே என்று காட்டமாகப் பேசினார். அத்துடன் 500, 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியவர்கள் பத்தாயிரம் டிக்கெட் வரிசையில் உட்கார்ந்ததால், அதிக பணம் கொடுத்தவர்களுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது என்றும் குறைபட்டுக்கொண்டார். “தாகமே எடுக்காமல் 6 மணிநேரம் உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்க்குமளவுக்கு ஆர்வம் இருக்கும் எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் டிக்கெட் வரிசையில், மேடைக்கு அருகில் உட்கார்ந்து உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதும் இயல்பு தானே இசையரசரே” என்று கமெண்ட் அடித்துக்கொண்டே நிகழ்ச்சியை முழுதும் பார்த்துவிட்டுச் சென்றனர் அந்த சாமானிய மக்கள்.

.

மேலும் படிக்க

.

.

ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!

.

கழற்றிவிடப்படுகிறதோ தமிழகம்?

.

ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக

.

ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்

.

கேட்பது அவனது கீதமே! பறப்பதும் அவன் ஏற்றிய கொடியே!

.

.

திங்கள், 3 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon