மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 ஜுன் 2019

திரை தரிசனம்: 24 ஃப்ரேம்ஸ்

திரை தரிசனம்: 24 ஃப்ரேம்ஸ்

யதார்த்தத்தின் மீது கியரோஸ்தமி திரட்டும் 24 கேள்விகள்!

ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற பைபிளின் முதல் வாசகத்தைப்போல, ‘நான் எப்போதுமே ஆச்சரியப்படுவது என்னவெனில், ஒரு கலைஞன் ஒரு காட்சியின் யதார்த்தத்தை சித்தரிக்க எந்த அளவுக்குச் செல்ல முடியும் என்பதுதான். ஓவியர்கள் யதார்த்தத்தை ஒரே ஒரு சட்டகத்தில் கைப்பற்றுகிறார்கள், அதற்கு முன்னும் பின்னும் எதுவும் இல்லை’ எனப் படத்தின் இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமியின் வாசகத்திலிருந்து படம் துவங்குகிறது.

ஃப்ரேம் 1: பீட்டர் புரூகலின் ‘ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ’ ஓவியம். ஓவியத்திலுள்ள புகைக் கூண்டுகள் வழியாகப் புகை கக்கத் தொடங்க மரத்திலிருக்கும் காக்கைகள் குரல் எழுப்புகின்றன. பனி, ஓவியத்தின் உலகத்திற்குள் விழத் தொடங்குகிறது. அதன் பின் ஓவியத்திலிருக்கும் விலங்கினங்கள் ஒவ்வொன்றாக உயிர்பெற்று, ஒலியெழுப்பி, அசைந்து நடக்கத் தொடங்குகின்றன. உலகம் பிறக்கிறது. மாடுகள் கூட்டம் ஓவியத்தைக் கடந்து செல்ல திரை மெல்ல இருண்டு, ஃப்ரேம் 2 என அடுத்த உலகம் நம் முன் விரியத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ரேம் 24 வரை இவ்வாறே பயணிக்கிறது இத்திரைப்படம்.

2016ஆம் ஆண்டு மறைந்த ஈரானிய சினிமாவின் ஆளுமையான அப்பாஸ் கியரோஸ்தமி இந்த உலகத்துக்கு விட்டுச் சென்ற கடைசி புன்னகையான இந்தப் படம் மொத்தம் 24 ஃப்ரேம்களை மட்டுமே கொண்டது. ஒவ்வொரு ஃப்ரேமும் நான்கரை நிமிடங்களைக் கால அளவாகக் கொண்டு பிரபல ஓவியம், பயணங்களின் வழியே கியரோஸ்தமி எடுத்த புகைப்படங்கள் மற்றும் அசையும் காட்சிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதுவரை நாம் புரிந்து கொண்ட சினிமா என்ற கலையின் மீதான அனைத்துக் கற்பிதங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது இப்படைப்பு.

ஒவ்வொரு ஃப்ரேமும் தொடங்கி முடியும்போது, நாடக அரங்கின் திரைகள் மூடி, இருளுக்குப் பின் திறக்கும் புது உலகம் போலவே ஒவ்வொரு காட்சியும் தோன்றி மறைகின்றன. 24 ஃப்ரேம்களில், ஒரு ஃப்ரேம் ஒரு காட்சி. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பில்லை. உலகில் மனித உயிர்களின் இருப்பைப் பிரதிபலிக்கும் விதமாக மனிதர்கள் மொத்தம் இரண்டு காட்சிகளில் மட்டுமே வருகிறார்கள்.

சினிமா கதை மட்டுமே சொல்லும் கருவியல்ல என்பதை எளிமையாகச் சாத்தியப்படுத்தியிருக்கும் இப்படத்தில், பார்வையாளனாக முன்வந்து வலுக்கட்டாயமாக இலக்கணங்களை வகைமைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கும் படத்திலேயே பதிலிருக்கிறது. இயக்குநர் தேர்ந்தெடுத்திருக்கும் சட்டகத்தின் அளவுதான் நிலம் / கதை. அந்த நிலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கேட்கும் சப்தங்கள்தான் இசை. வந்து செல்லும் பறவைகள், விலங்குகள், மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள். சட்டகத்திற்குள்ளிருக்கும் பருவ நிலைதான் கதைக்கான டிராமா. திரை ஓடும் தருணத்தில் நமக்குள் ஏற்படும் உரையாடல்தான் வசனங்கள். இயற்கையின் அசைவுதான் திரைக்கதை.

ஒவ்வொரு காட்சியிலும் நம் அனுபவத்தின் ஆழம் எவ்வளவோ, அவ்வளவு தூரம் ஆழமாய் பயணிக்க முடியும். நிஜத்தில் நாமே நேரில் நின்று பார்ப்பதைப் போன்ற அனுபவத்தைக் கொடுப்பதன் மூலம் நம் அனைவரையும் பயணியாக மாற்றிவிடுகிறார் இயக்குநர். இயற்கையின் சீற்றம், ஒரு வெளிக்குள் மனிதன் ஏற்படுத்தும் (உருவமாய் தோன்றாமலே) தொந்தரவு, உயிரினங்களின் இருத்தலியல், அனைத்தும் ஒருங்கிணைந்த ஒத்திசைவு என நேரிடையாகவும், மறைமுகமாகவும் பலவற்றைப் பதிவு செய்கிறார் கியரோஸ்தமி.

ஒரு சில காட்சிகளில் போர்களின் வரலாற்று நினைவுகள் தோன்றி மறைகின்றன. பிரபஞ்சத்தின் மனசாட்சி போல கேமரா அசைவற்றிருக்கிறது. நிலைத்திருக்கும் ஆன்மா அவலத்தின் ஓலத்தைக் கண்காணிப்பதைப் போல அசைவற்று ஒவ்வொரு உள், வெளி அரங்கிலும் அமர்ந்து, அது பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் அதுவாகவே ஆகிறோம்.

படம் பார்க்கும் அனுபவத்தின் மையத்திற்குள்ளிருந்து யதார்த்தம் மீது நமக்குள் எழும் கேள்வியைத்தான் கியரோஸ்தமி தனது ஒட்டுமொத்தத் திரைவாழ்விலும் கடந்து வந்திருக்கிறார். ஊன்றி அவதானித்தால் தற்கணத்தில் நிகழும் அனைத்துமே ஒரு கதை தொடங்குவதைப் போல அதற்கு முன்பும் வாழ்விருந்தது, அதற்குப் பின்பும் வாழ்வு இருக்கப்போகிறது என்ற உண்மையை 24 ஃப்ரேம்ஸ் தருகிறது.

முற்றிலும் புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் 24 ஃப்ரேம்ஸ், நம் வாழ்வில் மிக அரிதான சினிமா அனுபவத்தைத் தரும் முக்கியமான படைப்புகளுள் ஒன்றாக மாறும். உயர்ந்த நோக்கம் கொண்ட படைப்பைத் தரிசித்தலென்பது, கலங்கலான நீரில் தெளிவான நீர் ஓடிவந்து சுத்தப்படுத்துவதைப் போல.

நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

அவ் ஹசர்ட் பேல்தஸார்

துவிதா: பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை!

பேலட் ஆப் நரயாமா

.

மேலும் படிக்க

.

.

ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக

.

ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்

.

நமக்காக யாரும் பேசவில்லை: தினகரனிடம் முறையீடு!

.

திட்டமிட்டு பழிவாங்கிட்டீங்க: அமைச்சரிடம் ராமதாஸ் ஆவேசம்!

.

நாங்க கேட்டது மூன்று, அவர்களோ?: அமைச்சர்!

.

.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 3 ஜுன் 2019