மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்

ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 30ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. அப்போது கூட்டணி சார்பில் கட்சிக்கு ஒருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பாஜக கூட்டணியின் முக்கிய கட்சியான அதிமுக சார்பில் அமைச்சர் பதவியைப் பிடிக்க தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் என இருவருக்குமிடையே போட்டி நிலவியது. ஆனால், இருவருக்குமே கிடைக்கவில்லை.

அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து வருத்தத்தைத் தனக்கு நெருக்கமான டெல்டா பகுதி அதிமுக நிர்வாகிகளிடம் வைத்திலிங்கம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரவையில் அதிமுக இரண்டு இடங்களை எதிர்பார்த்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் அனைவருக்கும் ஓர் இடம்தான் ஒதுக்குகிறோம். உங்களுக்கும் ஓர் இடம்தான் அளிக்க முடிவெடுத்திருக்கிறோம். அது யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்ற செய்தி பாஜக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பன்னீர்செல்வம், ‘அம்மா உயிருடன் இருந்தபோது நடந்த மக்களவைத் தேர்தலில் நாம் 37 இடங்களில் வெற்றிபெற்றோம். இப்போ எல்லா இடத்திலும் தோல்வியைத் தழுவினாலும், தேனியில் வெற்றிபெற்றதன் மூலம் அதிமுக ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்று கூற்றுக்கு இடம்தராதபடி செய்திருக்கிறான் என்னுடைய மகன். அதிமுகவின் மானத்தைக் காப்பாற்றிய என் மகனுக்குத்தான் மந்திரி பதவி கொடுக்க வேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். தொடர்ந்து ரவீந்திரநாத் அமைச்சராகப் போகிறார் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதையறிந்த வைத்திலிங்கம் அமைச்சரவைப் பதவியேற்புக்கு முந்தைய தினம் (மே 29) மாலை சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்றார். அவரிடம், ‘கடந்த ஆட்சிக் காலத்துல அம்மா என்னை எந்த இடத்துல வெச்சிருந்தாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். போன எலெக்‌ஷன்ல நான் ஜெயிச்சிருந்தா நிச்சயம் அமைச்சர் ஆகியிருப்பேன். ஏன் சசிகலாகிட்ட எனக்கு இருந்த செல்வாக்குக்கு முதல்வரா கூட ஆகியிருப்பேன். ஆனால், என்னோட வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்ட உட்கட்சி எதிரிங்க எனக்கு எதிரா சதி செஞ்சு தோக்கடிச்சுட்டாங்க.

ஆனாலும் தோத்தவங்ககிட்ட இருந்த கட்சிப் பதவியை பறிச்ச மாதிரி என்னை பதவியை விட்டு நீக்கலை. இன்னும் சொல்லப்போனா எனக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், தோத்த உடனே மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுத்தாங்க. இப்ப எனக்கே மந்திரி பதவி இல்லன்னு சொல்றீங்களா’ என்று கோபமாக சொல்லிவிட்டு விருட்டென வெளியே கிளம்பியிருக்கிறார்.

அவரை எடப்பாடி சமாதானப்படுத்தி அமரவைத்திருக்கிறார்.

“டெல்டா மாவட்டங்கள்ல 15 பேருக்கு மேல நான் சொன்னவங்களுக்குத்தான் அம்மா சீட் கொடுத்தாங்க. அவங்கள்லாம் என் பின்னாடி எப்ப வேணாலும் வர்றதுக்கு ரெடியா இருக்காங்க. 3 வருடங்களாக பதவி ஏதும் இல்லாததால என்ன நம்பி இருக்குறவங்களுக்கு என்னால ஏதுவும் செய்ய முடியல. அதுவும் இல்லாம டெல்டா பக்கத்துல பெரிய அளவுல யாருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. அதனால் டெல்டாவோட பிரதிநிதியா எனக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்கணும்” என்று சொல்லியிருக்கிறார் வைத்திலிங்கம்.

அவரிடம் பன்னீர் சொன்னதை எடப்பாடி சொல்ல, அதனைக் கேட்டு கோபமானவர், ‘மானத்தக் காப்பாத்துனாருன்னா மந்திரி பதவி வேணுமா? ஏற்கனவே அவரு துணை முதலமைச்சரு, கட்சியோட ஒருங்கிணைப்பாளரா இருக்காரு. இப்ப அவரோட மகன் மத்திய அமைச்சரானார்னா ஒரே குடும்பத்துல எத்தனை பேருக்கு பதவி. கட்சிக்காக உழைப்பவனுக்கு பதவியைக் கொடுங்க. வேணும்னா ஆட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டுங்க. அங்க நாமெல்லாம்தானே உறுப்பினரா இருக்கோம்ல. பேசி ஒரு முடிவெடுப்போம்” என்று காட்டமாக சொல்லியிருக்கிறார்.

இதனால் யாருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தாலும் தற்போது பிரச்சினைதான் வரும் எனக் கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கு கொஞ்சம் சிக்கல் போயிட்டு இருக்கு. அதனால் இப்ப அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வேண்டாம். நாங்க ஒரு முடிவு பண்ணிட்டு உங்ககிட்ட சொல்றோம் என்று பாஜகவுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்.

இருந்தாலும் வைத்திலிங்கத்துக்கு இன்னும் கோபம் தீர்ந்தபாடில்லை. அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம், “இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவு பாடுபட்டிருப்பேன். என் பின்னால 15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. இப்ப சொன்னாக்கூட என் பின்னால வர்றதுக்கு அவங்க தயாரா இருக்காங்க. ஆனால் ஆட்சி நிலைக்கணும் என்கிறதுக்காகத்தான் நான் அமைதியா இருந்தேன். அதுமட்டுமில்லாம சசிகலாவை என்னைவிட்ட விமர்சிக்க வெச்சாங்க. எல்லாத்துக்கும் பயன்படுத்திக்கிட்டு இப்ப அமைச்சர் பதவினு வந்தவுடனே கையைக் கழுவப் பாக்குறாங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவெடுத்தே ஆகணும்” என்றிருக்கிறார். விரைவில் இதுதொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம் ஆலோசனையும் நடத்த இருக்கிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்

.

விமர்சனம்: என்ஜிகே

.

மவுனம் கலைத்த ராகுல்

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

.

ஞாயிறு, 2 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon