மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

விமர்சனம்: என்ஜிகே

விமர்சனம்: என்ஜிகே

நந்த கோபால குமரன் என்ஜிகே ஆக மாறும் கதை!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங், இளவரசு, நிழல்கள் ரவி, பாலா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு: பிரவீன் கே.எல், கலை: விஜய் முருகன்.

நன்கு படித்த இளைஞனான நந்த கோபால குமரன் (சூர்யா) தன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்கானிக் விவசாயம், சமூக சேவைகள் எனத் தன் மனைவி (சாய் பல்லவி) மற்றும் குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்துவருகிறான். அந்த ஊர் இளைஞர்களும் சூர்யாவின் வழியில் வாழ்கிறார்கள். ஆர்கானிக் விவசாயத்தால் பாதிக்கப்படும் கந்துவட்டி வியாபாரிகள் குமரன் மற்றும் அவரது நண்பர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கிறார்கள். அரசியல் மீது விருப்பமில்லாத குமரன் வேறு வழியில்லாமல் எம்.எல்.ஏ. (இளவரசு) உதவியை நாடுகிறான். தேர்தல் சமயமென்பதால் உதவிக்குக் கைமாறாக இளைஞர்களுடன் கட்சியில் சேர அழைக்கிறார் எம்.எல்.ஏ. வேறு வழியின்றி குமரன் ஒப்புக்கொள்ள, ஆட்டம் ஆரம்பமாகிறது. நந்த கோபால குமரன் என்ற அடிப்படைத் தொண்டன் என்ஜிகே என்ற அடையாளமாக மாறும் அரசியல் பயணமே செல்வராகவனின் என்ஜிகே.

மாஸ் ஹீரோவும் கிளாஸ் டைரக்டரும் ஒரு படத்தில் இணையும்போது என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அவையனைத்துமே என்ஜிகேவிலும் உண்டு. சூர்யாவிற்காக செல்வராகவனும் செல்வாவுக்காக சூர்யாவும் மாறியிருக்கிறார்கள்.

சூர்யா என்ற ஒற்றை முகம் திரையை நிரப்புகிறது. செல்வராகவன் படங்களில் மையமாக ஆண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களை நகர்த்துவது பெண் கதாபாத்திரங்கள்தான். அப்படியான பாத்திரங்கள்தான் செல்வாவின் தனித்துவமாக இன்றும் கொண்டாடப்படுகின்றன. இந்தப் படத்திலும் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது கதாபாத்திரங்களை வலிமையோடு படைத்து இது வெறும் ஹீரோவுக்கான படம் மட்டுமல்ல என்பதைக் காட்டியுள்ளார் செல்வராகவன்.

செல்வாவின் டிரேட்மார்க்கான அழுத்தமான திரைமொழி, தேர்ந்த ஒளிப்பதிவு, யுவனின் பின்னணியிசை, நடிகர்கள் தேர்வு, இதனை ஒருங்கிணைத்த தயாரிப்பு என அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன.

நாட்டின் தலையெழுத்தைப் புதிதாக மாற்றப் புறப்படும் இளைஞனின் கதையைச் சொல்லும் படத்தில், திரைக்கதை நேர்த்தியாக இருந்தாலும் புதுமையாக இல்லை என்பதுதான் குறை. கட்சிகளின் போக்குகளையும் வியூகங்களையும், ஏன், தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் தனியார் மக்கள் தொடர்பு நிறுவனங்களின் இருப்பைத் திரைக்கதைக்குள் கொண்டுவந்தது சமகால அரசியல் புரிதலை உணர்த்துகிறது. நடந்து முடிந்த தேர்தல் காட்சிகள் படம் முழுக்க நம் கண் முன் ரீவைண்டு ஆகின்றன. சமகால அரசியல் எந்தத் திசையை நோக்கி நகர்கிறது என்பதற்கான சாட்சியாக இந்தப் படம் உள்ளது.

சூர்யா படத்திற்குப் பெரிய பலம். நமக்குள் இருக்கும் தார்மிகக் கோபத்தையே நம் கண் முன் கொண்டுவருகிறார். பல விதமான பாவங்களை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரத்தில் நவரசங்களையும் காட்டி அசத்துகிஒறார். சாய் பல்லவி சூர்யாவின் மனைவியாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ரகுல் பிரீத் சிங்கை முதன் முதலாகப் பார்க்கும்போது நிகழ்த்தும் உரையாடல் அட்டகாசம். பாசம் மிகுந்த மாமியாரிடம் தன் சிக்கலைப் பகிர்ந்துகொள்ளும்போது வார்த்தையில் ஒன்றும் பார்வையில் ஒன்றுமாகத் தன் தத்தளிப்பை வெளிப்படுத்தும் காட்சி அற்புதம். சூர்யாவிடம் தன் உரிமைக்காகவும், தன் சந்தேகம் சரியானதுதான் என்ற முறையில் பதிலை வாங்க அவர் நடத்தும் நாடகமும் அதன் பின் சட்டென மாறும் அவரது மனநிலையும் ரசிக்க வைக்கின்றன.

சூர்யாவிற்கும் ரகுல் பிரீத் சிங்கிற்கும் என்ன உறவு என வெளிப்படையாகக் கூறாமல் பார்வையாளரின் கற்பனைக்கே விட்டுவிட்டது அழகு. மற்ற கதாபாத்திரங்களில் அனைவரும் தங்கள் பணியைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் நீளம் பெரிய மைனஸ். சில காட்சிகளில் ஏற்படும் தொய்வையும் தவிர்த்திருக்கலாம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை நன்றாக வந்துள்ளது. படம் நீளமாக இருந்தும் கண்கள் திரையை விட்டு அகலாமலும், உறுத்தாமலும் இருந்ததிற்கு வண்ணங்களையும் அசைவுகளையும் ஒளிப்பதிவாளர் பயன்படுத்திய விதமே காரணம். அவரது உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும். கலை, சண்டைப் பயிற்சி ஆகிய துறைகளில் சிறப்பான பணிகளைச் செய்திருக்கின்றனர்.

செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் தன்னுடைய திரைமொழியில் வலிமையாகவே மெருகேறியிருக்கிறார்.

அரசியலுக்கு வரும் படித்த இளைஞர்கள் பற்றிய சினிமாவை செல்வராகவன் தன் கைப்பக்குவத்தில் தந்திருக்கிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

சனி 1 ஜுன் 2019