மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 மே 2019

பதின்ம வயதினரின் மன உளைச்சல்!

பதின்ம வயதினரின் மன உளைச்சல்!

சமூக வலைதளங்களும் நாமும் – 7: நவீனா

சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் அவளது தங்கையைச் சந்திக்க நேர்ந்தது. அவளது நெற்றியில் இருந்த சிறு வீக்கத்தைப் பற்றித் தோழியிடம் விசாரித்தபோது, 'அத ஏன்டி கேக்கறே, மொபைல்ல வாட்ஸ் அப் பாத்துட்டே போய் லேம்ப் போஸ்ட்ல இடிச்சிட்டு வந்துட்டா. இதோடு இவ இப்படி இடிச்சிட்டு வர்றது அஞ்சாவது தடவ. ரோட்டில நடக்கும் வாட்ஸ் அப் பாக்காதேன்னு எத்தனை தடவ சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா' என்றாள்.

பதின்ம வயதினரிடம் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சற்று அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. சமூக வலைதளங்களை இவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் காரணத்தினாலேயே, அமெரிக்க உளவியல் அமைப்பான அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோசியேஷன், இவர்களை அதிக மன உளைச்சலுக்குள்ளான தலைமுறை என்று குறிப்பிடுகிறது.

பெரும்பாலான பதின்ம வயதினரின் நாட்கள் இவ்வாறே தொடங்குகின்றன: காலையில் எழுந்து அறை விளக்கின் ஸ்விட்சை ஆன் செய்வதற்கு முன்னமே, கையில் மொபைலை எடுத்து, தனது சமூக வலைத்தளக் கணக்குகளைத் திறந்து, லைக்குகள், கமெண்ட்டுகளை இட ஆரம்பித்துவிடுகிறார்கள். சராசரியாக ஒரு பதின்ம வயதினருக்குக் குறைந்தபட்சம் ஐந்து சமூக வலைதளக் கணக்குகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் நாளொன்றுக்குச் சராசரியாக குறைந்தபட்சம் 14 நிமிடங்கள் வரை ஒரு கணக்கிற்காக மட்டும் பதின்ம வயதினர் ஒருவர் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது.

படத்தைப் பதிவேற்றுதல் என்னும் பெரும்பணி

பதின்ம வயதினர் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் பக்கம் பக்கமாகக் கருத்துகளை எழுதிப் பதிவேற்றுவது கிடையாது. அவர்கள் புகைப்படங்களைப் பதிவிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு புகைப்படங்களைப் பதிவேற்றுவதும் மிக நீண்ட செயல்முறைதான். அதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கின்றனர். எடுத்த புகைப்படங்களை கிராப் செய்வது, ஃபில்டர் செய்வது, பின்பு எடிட் செய்வது என்று புகைப்படத்தைத் தயார் செய்வது முதல் வேலை. அந்த இடுகையில் எழுதப்பட வேண்டிய கேப்ஷனைத் தீர்மானிப்பது இரண்டாவது வேலை. கேப்ஷனுக்காக மட்டுமே ஒரு மணிநேரம் செலவிடக்கூடிய பதின்ம வயதினரும் இருக்கிறார்கள். இவ்வளவும் செய்து பதிவேற்றிய பின்னர் அந்தப் புகைப்படத்துக்கு அவர்கள் எதிர்பார்த்த லைக்குகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலர் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து, புகைப்படத்திற்கு லைக் இடவும், கமெண்ட் செய்யவும் சொல்லிக் கேட்கவும் செய்கின்றனர்.

உண்மை இங்கே எடுபடாது

சமூக வலைதளங்களில் நட்பு வட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி அவர்களின் பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ளும்போது பதின்ம வயதினர் இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் செல்லும் இடங்கள், உண்ணும் உணவுகள், உடுத்தும் உடைகள் என மற்றவர்களின் பகட்டான வாழ்வைப் பார்த்து ஏங்கவும் ஆரம்பித்துவிடுகின்றனர். உண்மையில் சமூக வலைதளங்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தைச் சற்று மிகைப்படுத்தியே காட்டுகின்றனர். வீட்டிலிருந்தபடியே புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் இருப்பதாகக் கூறிப் பதிவேற்றுவது, பிற நண்பர்களின் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தன்னுடையது எனக் கூறிப் பதிவேற்றுவது போன்ற ஏமாற்று வேலைகளைக்கூட உண்மை என்று நம்பி பதின்ம வயதினர் பலர் மனம் வெதும்புகின்றனர்.

புதிதாக அறிமுகமாகும் எவரொருவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர்களது சமூக வலைதளக் கணக்குகளைத் துழாவிப் பார்ப்பதையே சிலர் வழக்கமாக வைத்திருப்பதால், பெரும்பாலான பதின்ம வயதினர், தன்னை எவரும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்ற அச்சத்திலேயே, தனது வாழ்க்கைத் தரத்தை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்கின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அணுகும் நிறுவனங்கள்கூட, அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை அவர்களுடைய சமூக வலைதளக் கணக்குகளைக் கொண்டே தீர்மானிக்கின்றன. இப்படிப்பட்ட காரணங்களால் சமூக வலைதளங்களில் பொய்யான பதிவுகள் இன்னும் தவிர்க்க முடியாதவையாகிவிடுகின்றன.

விடுபடுதல் பற்றிய அச்சம்

ஃபோமோ (FOMO) என்று சொல்லக்கூடிய ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் (Fear Of Missing Out) என்கிற அச்சமும் பதின்ம வயதினரை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அதாவது தன்னால் அறிந்துகொள்ளப்படாமல் செய்திகள் / புதிய போக்குகள் ஏதேனும் விடுபட்டுப் போகுமோ என்னும் அச்சம். புதிய ஃபேஷன்கள், பாடல்கள், திரைப்படங்கள் என பதின்ம வயதினர் அதிக ஆர்வம் காட்டக்கூடிய அத்தனை விஷயங்களிலும் அப்டேட்டாக இல்லாவிட்டால், இதுகூடத் தெரியலையா என நண்பர்கள் கேலி செய்வார்கள் என்ற காரணத்தினாலேயே சமூக வலைதளங்களை சதா சர்வ காலமும் உருட்டிக்கொண்டிருக்கும் பதின்ம வயதினரும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட பயமும் மன உளைச்சலும் அதிகரிக்கும்போது அவர்களுடைய மனநலம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.

சமூக வலைதளங்களில் காட்டப்படும் பெரும்பாலான வாழ்க்கை நிஜத்திலிருந்து மிகைப்படுத்தப்பட்டுள்ளதை உணர வேண்டும். அதேவேளையில், பதின்ம வயதினர் பிறருக்காக வாழ்வதைத் தவிர்த்துத் தனக்காக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பிறர் தன்னை எவ்வாறு மதிப்பிடுவார்கள் என்கிற பயத்தை விடுத்து இயல்பாக இருக்கும்போது வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தின்பால் அவர்களின் கவனம் திரும்ப வாய்ப்புகள் உள்ளது.

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தி எது?

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 30 மே 2019