மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 மே 2019

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர்  நெருக்கடி!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப், ‘இன்று நான் லீவு. எனக்கு பதிலாக ஃபேஸ்புக் மெசேஜ் அனுப்பும்’ என்று குறுஞ்செய்தி அனுப்ப, கொஞ்ச நேரத்தில் ஃபேஸ்புக் மெசேஞ்சரில் செய்தியை அனுப்பியது.

“மத்திய அமைச்சரவையில் யாருக்கு அமைச்சர் பதவி கேட்பது என்ற பிரச்சினையில் யாருக்குமே அமைச்சர் பதவி வாங்காமல் சென்னைக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு வழங்க பாஜக முன் வந்த நிலையில், தன் மகனுக்கு அதை கிடைக்க விடாமல் எடப்பாடி டெல்லியில் கேம் ஆடிவிட்டார் என்று பன்னீர் கடும் கோபத்தில் இருக்கிறார். அந்த நெருக்கடிக்கிடையே சென்னை வந்த எடப்பாடிக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது.

எதிர்வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் இருந்து தேர்வாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவுக்கு கிடைக்க இருக்கும் நிலையில், அவர்களைத் தேர்வு செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது.

பாமகவோடு கூட்டணி ஒப்பந்தம் போட்டபோதே ஏழு மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி என்று எழுதி இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அதன்படி பாமக இப்போது ராஜ்யசபாவை தர்மபுரியில் தோற்ற அன்புமணிக்காக கேட்கிறது. தேமுதிக சார்பில், ‘பாமகவுக்கு கொடுத்தால் எங்களுக்கும் ராஜ்யசபா கொடுத்தாக வேண்டும். எங்கள் கட்சிக்கு கௌரவ பிரச்சனை’ என்று முதல்வரிடம் பேசியிருக்கிறார் பிரேமலதா.

ஆனால் பாமக, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை தூக்கிக் கொடுப்பதற்கு அதிமுகவில் குறிப்பாக வன்னியர் பிரமுகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பாமகவால் சட்டமன்றத் தொகுதிகள் சிலவற்றில் வாக்குகள் கிடைத்ததே தவிர, மற்றபடி அதிமுகவுக்கு பெரிய அளவு உபயோகம் இல்லை. தேமுதிகவால் அதுவும் நமக்கு இல்லை. இந்த நிலையில் சுமார் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அடுத்த கட்சிகளுக்குக் கொடுத்து எம்பி ஆக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இப்போதே முதல்வரை வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பாமகவுக்குப் போக இருக்கும் சீட்டை தாங்கள் பெறத்தான் மேற்கண்ட இருவரும் கடுமையாக முயல்கிறார்கள்.

அமைச்சர் சி.வி. சண்முகம் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட எடப்பாடியிடம் வாய்ப்பு கேட்டார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ராஜ்யசபா எம்.பி, பதவி கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டதால்தான் மக்களவைத் தேர்தலில் சீட் வாங்காமல் சமாதானம் ஆகியிருக்கிறார் சி.வி. சண்முகம். இப்போது அந்த ராஜ்யசபா சீட்டை தன் அண்ணனுக்காக கேட்கிறார் சி.வி. சண்முகம் என்கிறார்கள் அமைச்சர் ஆதரவாளர்கள். அதிமுகவில் கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீரிடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

முதல்வர் வீட்டிலேயே தவமிருந்துவரும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தன்னை கவனிக்குமாறு முதல்வரிடம் மல்லுக்கட்டி வருகிறாராம். போதாக்குறைக்கு அன்வர்ராஜா, ராஜ் சத்யன், கோகுல இந்திரா, மனோஜ் பாண்டியனும் ராஜ்யசபா பதவிக்கு அடம்பிடித்து வருகிறார்கள். முதல்வரோடு நெருக்கமாக இருக்கும் தம்பிதுரையும் தனக்கு ராஜ்யசபா வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இவர்கள் எல்லாம் தனிப்பட்ட சந்திப்பு, பேச்சு ஆகியவற்றின் மூலம் ராஜ்யசபா வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மிஞ்சி முன்னாள் ராமநாதபுரம் எம்.பி.யான அன்வர் ராஜா தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் எழுதிவிட்டார். மே 29 ஆம் தேதி அவர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், சில விஷயங்களை விரிவாகவே முன் வைத்துள்ளார் அன்வர் ராஜா.

‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்க நீங்கள் தீர்மானம் செய்திருந்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் அது நமது கூட்டணியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, ஆகிய தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், யாதவர்கள், ஏனைய வகுப்பினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் முக்குலத்தோரில் அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த அன்பழகன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மலைச்சாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிறைகுளத்தான், யாதவர் வகுப்பைச் சேர்ந்த கோகுல இந்திரா, ஆகியோருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிற ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கு நம் கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே வருகிற ஜூன் மாத இறுதியில் வருகிற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தன் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் அன்வர் ராஜா.

மேலும், ’ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஃபதர் சயீதை மக்களவைத் தேர்தலில் நிறுத்தினார். ஆனால் பாஜக கூட்டணி என்பதால் முஸ்லிமுக்கே வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்தீர்கள். அதனால் ராஜ்யசபாவை நிச்சயம் எனக்கே வழங்க வேண்டும். இனியும் முஸ்லிம்களை புறக்கணித்தால் உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை மோசமாகிவிடும்’ என்று கூறி தனக்கு ராஜ்ய சபா வேண்டும் என பலமாய் முயற்சி செய்கிறார் அன்வர் ராஜா.

இருப்பதோ மூன்று சீட். அதில் பாமக ஒன்று கேட்கிறது. ஒருவேளை பாஜக கூட தங்களது தமிழக புள்ளிகளுக்காக ஒரு ராஜ்யசபா கேட்கலாம். மிச்சம் இருப்பதோ ஒரே ஒரு சீட். பாஜகவை சமாளிப்பதா, பாமகவை சமாளிப்பதா, அதிமுகவின் சீனியர்களை சமாளிப்பதா என்று கடுமையான நெருக்கடியில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ராஜ்யசபா சீட் கேட்கும் பலரும் ஓ.பன்னீரிடம் செல்லாமல் தன்னிடமே வந்து வேண்டுகோள் வைப்பது மட்டும்தான்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது மெசேஞ்சர்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

மத்திய அமைச்சரவையில் தமிழகம்: மற்ற ஊடகங்களும் மின்னம்பலமும்!

.

.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 31 மே 2019